திங்கள், 14 நவம்பர், 2011

குழந்தைகளுக்கு ஆனந்த சுதந்திரம் கொடுப்போம்...!

                    இன்று குழந்தைகள் தினம். இந்த நாள் என்பது இன்று ஒரு நாள் கொண்டாட்டமாக முடிந்துவிடக்கூடாது.  ஆண்டு முழுதும் அவர்கள் தினம் தான். ஆனால் இன்றைக்கு நம் வீடுகளில் என்ன நடக்கிறது ? குழந்தைகளுக்கு வந்த சோதனை என்ன..? பெற்றோர்களால் அவர்களின் சுதந்திரமான சிந்தனைகளும், விளையாடும் உரிமைகளும் மறுக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை.
              பெற்றோர்களின் ஆசை என்ற பேரால், குழந்தைகள்  அவர்களின் உண்மையான உரிமைகள் மறுக்கப்பட்டு, புத்தகத்துக்குள் சிறை வைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் உள்ளே தேங்கிக்கிடக்கும் அளவில்லாத திறமைகளும், அபரிதமான ஆற்றல்களும், இவைகளினால் ஏற்படும் வளர்ச்சிகளும் முடங்கிப் போய்விட்டன. 
             குழந்தைகளின் எண்ணங்கள், கற்பனைகள், ஆசைகள் என்னவென்று ஆராயாமல், பெற்றோர்களின் ஆசைபடி - அவர்களின் எதிர்பார்ப்புப்படி குழந்தைகளை மாற்ற நினைப்பது என்பது, குழந்தைகளின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிப்பதாகும். குழந்தைகள் என்ன கூண்டுக்குள்ளே அடைத்து வைத்து வளர்க்கப்படும் சோதனை எலிகளா...? 
            பெற்றோர்களின் இப்படிப்பட்ட பேராசைகளினால், குழந்தைகள் என்னென்னவெல்லாம் இழந்திருக்கிறார்கள்..? விளையாட்டுகள், மனித உறவுகள், நண்பர்கள், ஓய்வு நேரங்கள், சுதந்திரமான சிந்தனைகள், கற்பனைகள், ஆசைகள் - இவைகளைக் கொண்ட ஒரு கனவு உலகத்தையே தொலைத்திருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்...? குழந்தைப்பருவத்தில் இவைகள் அத்தனையையும் அனுபவித்துவிட்டு, கல்வியில் வேலைவாய்ப்பில் தங்களால் செய்யமுடியாத காரியங்களை எல்லாம்  தங்கள் குழந்தைகளின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைக்கும் பெற்றோர்கள் தான் இதற்கெல்லாம் காரணம் என்பது வெளிப்படையான உண்மை. 

                   தங்கள் குழந்தைகள் எல்லாப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கவேண்டும், முதல் இடத்தில் தேர்ச்சி பெறவேண்டும், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கவேண்டும், அதனால் குழந்தைகள் புத்தகப்ப்ழுவாகவே மாறவேண்டும்  - போன்ற பெற்றோர்களின் கண்டிப்பான திணிப்பால் இன்று குழந்தைகளின் நியாயமான ஓய்வு நேரமும், விளையாட்டு நேரமும் ஓடி ஒளிந்துவிட்டன.
                   வீட்டில் தான்  இப்படி என்றால், குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இன்றுக் கல்வி வியாரமயமானதால், கட்டணக் கொள்ளைக்காக தங்கள் பள்ளி முதன்மை பெறவேண்டும் என்ற பேராசைகளினால் பள்ளி நிர்வாகமும் குழந்தைகளின் விளையாட்டு நேரத்தை ஒழித்துக்கட்டி விட்டனர். பள்ளி அட்டவணைகளில் விளையாட்டு நேரம் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த நேரத்தை ஏதோ ஒரு பாட வகுப்பு கட்டாயமாக பிடுங்கியிருக்கும் என்பது தான் கொடுமையான விஷயமாகும். 
              குழந்தைகளோடு கூடி விளையாடிய விளையாட்டுகளான - கபடி, நொண்டி விளையாடுதல், கண்ணாம்பூச்சி, கோகோ, பல்லாங்குழி, சுங்குரக்காய், கோலி விளையாடுதல், கில்லி - கிட்டிப்புள் - அப்பப்பா எத்தனை விளையாட்டுகள். இவைகள் அத்தனையும் குழந்தைகளுக்கு உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுத்தன. இன்று இது போல் விளையாட்டுகள் எல்லாம்  இல்லாது போனதால், குழந்தைகளோடு இயற்கையாகவே வளர்ந்து வரும் சுயசிந்தனை, சுயமாக முடிவெடுக்கும்  ஆற்றல், தைரியம் போன்றவைகள் எல்லாம் அவர்களுக்குள்ளேயே அழிந்து போய்விட்டன.
                         இன்று பள்ளிகளிலும், நாம் வாழும் இடங்களிலும் குழந்தைகள் சுதந்திரமாக ஓடித்திரிந்து விளையாடுவதற்கு தேவையான விளையாட்டுத் திடல், பூங்கா, நீர்நிலைகள், திறந்தவெளிகள் ஆகியன  காணாமல் போய்விட்டன என்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயமாகும்.            
         அனால் இன்றோ குழந்தைகள் சுதந்திரமாய் விளையாடாததால், மன அழுத்தம்  ( Mental Depression ), ஒற்றைத் தலைவலி ( Migraine ), மன  உளைச்சல் போன்ற மன ரீதியான நோய்களுக்கு குழந்தைகள் இரையாகிறார்கள் என்பதும் உண்மை.   
               இது அவர்களது பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட விஷயம்  அல்ல. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம்,  சமூக உறவு, கூட்டுச் செயல்பாடு, சிந்தனையாற்றல், கற்பனைத் திறன்  உள்ளிட்ட வருங்காலத் தலைமுறை வளர்ச்சி சம்பந்தப்பட்ட - அவர்களின் ஒளிமயமான எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். . குழந்தைகளுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய ஓய்வு நேரத்தையும், விளையாட்டு நேரத்தையும், அற்புதமான விளையாட்டுகளையும்,  விளையாட்டு இடங்களையும்  அவர்களிடமே மீட்டுத்தருவோம்.         இது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை மட்டுமல்ல. அரசின் கடமையும் ஆகும்.
                         குழந்தைகளுக்கு ஆனந்த சுதந்திரம் கொடுப்போம்... குழந்தைகளைக்  கொண்டாடுவோம்...!                                            

கருத்துகள் இல்லை: