புதன், 9 நவம்பர், 2011

மம்தாவின் ரவுடித்தனமும், ஏமாற்று வேலையும்....!

மம்தா பானர்ஜியின் 
ரவுடித்தனம்...!                

                
          மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்ன செய்தார் தெரியுமா...? கொல்கத்தாவில் உள்ள ஒரு காவல்  நிலையத்துக்குள் அடாவடியாக - அதிரடியாக நுழைந்தார். காவல் நிலையத்தின் செயல்பாடுகளை சோதனை செய்ய அல்ல.  குற்றம் புரிந்து, அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த திரிணமூல் கட்சித் தொண்டர்கள் இரண்டு பேரை விடுவித்திருக்கிறார் என்பது தான் அதிர்ச்சி தரும் விஷயம் ஆகும். குற்றம் செய்து பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அவரது கட்சியினை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல அவரது உறவினரும் ஆவார்கள்.
                    சென்ற இடதுசாரிகள் ஆட்சியின் போது தான், குற்றம் செய்து கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட தங்கள் கட்சியின் குண்டர்களை விடுவிக்க காவல் நிலையத்திற்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தார் என்பதை அந்த மாநிலமே பார்த்திருக்கிறது. ஆனால் இன்றோ தான்   சட்டத்தை காப்பாற்றவேண்டிய ஒரு முதல்வர் என்பதையே அவர் மறந்து செயல்பட்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். முதல்வராக பதவியேற்கும் போது ''விருப்பு வெறுப்புகளுக்கு  இடம் தராமல் சட்டங்களை காப்பாற்றுவேன்'' என்று   எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு  எதிராகவும் செயல்பட்டிருக்கிறார் என்பதை தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. 
                 இது பொறுப்பு வாய்ந்த ஒரு முதலமைச்சர் செய்கின்ற வேலை அல்ல. மம்தா பானர்ஜி ஒரு ரவுடியைப் போல் நடந்துகொண்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
  மம்தாவின் ஏமாற்று வேலை...!          
                 
அண்மையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலின் விலையை உயர்த்தியது. அப்போது தான் மம்தாவின் ஏமாற்று நாடகம் ஆரம்பமானது. மம்தாவின் கட்சியும் இடம்பெறும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் இப்போது தான் முதல் முறையாக பெட்ரோல் விலையை ஏற்றுவது போல் வானத்துக்கும் பூமிக்கும் ருத்ரத்தாண்டவமே ஆடினார்.
                 அமைச்சரவையிலிருந்து விலகப்போகிறோம் என்றார். ஆட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவை திரும்பப் பெறப்போகிறோம் என்றார். என் கட்சியை சேர்ந்த எம்.பி-க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கப்போவதாகவும், அவரிடம்   எங்கள் அதிருப்தியை தெரிவிக்கப்போகிறோம் என்றும் கூறினார். .
மன்மோகன் சிங்கை விட்டேனா பார் என்று கொக்கரித்தார். ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது பற்றி மம்தா யோசிப்பதாகவும் மம்தா கட்சியிலிருந்து செய்திகளை கசியவிட்டனர்.
                 ''கைப்புள்ள வந்துட்டான்.. அவன் ரத்தத்த பாக்காம விடமாட்டான்..'' என்ற ''வின்னர்'' படத்துல வர்ற வடிவேலு டயலாக்கு கணக்கா...  மக்கள் எல்லோரும் ''மம்தா எழுந்துட்டாங்கடா.. அவங்க ரெண்டுல ஒன்னு பாக்காம விடமாட்டங்கடா...'' என்று, ஆட்சிக்கு என்ன நடக்க போவுதோ என்று மக்கள் எல்லோரும் அவரது அசைவுகளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.   
                கடைசியில அந்த பெரியண்ணன் ''மண்'' மோகனனை அவங்களால பாக்கவே முடியல... அப்புறம் லோக்கலிலேயே இருக்கிற சின்ன  அண்ணன் பிரணாப்பை பாத்தாங்க... அவர் என்ன அடி கொடுத்தார்னு தெரியல... புலி போல பிரணாப் வீட்டுக்குள்ள போன மம்தா, வெளியே வரும் போது எலி மாதிரி ஆயிட்டாங்க...! என்ன நடந்துன்னே தெரியல... மம்தாவின் சுருதி அப்படியே மாறிப்போச்சி...
                ஆரம்பத்தில் பெட்ரோல் விலைஉயர்வை திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவோம் என எச்சரித்த மம்தா பானர்ஜி,  பிரணாப் முகர்ஜி சந்திப்புக்குப் பின் ''மத்திய அரசு மீண்டும்   பெட்ரோல் விலையை உயர்த்தினால் இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வோம்'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
               இது தான் மம்தாவின் மக்களை ஏமாற்றும் நாடகத்தின் உச்சக்கட்டமாகும். இது யாரை ஏமாற்றும் வேலை...? எப்போதுமே மக்கள் ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள்..!

கருத்துகள் இல்லை: