திங்கள், 7 நவம்பர், 2011

உயிர் துச்சமென நீதிக்காகப் போராடும் இரும்பு பெண்மணி...!

                    இவர் 1972 - ஆம் ஆண்டில் பிறந்தவர். மணிப்பூர் மாநிலத்தின் ''இரும்புப் பெண்மணி'' என்று அன்போடு அழைக்கப்படுபவர். இன்று உலகமே இவரை திரும்பிப்பார்க்கிறது. இவர் பெயர் தான் ஐரோம் ஷர்மிளா. இவர்  2000 ஆம்  ஆண்டு  நவம்பர் 4  முதல் இன்று வரை உண்ணா விரதம் இருந்து வருகிறார். இப்போது பதினோரு ஆண்டுகளை முடித்து பன்னிரெண்டாவது ஆண்டாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆனால் இந்த உண்ணாவிரதத்தை   நம் நாட்டில் உள்ள எந்த தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் வேதனையானது. 
              அருணாச்சலப்பிரதேசம் , அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதக்குழுக்கள் பல வளர்ந்து அவைகளின் பலத்திற்கேற்ப அந்த மாநிலங்களை நம் தேசத்திலிருந்து தனியாக பிரிக்கும் முயற்சி செய்தபோது, அந்த தீவிரவாதக்குழுக்களை ஒடுக்குவதற்காக Armed Forces (Special Powers) Act (AFSPA) என்கிற  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் சென்ற   1958 - ஆம் ஆண்டு செப்டம்பர் 11 - ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டம் 1990 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கும் நீட்டிக்கப்பட்டது.
                   ஆயுதப்படையின் கட்டுப்பாட்டுக்குள்  இந்த மாநிலங்கள் இருந்ததால் 
ஆயுதப்படையினரின் எதேச்சதிகாரப்போக்கு என்பது கட்டுக்கடங்காமல் போனது. தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும், அப்பாவி பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் போன்ற கொடிய செயல்களையே செய்துவந்தனர். இவர்களின் எந்த செயல்களுக்கும் நீதிமன்ற விசாரணை கூட கிடையாது.
             இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், சென்ற பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 2  -ஆம் தேதியன்று, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற அப்பாவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
                 ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை விலக்கக்கோரித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.  அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு  மணிப்பூர் மாநில அரசு மிரண்டு  போனது. எனவே  ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது.  பிறகு அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை இன்று வரை  மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
                அதேப்போல் கடந்த   2004 - ஆம் ஆண்டு,   மனோரமா  என்ற பெண் ஆயுதப்படையினரால்  பலமுறை பாலியல் வன்முறை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டாள். இதை கண்டித்து மெயிரா பைபிஸ் என்ற குழுவைச் சேர்ந்த பெண்கள் முழு நிர்வாணமாக இந்திய இராணுவ முகாம் முன் சென்று, ''இந்திய இராணுவமே எங்களையும் கற்பழி.. எங்களையும் கொலை செய்.. எங்கள் சதைகளையும் எடுத்துக் கொள்..'' என்று மனோரமா படுகொலையைக் கண்டித்து அவர்கள் முழங்கியது நாட்டையே  உறைய வைத்தது. ஆயுதப்படையின் இந்தச் செயலும் ஐரோம் ஷர்மிளாவின் கோபத்தை அதிகமாக்கியது.
          ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய காலத்திலிருந்து,  கடந்த பதினோரு ஆண்டுகளில் ஒருமுறைகூடத்  தனது சொந்த வீட்டிற்குச் செல்லவில்லை. அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ளாததால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வருகிறார். இருந்தாலும்  அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.
             ஐரோம் ஷர்மிளாவுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே நடைபெறும் இந்த யுத்தத்தின் மீது ஆட்சியாளர்களுக்கும் அக்கறையில்லை. சகல அதிகாரமும் பெற்றிருக்கும் சிறப்பு ராணுவப்படையை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்  என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அந்த இரும்பு பெண்மணியின் உயிரையும் காப்பாற்றவேண்டும். இதைத் தான் உலகம் எதிர்ப்பார்க்கிறது.  

கருத்துகள் இல்லை: