புதன், 23 நவம்பர், 2011

DAM 999 - மீண்டும் மீண்டும் இன உணர்வுகளை தூண்டியே பிழைப்பை நடத்தாதீர்கள்...!

                    தமிழ்நாடு  மற்றும்  கேரளா மாநில எல்லைப்பகுதியில் உள்ள முல்லை பெரியாறு அணை என்பது இரு மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாகவே ஒரு சட்ட போராட்டத்தை உண்டாக்கி ஒரு கவுரவப் பிரச்சனையாக மாறி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அணையின் உயரத்தை அதிகபடுத்தி  நீர் மட்டத்தை உயர்த்தவேண்டும் என தமிழ்நாடு முயற்சி செய்த போது கேரளா அதை எதிர்த்தது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அணை உடைந்துவிடும் என்று கூறி மேலும் நீர் மட்டத்தை உயர்த்த கேரளா இன்று வரை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
              116 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணை இன்று பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது.   அந்த அணையின் கீழ் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளாதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அடிக்கடி  ஏற்படும் பூமி அதிர்ச்சிகளால் அணை உடைந்துவிடுமோ என்கிற அச்சம் அந்த பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் - அடிக்கடி பூமி அதிர்ச்சி ஏற்பட்டு வருவதால், மேலும் கால தாமதம் செய்யாமல் இப்போது இருக்கின்ற பழைய அணையை உடைத்து விட்டு புதிய அணையை கட்டவேண்டும் என்று கேரள அரசு முயற்ச்சித்து வருகிறது. 
                 ஆனால் இந்த பிரச்சனையில் ஆரம்ப காலத்திலிருந்தே, தமிழகத்தில் ஓட்டுக்களை நம்பியே பிழைப்பை நடத்தக்கொண்டிருக்கக்கூடிய திராவிடக்கட்சிகள்  இதை ஒரு மக்கள் பிரச்சனையாகவோ அல்லது ஒருதேசியப் பிரச்சனையாகவோ பார்க்கத் தவறிவிட்டன. இதை ஒரு இனப்பிரச்சனையாக திசைத் திருப்பி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்  என்று தான் சொல்லவேண்டும். இது இரு மாநிலங்களுக்கிடையே ஒரு  கவுரவப் பிரச்சனையாகவும் மாற்றப்பட்டுள்ளது.

              இந்த சூழ்நிலையில் தான், இன்னும் சில தினங்களில் திரையிடப் போகும், டேம் 999 - என்கிற ஆங்கில திரைப்படம் இன்று தமிழகத்தில் ஒரு மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மிகப்பழமை வாய்ந்த இந்த அணையை உடைத்து புதிய அணை கட்டப்படாவிட்டால், என்ன ஆகும் என்பதை மக்கள்  புரிந்துகொள்ளும்   சினிமா மொழியில் எடுக்கப்பட்டு திரைக்கு வர காத்திருக்கிறது. ஆனால் அதற்குள் மிகப் பெரிய சர்ச்சை. இந்தப் படத்தை தமிழகத்தில்  திரையிடக்கூடாது என்று  தமிழக அரசியலில் காணாமல் போன வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்களெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு போராடுகிறார்கள்.
                தமிழகத்தில் இன உணர்வுகளை தூண்டி அரசியல் நடத்தும் இவர்களுக்கு இத்தனை நாட்களாக ஈழப்பிரச்சனை கை கொடுத்து வந்தது. ஆனால் இப்போது அந்தப் பிரச்சனையும் காலாவதியாகிவிட்டது. வேறு எந்தப் பிரச்சனைகளும் இப்போதைக்கு கைவசம் இல்லை.  பாத்தாங்க... DAM 999 என்கிற சினிமாப் படத்தை கையிலெடுத்துக் கொண்டு மக்களை திசைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
                  1949 - இல் ஆரம்பிக்கப்பட்டு இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிட்டு ஆட்சிக்கு வந்த   திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமல்லாமல், திமுக - வின் வாரிசுகளான அதிமுக, மதிமுக, போன்ற திராவிடக்கட்சிகளும் இன உணர்வுகளை தூண்டித்தான்  மக்களை குழப்பி தங்களின் அரசியல்  பிழைப்பை  நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
                  இப்படியாக இந்தி... இந்திக்கு பிறகு தமிழீழம்...இதன் பிறகு இன்றைக்கு கூடங்குளம், முல்லை பெரியாறு அணை போன்ற பிரச்சனைகளை கையிலெடுத்து தமிழக மக்களுக்காக போராடி வருவதாக காட்டிக்கொண்டு, அதன் மூலம் அரசியல் லாபம் பார்க்க துடிக்கிறார்கள்.
                 இந்த முல்லை பெரியாறு  விஷயத்தில் மத்திய அரசும் தலையிட்டு, நீதிமன்றத்தின் மூலமாகவும், அணை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், நிபுணர்கள் கொண்ட குழுவின் மூலமாகவும்  அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, இரு மாநிலங்களும் ஏற்று கொள்ளும் படியான  முடிவுகளை எடுக்கவேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.
               இதை விடுத்து திரைப்படத்தை பார்த்து ஏன் பயப்படவேண்டும். அந்த திரைப்படத்தில் பயனுள்ளக் கருத்துக்கள் இருந்தால் அதை நாம் உதறி தள்ளிவிடக்கூடாது. எனவே திரைப்படத்தை அனுமதியுங்கள். கருத்து சொல்லும் உரிமையை தடுக்காதீர்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு தடைப்போடாதீர்கள்...

8 கருத்துகள்:

புகல் சொன்னது…

அது சரி ராம்ஜினு பேரு வச்சிருக்கிற உங்கள மாதிரி ஆளுங்கிட்ட வேறு என்ன எதிர்பாக்கிறது.

//தமிழகத்தில் ஓட்டுக்களை நம்பியே பிழைப்பை நடத்தக்கொண்டிருக்கக்கூடிய திராவிடக்கட்சிகள் இதை ஒரு மக்கள் பிரச்சனையாகவோ அல்லது ஒருதேசியப் பிரச்சனையாகவோ பார்க்கத் தவறிவிட்டன//

//இதை ஒரு இனப்பிரச்சனையாக திசைத் திருப்பி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்//

கேரளா தமிழர்களுக்கு தண்ணிர் தரவில்லை என்றால் அது தமிழ் இன பிரச்சனைதான்
தமிழ் இனம் என்றாலே மக்களும், தமிழ் தேசியமும் அடங்கும்.


அது என்னனு தெரியல தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தா உடனே
ஓட்டு பிழப்பு என்று வசை பாடுவது.
உங்க அறிவுரையெல்லாம் ஏன் கேரள அரசுக்கும் அந்த மக்களுக்கு சொல்ல வேண்டியதானே?.
கேரள அரசு ஓட்டுக்காக தமிழ் இனத்துக்கு தண்ணிர் தரமால் கழுத்தறுப்பது உங்கள் கண்ணுக்கு தெரியாது
அதுசரி நமக்கு என்ன நம்ம குடும்பத்தில் யாரும் விவசாயி இல்லையே அதுவும் முல்லை பெரியாறு தண்ணிரை நம்பி இல்லையே பின்பு நாம் ஏன் கவலைபட வேண்டும்.
தண்ணிர் தராதவன் நியாயமானவன்,
அதை எதிர்ப்பவன் ஓட்டு பொருக்கி என்ன மாதிரியான சிந்தனை

சீன படத்தில் காசுமீரை தனி நாடாகவோ அல்லது பாக்கிசுதானுடன் இனைவது போல் காட்டினால் நிங்களும், உங்க ஈன இந்திய அரசு வரவேற்க்குமா?
இல்ல,
திரைப்படத்தை பார்த்து ஏன் பயப்படவேண்டும். அந்த திரைப்படத்தில் பயனுள்ளக் கருத்துக்கள் இருந்தால் அதை நாம் உதறி தள்ளிவிடக்கூடாது.
என்று இடுக்கை இடுவிர்களா.

அதுசரி உங்க பதிவு பிரபலம் அடைய நிங்க என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.
இது ஓட்டு பிழப்பு இல்லனா என்ன பிழப்புனு சொல்ல முடியுமா?

புகல் சொன்னது…

//இப்படியாக இந்தி... இந்திக்கு பிறகு தமிழீழம்...இதன் பிறகு இன்றைக்கு கூடங்குளம், முல்லை பெரியாறு அணை போன்ற பிரச்சனைகளை கையிலெடுத்து தமிழக மக்களுக்காக போராடி வருவதாக காட்டிக்கொள்கிறார்கள்.//

என்ன சொல்ல வர்றிங்க,
தமிழக மக்களுக்காக போராட கூடாது என்று சொல்றிங்களா
இல்ல எப்படி போராடனும்னு ஒரு பதிவு போடுங்க,
எல்லாரும் படிச்சி தெரிஞ்சிகிட்டும்


ஓட்டுதான் முக்கியம்னா தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான இந்து மக்களுக்கு தி.மு.கா ஆதரவாக இருந்திருக்குமே?
அப்பபடி இல்லையே.

இந்தி மொழி:
அது எப்படிங்க,
இந்தி மொழியை தமிழன் மீது திணிப்பவன் நல்லவன்.
அதை எதிர்ப்பவன் ஓட்டு பிழப்பு நடத்துபவன்.
எதிர்த்து போராடிய மாணவர்களை இந்திய அரசு பயங்கரவாதிகளை போல் நசுக்கியது விளைவு நூற்றுகண்கான தமிழர்கள் உயிர்கள் பலியாயின,
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தார்கள்.
இது வெள்ளையினின் ஆட்சியைவிட மிக கொடுங்கோலான ஆட்சி.

இன்றும் கூட,
இந்தியா அரசாங்கம் நடத்தும் அனைத்து தேர்வுகளும் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே
-- அப்ப தமிழர்கள் என்ன பிழப்பு தேடி வந்தவர்களா இல்ல அனாதைகளா?
இப்படி கேட்க கூடாது கேட்டா பிரிவினைவாதி, தமிழ் வெறியன்
என்று பொய் பரப்புரைகள் சொல்லி வசைபாடுவது.
இப்படியாக பல எ-டு சொல்லலாம்

இந்தி மொழி தமிழ்நாட்டின் முலை முடுக்கு நிரம்பி வழிய இந்திய அரசாங்கம் மக்களின் வரி பணத்தை விரயம் செய்கிறது,
தமிழ் மொழியை என்றாவது பிற மாநிலத்தில் அனுமதிப்பார்களா.
உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலையைகூட திறக்க போராட்டம் செய்ய வேண்டிய அவல நிலை.

தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை நாயயை சுடுகிறமாதிரி சுடுகிறான் அதை
இந்தியா கண்டும் காணாமல் இருக்கிறது இது எல்லாம் ஒரு நாடு, அதுமட்டும் போதாது என்று இலங்கை இராணுவத்துக்கு பயிற்ச்சி வேற.
நம் மீனவர்களை காப்பாற்ற இந்திய அரசிடம் தமிழகம் மண்டியிட்டு கையேந்தும் அவல நிலை.


ஈழ தமிழர்களுக்கு போராடுபவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள்.
அதுவே இலங்கைக்கு உதவி செய்து ஈழ தமிழர்களை கொன்று குவித்தால் நாட்டுபற்று!

சொல்லுங்க என்னதான் தமிழன் செய்யனும்
அவனுங்க இந்தியை திணித்தா நாம எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காம எற்றுகொள்ள வேண்டுமா?
தமிழில் இருந்து பிரிந்த கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் இவர்களை தமிழ் படிக்க சொல்லி கட்டாய படுத்தினால் எற்று கொள்வார்களா
இல்ல இவர்கள் இந்தியை எற்று கொண்டார்கள் என்பதற்காக தமிழனும் எற்று கொள்ள என்ன எதும் கட்டாயமா என்ன?

ஈழ தமிழன் அங்கு செத்தால் நாம் அதை எதிர்த்து குரல் கொடுக்க கூடாது.
தமிழ்நாட்டு மீனவர்களை செத்து மடிந்தால் நாம் கவலைபட கூடாது
போராட்டம் செய்ய கூடாது.
சிங்களவர்களுக்கு இந்தியா போர் கருவிகள் இன்னும் பிற உதவிகள் செய்தால்
நாம் பொத்தி கொண்டு இருக்க வேண்டும்.
சிங்களவன்கூட தமிழ் இனத்தின் எதிரியாகத்தான் இருக்க முடியும்
ஆனால் இந்திய அரசு தமிழ் இனத்தின் இரண்டகன்/துராகியாகத்தான இருக்க முடியும்.

பெயரில்லா சொன்னது…

manangetta indhdhiya

404 சொன்னது…

இந்தியாவில் எல்லா விஷயங்களை பேசிடவோ, படம் எடுத்திடவோ முடிகிறதா? ஈழத்தமிழர்கள் நியாயங்களை, இந்திய அமைதிப்படை நடத்திய கோரவிளையாட்டை, காசுமீரில் இந்தியப்படை அக்கிரமத்தை, வடகிழக்கு மாநிலங்களில் அரச எந்திரக் கோரமுகத்தை எல்லாம் படம் எடுத்து வெளியிட்டால் நியாயம் தான்னு சும்மா இருந்துருவீங்களா ? உண்மையில் இவைபற்றியெல்லாம் ஆழமாக எடுத்தால் எந்தப் படத்தையும் வெளியே விட மாட்டார்கள். இது தான் உண்மை.

தண்ணீர் தமிழரின் வாழ்வாதாரப் பிரச்சினை! தொடர்ந்து அண்டை மாநிலத்தார் செய்துவருவது அனைவரும் அறிந்த வெளிப்படைச் சங்கதி. இதன் பின்னணியின் கேரள அரசின் ஊதுகுழற் பரப்புரையாகத் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர்கள் கொஞ்சக் காலம் ஒரு சிடி வெளியிட்டு, திரையரங்கெல்லாம் போட்டுக் காண்பித்துப் பரப்புரை செய்துவந்தார்களே அதன் வணிகத்தன்மை நிறைந்த நீட்சி தான் இந்தப்படம் எனக் கொந்தளித்த பலரும் கருதுகின்றனர். அதன் விளைவே இந்த எதிர்ப்பு. இதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது!

404 சொன்னது…

///இப்படியாக இந்தி... இந்திக்கு பிறகு தமிழீழம்...இதன் பிறகு இன்றைக்கு கூடங்குளம், முல்லை பெரியாறு அணை போன்ற பிரச்சனைகளை கையிலெடுத்து தமிழக மக்களுக்காக போராடி வருவதாக காட்டிக்கொள்கிறார்கள்.//

என்ன சொல்ல வர்றிங்க,
தமிழக மக்களுக்காக போராட கூடாது என்று சொல்றிங்களா
இல்ல எப்படி போராடனும்னு ஒரு பதிவு போடுங்க,
எல்லாரும் படிச்சி தெரிஞ்சிகிட்டும்/

புகல்,
அதை எல்லாம் இந்திய தேசியம் பேசும், தேசியத்துக்குள் அடங்கிய, சமஸ்கிருதம் விரும்பிய, இந்துநேசம் கொண்ட தூய காந்திய தேசியவாதி போன்றவர்கள் தான் தட்டிக் கேட்க வேண்டும். அதையெல்லாம் தமிழ்த்தேசியம், மார்க்சியம், திராவிடம் பேசுவோர் கேட்க அருகதை இல்லை என்ற சாரசம்சம் புரியல போல உங்களுக்கு! விடுங்க ஒவ்வொருத்தரும் ஒரு அஜண்டாவோட தான் பதிவுலகுக்கு வராங்க!

Thekkikattan|தெகா சொன்னது…

தமிழ்ல எழுதி இதை பரப்புவதற்கு பதிலாக... பேசாம மலையாளத்திலேயே எழுதி இருக்கலாம்.

இதெல்லாம் ஒரு பிழைப்பு...

kashyapan சொன்னது…

ராம்ஜி!ஏன் அவசரப்படுகிறீர்கள்.படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா? புகலும் பார்க்கவில்லை ! ஒரு புண்ணாக்கும் பார்க்கவில்லை. பிரச்சினை நதி நீர்பற்றியது.67-70ம் ஆண்டுகளில் சட்டமன்றத்தில் ஏ.பாலசுப்பிரமணியம் அவர்கள் இது பற்றி பெசியிருக்கிறார்கள்.கருணாநிதி அவர் யோச னையை கெட்க மறுத்துவிட்டர்.இந்திரா மீது அவ்வளவு நம்பிக்கை. புகலுக்கு ஒரு கேள்வி? "குப்பி" என்றபடம்பார்த்தீர்களா? போராளிகள் அத்துணை பெரும் குப்பியைக் கடித்து இறப்பார்கள். சிவராசனைதவிர.ஏன் ? இயக்குனர் ரமேஷைக் கெளுங்கள்---காஸ்யபன்.

kumaravel kumar சொன்னது…

விடுங்க ராம்ஜி சார். தூங்குறவனை, எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குகின்ற மாதிரி நடிபவனை எழுப்பமுடியுமா! பட்டும் நம் தமிழ் நாட்டு மக்கள் (தமிழ் மக்கள் வெளியில் உள்ளவர்கள் திருந்தி தான் தமிழ் நாட்டை விட்டு போய் விட்டார்கள்) திருந்த வில்லை என்பது தான். உண்மை. இந்த மாதிரி அசிங்கமான அரசியல் நடத்தும் நபர்களை மக்கள் சும்மா விட மாட்டார்கள். அந்த சமயம் நடக்க ஆரம்பித்து விட்டது. ஒன்றும் தெரியாத பாமர மக்களை வைத்து ஏய்த்து பிழைப்பு நடத்துபவர்களை, கடவுள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார். உதாரணம் இப்ப நம்ம கண் முன்னாலேயே!