சனி, 5 நவம்பர், 2011

இப்படி சொல்வதற்கு ''மண்ணு'' மோகன் சிங்குக்கு என்ன துணிச்சல்..?

                 நேற்று முன் தின இரவு பெட்ரோலின் விலையை  ரூ. 1.82 பெட்ரோல் நிறுவனங்கள் தன்னிச்சையாக உயர்த்தியிருக்கின்றன.  கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2009  - ஆம் ஆண்டு  ஆட்சிக்கு வந்ததிலிருந்து - கடந்த இரண்டு ஆண்டுகளில் இருபத்து மூன்றாவது   முறையாக  இது போல் பெட்ரோலின் விலையை உயர்த்தியிருக்கிறது  என்பதை நினைக்கும் போது வயிறே எரிகிறது.
                   இதில் பெட்ரோல் விலையை உயர்த்திய அதே நாளில் இந்திய உணவு பணவீக்கம் என்பது 12.21 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது எரியும் வயிற்றில் மேலும் பெட்ரோலை ஊற்றியது போல் இருக்கிறது.
               இந்த விலை உயர்வு என்பது நாட்டின் பிரதமர் நாட்டில் இல்லாத போது தான் நடைபெறுகிறது. நம்ப பிரதமரு மண்ணு மோகன்  சிங்கு அவரு பாட்டுக்கு பிரான்ஸ் நாட்டுக்கு போயிட்டாரு.. அங்க கேன்ஸ் நகரத்துல   வளர்ந்த பணக்கார நாடுகளும், வளரும் நாடுகளும் சேர்ந்து ஜி 20 உச்சி மாநாடு நடக்குது. அங்க பேச போயிட்டாரு. இந்த மாநாட்டுல தான் வளர்ந்த பணக்கார நாடுகளெல்லாம் வளரும் நாடுகளை மேலும் வளராம எப்படி சுரண்டுவதுன்னு எல்லாருமா கூடி விவாதிப்பாங்க. அங்க தான் நம்ப நாட்டு ''பொருளாதார மேதை'' பேசுவாருங்க.. இந்த மேதை நம்ப நாட்டு மக்களோட மட்டும் பேசவே மாட்டாருன்னா பாத்துக்குங்களேன்.
              அப்படிப்பட்ட இந்த ''பொருளாதார மேதை'' தான் அந்த மாநாடு நடக்கும் கேன்ஸ் நகரத்துல பத்திரிக்கையாளர்கள் கூட்டத்துல ''இந்த பெட்ரோல் விலை உயர்வு சரியானது தான் என்றும், பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கியதும் சரியே'' என்று சொன்னது மட்டுமில்லைங்க  பெட்ரோலைப் போலவே  மற்ற எரிபொருள்களுக்கும் தற்போதுள்ள விலை நிர்ணயக் கட்டுப்பாட்டைத் தளர்த்த திட்டமிட்டுள்ளதாக என்று சொல்லியிருப்பது என்பது நாம் இப்போது தான் இந்தியாவில் இல்லையே என்கிற தைரியமா..? அல்லது அப்படி செய்தால் மட்டும் இந்த மக்கள் என்ன செய்துடப் போறாங்க என்கிற  துணிச்சலா..?
இப்படி எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு சும்மா நடப்பதற்கு ஒரு அரசாங்கம் எதற்கு..? எந்த வேலையும் இல்லாமல் ஒரு பிரதமர் எதற்கு..?                   எகிப்திலும், லிபியாவிலும் தங்களுக்கு எதிரான அநியாயங்களை கண்டு கொதித்து மக்கள் எழுகிறார்கள். அந்த மக்களின் எழுச்சியைக் கண்டு பயந்து ஆட்சியாளர்கள் ஓடி ஒளிகிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் இந்திய மண்ணில் ஒரு எழுச்சியோ புண்ணாக்கோ வராது என்பதை மண்ணுமோகன் சிங்கு தெரிந்துவைத்திருக்கிறார். அதனால் தான் இவ்வளவு தைரியமாக பேசுகிறார். அப்படி தைரியமாக பேசிவிட்டு இந்தியாவிற்கும் துணிச்சலாக வருகிறார்.   இந்திய மக்களே அப்படியெல்லாம் எழுந்துவிடாதீர்கள்.. விழித்துவிடாதீர்கள்...!!!!       

கருத்துகள் இல்லை: