செவ்வாய், 29 நவம்பர், 2011

கோவா திரைப்பட விழாவில் 2 ஆவணப் படங்களுக்கு தடை - கொலைவெறி.. கொலைவெறி... ஏனடா...?

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- 
  கலைஞர்கள்  சங்கம் கண்டனம்.......  

                     கோவாவில் நடைபெறும் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இரண்டு படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் கண் டனம் தெரிவித்துள்ளது. ஓவியர் எம்.எப்.உசேன் தயாரித்த ஆவணப்படத்தையும், பகத்சிங் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட குறும்படத்தையும் விழாவில் தடையின்றித் திரையிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.  

பண்பாட்டு அடக்குமுறை   

              கோவாவில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்திய பன்னாட்டு திரைப்பட விழா, திரைப்பட ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிற ஒரு நிகழ்வாகும். தற்போது நடைபெற்று வரும் ‘42வது இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழா - கோவா 2011’ திரையிடலிலிருந்து இரண்டு முக்கியமான படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது திரைப்பட ஆர்வலர்களுக்கும் கருத்துச் சுதந்திரத்தை நேசிப்பவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
              உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியர் அமரர் எம்.எப். உசேன் இயக்கிய ‘த்ரூ தி அய்ஸ் ஆஃப் தி பெய்ன்ட்டர்’ என்ற, ஒரு ஓவியரின் பார்வையில் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிற ஒரு ஆவணப்படம், இந்த விழாவில் திரையிடப்படுவதாக இருந்தது. கடந்த ஞாயிறன்று (நவ.27), அதன் திரையிடல் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
                “படம் தொடர்பான நுட்பச்சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். எல்லாம் நல்லபடியாக முடியுமானால் படம் திரையிடப்படும்” என்று விழாவின் இயக்குநர் அறிவித்திருப்பது கண்துடைப்பாகவே இருக்கிறது. ஏனென்றால் இந்தப் படத்தின் உள்ளடக்கங்கள் குறித்து எவ்வித எதிர்ப்பும் எந்தத் தரப்பிலிருந்தும் வரவில்லை. மாறாக, இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு ஒன்று, இந்தப் படத்தைத் திரையிட்டால் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும் என்று அச்சுறுத்தியதன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
       அப்பட்டமான மதவெறி நோக்கத்திற்காக எம்.எப். உசேன் அவர்களை நாட்டை விட்டே விரட்டிய கும்பல்கள், அவர் மறைந்த பின்பும் அந்த வெறி அடங்காதவர்களாக அவரையும் அவரது சிந்தனைகனையும் இருட்டடிக்க முயல்கின்றன. இந்தப் பண்பாட்டு அடக்குமுறை உத்திக்கு அரசும் விழா குழுவினரும் அடிபணிந்துவிட்டது வெளிப்படையாகத் தெரிகிறது.

எது தேசவிரோதம்?   

         இதே போல், இரண்டு நாட்களுக்கு முன்பாக ‘இன்குலாப்’ என்ற குறும்படத்திற்கும் இந்த விழாவில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கவுரவு சாப்ரா இயக்கிய இந்தக் குறும்படம் பகத்சிங் தியாகத்தை பின்னணியாக கொண்டு, இன்று நாட்டில் தலைவிரித்தாடும் சமத்துவமின்மை, மதவெறி, சாதியம், ஊழல், வேலையின்மை, பன்னாட்டு நிறுவனங்களுக்காக வளைக்கப்படும் சட்டங்கள், மரபணு நீக்கப்பட்ட விதைகளுக்கு அனுமதி போன்ற கேடுகள் பற்றி இரண்டு இளைஞரகள் உரையாடுவதாக அமைந்ததாகும். தேச விரோதக் கருத்துகளை இந்தப் படம் கொண்டிருப்பதாகக் கூறி, இதற்கு தணிக்கைச் சான்று வழங்க தணிக்கைக் குழு மறுத்திருக்கிறது. பகத் சிங் இதற்காகத்தான் இன்னுயிர் நீத்தாரா எனக் கேட்கும் இந்தப் படம் உண்மையில் தேச நலனை நோக்கமாகக் கொண்டதேயாகும். வயதுவந்தோருக்கான சான்றிதழ் அளிக்குமாறு இயக்குநர் கோரியதையும் தணிக்கைக் குழு ஏற்கவில்லை. அதைச் சாக்கிட்டு விழாவிலும் அந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஆட்சியாளர்களின் கொள்ளை கொலைகளை அம்பலப்படுத்துகிற ஒரு சிறிய கலைப்படைப்பே இந்தப் படம்.
             இந்த இரு படைப்புகளும் இவ்வாறு அவமதிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மக்கள் தங்கள் தேர்வுப்படி கலையாக்கங்களைக் காணும் சுதந்திரத்தின் மீதான கொடூரத் தாக்குதலுமாகும். இந்திய பன்னாட்டு திரைப்பட விழா அமைப்பாளர்கள் இந்த இரு படங்களையும் தடையின்றித் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும், தணிக்கைக்குழு ‘இன்குலாப்’ படத்திற்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை: