வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

வேலை தேடும் இளைஞர்கள் இனி இன்சூரன்ஸ் முகவராவதும் கடினமே...!


                 இன்றைக்கு இந்தியாவில் படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்கள் வேலை ஏதும் கிடைக்கப்பெறாமல், வருமானத்திற்காக அவர்கள்  தேடிப்போகும்  வேலை இன்சூரன்ஸ் முகவர் பணியை  தான். அவர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களும்,  சுயதொழில் செய்பவர்களும் கூட இன்றைய விலைவாசி நெருக்கடியில் தாங்கள் வாங்குகின்ற  ஊதியம் பற்றாக்குறையாய் போக அதை சமாளிக்க இன்னொரு வருமானத்தைத் தேடி இன்சூரன்ஸ் முகவர் பணியை தான் நாடி வருகிறார்கள். குடும்பச்செலவை சமாளிக்க கணவரின் வருமானம் மட்டும் போதவில்லை என்று வீட்டுப்பெண்களும் இன்சூரன்ஸ் முகவர் பணியைத் தான் நாடுகிறார்கள். இப்படியாக ஆண்களும் பெண்களுமாக அலையலையாய் இன்சூரன்ஸ் முகவர் பணியில் சேர்ந்து வருமானத்தை ஈட்டுகிறார்கள். இவர்கள் யாரும் பிரதமர் மோடியின் நண்பர்களான அம்பானி - அதானி - டாடா - பிர்லா வீட்டு பிள்ளைகள் அல்ல.  பொழுதுபோகவில்லை என்று இன்சூரன்ஸ் முகவராக சேரவில்லை. பொருளாதார நெருக்கடி  காரணமாக அன்றாட வாழ்வாதாரத்திற்காக முகவர் பணியில் சேர்ந்து இரவு - பகல் என்றும் பாராமல், வெயில் - மழை என்றும் பாராமல் ஓயாமல் உழைத்து அதில் கிடைக்கும் வெறும் கமிஷனை மட்டுமே ஊதியமாக பெற்று, வேறு எந்த பாதுகாப்போ, உரிமைகளோ, சலுகைகளோ இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுபவர்கள்.
              இவர்கள் செய்யும் இந்த முகவர் தொழில் தான் இவர்களின் எதிர்காலம். அதில் இவர்கள் பெறும் கமிஷன் தான் இவர்களின் வாழ்வாதாரம். இவர்கள் செய்யும் இந்த தொழிலும், வருமானமும் நிரந்தரமானவைகள் அல்ல. இவர்கள் ஆண்டுதோறும்  தேவையான குறைந்தபட்ச இன்சூரன்ஸ் வணிகம் செய்தால் தான் இவர்கள் தொடர்ந்து வேலையில் நீட்டிக்கமுடியும். குறைந்தபட்ச வணிகம் செய்யவில்லையென்றால் முகவர் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். இது ஒன்றும் ஏ.சி அறையில் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து செய்யும் வேலையில்லை. இப்படிப்பட்ட இந்த வேலையில் சேரவேண்டுமென்றால் சுலபமாக சேர்ந்துவிட முடியாது. முதலில் முகவர் பயிற்சி மையத்தில் ஒன்பது நாள் பயிற்சி வகுப்பிற்கு கட்டாயம் செல்லவேண்டும். அந்த பயிற்சி வகுப்பு ஆன்லைனிலும், ஆப்லைனிலும் நடத்தப்படுகிறது. ஆனால் தேர்வு என்பது ஆன்லைனில் மட்டுமே. 
               ஏற்கனவே ஆன்லைனில் தேர்வு என்பதே 10 - 12 -ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர்களுக்கும், பெண்களுக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் கடினமான விஷயமாக இருந்துவருகிறது. இதை நடைமுறைப்படுத்தியவர்கள் சென்ற ''மேதாவித்தனமான'' ஆட்சியாளர்கள் தான். நாட்டில் எத்தனை எத்தனைப்பேருக்கு கம்ப்யூட்டர் பற்றிய புரிதல் இருக்கும் என்று கூட யோசிக்கவில்லை. 50-க்கு 17 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சிபெற்று விடலாம் என்றிருந்தாலும், அந்த 17 மதிப்பெண்ணை பெறுவதற்கே திக்குமுக்காடிப் போனார்கள். கம்ப்யூட்டரைப் பற்றி தெரியாதவர்கள் தான் நம் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள் என்ற பொதுபுத்தி கூட நம் ஆட்சியாளர்களுக்கு இல்லை.
           இந்த சூழ்நிலையில் தான் கடந்த இருபது நாட்களுக்கு முன்னர், இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம்  மூன்றாவது முறையாக ஆன்லைன் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை  அறிமுகப்படுத்தி, அவசர அவசரமாக இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டினை 49 சதவீதமாக உயர்த்தும் மோடி அரசின் அறிவிப்பு வெளியானதும் இந்த பாடத்திட்டம் மற்றம் பற்றிய அறிவிப்பும் வெளியானது. இந்த புதிய பாடத்திட்டத்தில் 20 பாடங்கள் உள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த பாடத்திட்டத்தில் 15 பாடங்கள் மட்டுமே இருந்துவந்தது. அதற்கும் முந்தைய முதலாவது பாடத்திட்டத்தில் 11 பாடங்கள் மட்டுமே இருந்துவந்தன. அந்த இரண்டு பழைய  பாடத்திட்டங்களும், ஆன்லைன் தேர்வுகளும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாமல் அவரவர் மாநில மொழிகளிலும் இருந்தன. ஆனால் இப்போதோ இந்த புதிய பாடத்திட்டமும், ஆன்லைன் தேர்வும் மாநில மொழிகளில் இல்லை. மாநில  மொழிகள் தூக்கி எரியப்பட்டன. மாறாக பாடமும், தேர்வும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே. அதுமட்டுமல்ல முகவர் பணிக்கு அவ்வளவு கடினமான பாடங்களாகவும் இருக்கின்றன. 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்த இளைஞர்களும், வீட்டிலிருக்கும் பெண்களும், கிராமப்புற இளைஞர்களும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் படிப்பதும் தேர்வு எழுதுவதும் என்பது இனி சிரமமாக இருக்கும்.
                மத்திய அரசின் இந்த செயல் என்பது கண்டிக்கத்தக்கது. வேலை கிடைக்காமலும், வாங்குகிற ஊதியம் பற்றாமலும் இன்சூரன்ஸ் முகவர் தொழிலை நாடி வரும் இளைஞர்களை விரட்டியடிக்க மத்திய அரசு முனைந்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. எனவே புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு  முன்பு  பொதுத்துறை எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிர்வாகத்தையும், முகவர் சங்கத்தையும் கலந்து ஆலோசனைப்பெற்று பின் நடைமுறைப்படுத்தவேண்டும்.
            எனவே புதிய பாடத்திட்டத்தை திரும்பப்பெற்று, முகவர் பணிக்கு வேண்டிய அளவில் சுலபமான மற்றும் குறைவான பாடங்களைக் கொண்ட பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு மாநில மொழிகளிலும் படிப்பதற்கும், தேர்வு எழுதுவதற்கும் அனுமதிக்கவேண்டும். இலையென்றால் வேலைதேடும் இளைஞர்கள் மத்திய அரசை எதிர்த்து போராடுவார்கள்.

1 கருத்து:

bandhu சொன்னது…

இதுவும் எல் ஐ சியை ஒழிக்க போடும் ஒரு திட்டமே. எளிமையான ஒரு கட்டுப்பாடு ஏற்கனவே இருக்கிறது. ஒரு முகவர் நன்றாக பிசினெஸ் செய்ய முடிந்தால் அவர் ஒரு வெற்றியாளர். இல்லையேல் இல்லை. இதில் எந்த அளவு இந்த தேர்வுகள் நல்ல முகவரை அடையாளம் காட்ட உதவும் என்று தெரியவில்லை.