வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

தமிழக மக்களே... மீண்டும் மீண்டும் முதலமைச்சர்களை திரையரங்கில் தேடாதீர்கள்...!

                 
           அண்மையில் பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக மாநிலத்தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதிலிருந்து தமிழக சட்டமன்றத்தின் மீது தனது பார்வையை திருப்பியிருக்கிறார். இதுவரையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட இல்லாத தமிழக சட்டமன்றத்தை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கான திட்டத்தில் இறங்கியிருக்கிறார். அதற்கு வருகிற   2016 - ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தமிழக சட்டமன்றத்தேர்தலில், நாடாளுமன்றத்தேர்தலை போன்று ஏதாவது ''மோடி வித்தையை'' காட்டி தமிழக மக்களை கவர்ந்திழுக்க பல்வேறு திட்டங்களை தீட்டிவருகிறார். அந்த நேரத்தில் அவர்கள் மூலையில் உதித்த திட்டம் தான், ''ரஜினிகாந்த வலையை'' போட்டு தமிழக மக்களை சிக்கவைத்து ஓட்டுகளை பெருவது என்ற முயற்சியில் முனைப்புடன் ஈடுபட தொடங்கியிருக்கிறார்கள்.
            அதன் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்தை பாரதீய ஜனதாக்கட்சியில் இழுப்பதற்கு ''தூது விடும் படலத்தில்'' இறங்கியிருக்கிறது பாஜகவின் தமிழக தலைமை. அதுமட்டுமல்ல... இன்னுமொரு படி மேலே போய், ''பிரதமர் வேட்பாளராக'' மோடியை அறிவித்து மோடி வித்தை காட்டியது போல்,  நடிகர் ரஜினிகாந்தை ''முதலமைச்சர் வேட்பாளராக'' அறிவித்து ''காந்தவலை'' விரித்து தமிழக மக்களை ஈர்ப்பது வரையில் பாரதீய ஜனதாக்கட்சி யோசித்துவருகிறது. பாஜகவின் இந்த பகல் கனவு நனவாகுமா ஆகாதா என்பது நடிகர் ரஜினிகாந்த் சொல்லும் பதிலில் தான் இருக்கிறது என்பது  வேறு விஷயம். 
             இதிலிருந்து நமக்கு ஒன்று மட்டும் புரிகிறது. தமிழ்நாட்டில் நடிகர் - நடிகைகளை காட்டினால் தான் தங்களுக்கு வெற்றிபெருமளவிற்கு ஓட்டு கிடைக்கும் என்பதை தமிழகத்திலிருக்கும் அரசியல் கட்சிகள் புரிந்துவைத்திருக்கின்றன என்பது நமக்குப் புரிகிறது. அதிலும் மாநில முதலமைச்சராக ஒரு நடிகரை தான் தேர்ந்தெடுப்பார்கள் என்கிற அளவிற்கு தமிழக மக்களை புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது உண்மையிலேயே நாமெல்லாம் வெட்கப்படவேண்டும். ஏனென்றால் 1967-ஆம் ஆண்டிலிருந்து தமிழக மக்கள் தமிழகத்தின் முதலமைச்சரை திரைப்படத்தில் தான் தேடி கண்டுபிடித்து தேர்ந்தெடுத்து உட்காரவைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இன்றுவரையில் நடிகர்களை நம்பித்தான் தமிழகத்தின் ஆட்சியை ஒப்படைக்கிறார்கள்.  அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர்., வி.என். ஜானகி, ஜெயலலிதா ஆகிய முதலமைச்சர்கள் திரைப்படத்திலிருந்து வந்தவர்களே. அதுமட்டுமல்ல, தமிழக மக்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரத்குமார், ராதாரவி, விஜயகாந்த் போன்றவர்களை சட்டமன்றத்திற்கும், எஸ்.எஸ்.சந்திரன்,  ராமராஜன், நெப்போலியன் போன்றவர்களை பாராளுமன்றத்திற்கும் அனுப்பிவைத்து அழகு பார்த்தார்கள். திரைப்படத்தில் முகம் காட்டினால் போதும், மக்களின் மனதில் இடம்பிடித்து விடலாம். பின்பு அதே மக்களின் ஆதரவோடு சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் இடம் பிடித்துவிடலாம் என்றும், அடுத்து முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து விடலாமென்றும் தான் திரைப்பட நடிகர்களும் நடிகைகளும் அரசியலுக்குள் நுழைகிறார்கள். நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்தவர்களையும், தியாகம் செய்தவர்களையும் ஓரங்கட்டிவிட்டு, வருமானம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு அரிதாரம் பூசி கோடிக் கோடியாய் சம்பாதித்து அரசுக்கு கட்டவேண்டிய வரியை கூட முழுமையாக கட்டாமல் ஏமாற்றும் நடிகர் - நடிகைகளை இந்த நாட்டின் முதலமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து உட்காரவைப்பது என்பது தமிழகத்தின் சாபக்கேடாகப் போய்விட்டது. 
                 தமிழக மக்களே... ஒரே ஒரு வேண்டுகோள் ....!  இனிமேலும்  தமிழக முதலமைச்சரை திரையரங்குகளிலும், திரைப்படங்களிலும் தேடாதீர்கள். கடந்த 47 ஆண்டுகளாக தமிழகம் சீரழ்ந்தது போதும். இனிமேலாவது மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் உயர்வுக்காகவும், உண்மையான அரசியல் விடுதலை, சமூக விடுதலை மற்றும் பொருளாதார விடுதலைக்காகவும் வீதியில் இறங்கிப் போராடுபவர்களை தேர்ந்தெடுங்கள்.  உங்கள் முதலமைச்சரை பொதுமக்களிடம் தேடுங்கள். வீதியில் மக்கள் கூட்டத்தில் தேடுங்கள். போராட்டக்களத்தில் போராளிகள் மத்தியில் தேடுங்கள். இன்று வீதியில் உங்களுக்காக முழங்கிக்கொண்டிருப்பார்கள். நாளை உங்களுக்காக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் உங்களுக்காக உழைத்திடுவார்கள் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல். சிந்தித்து பாருங்கள்.  

கருத்துகள் இல்லை: