செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

காங்கிரஸ் கட்சியின் பேரம் இன்னும் படியவில்லை...!

                  ''புலி வருது... புலி வருது...'' என்பது போல ''வருது... வருது... இதோ இன்சூரன்ஸ் மசோதா மாநிலங்களவையில் வருது...'' என்று கடந்த வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய தினங்களில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி அபாய சங்கு ஊதிக்கொண்டே இருந்தது. ஆனால் மாநிலங்களவையில் தங்கள் கட்சி உறுப்பினர்களை கொண்டுள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எட்டு கட்சிகளும் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வுக்கான அந்த மசோதாவை பலமாக எதிர்த்தன. அந்த மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட நிலைக்குழுவுக்கு அனுப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் மாநிலங்களவைத் தலைவரிடமும் அளித்துள்ளனர். இதுல என்ன ஒரு ஆச்சரியம் என்றால்...? இன்சூரன்ஸ் மசோதாவை எதிர்க்கிற எட்டு எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒன்று என்பது தான் வேடிக்கையான விஷயம். ஏனென்றால் சென்ற ஆட்சி காலத்தில் தான் ஆளுங்கட்சியாக இருந்த இதே காங்கிரஸ் கட்சி இதே மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. அன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மசோதா இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் போனது. 
               ஆனால் பாரதீய ஜனதாக்கட்சி பாராளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று பதவியில் அமர்ந்தவுடன் பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை உயர்த்தி அதை அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பரிசாக அளிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் தான் அந்நிய நேரடி முதலீட்டு உயர்வுகளில் இத்தனை வேகத்தை காட்டுகிறது. ஆரம்பத்தில் இந்த இரு துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை பற்றிய தனது ஆசையை மத்திய அரசு வெளியிட்டப்போது, தனக்கு நிராசையாய் போன இந்த ''உயர்வை'' காங்கிரஸ் கட்சி வரவேற்றது மட்டுமல்ல. அந்த மசோதா கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றும் அறிவித்தது. ஆனால் அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி தான் இப்போது திடீரென அந்த மசோதாவை வரவிடாமல் எதிர்க்கின்றது. 
              காங்கிரஸ் கட்சிக்கு அப்படி என்ன திடீர் ஞானோதயம் வந்து விட்டது  மசோதாவை எதிர்க்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டு விடாதீர்கள். தேர்தல் படுதோல்வியால் திருந்திவிட்டார்களோ என்று மகிழ்ச்சிக்கொள்ளாதீர்கள். அப்படியெல்லாம்  அதிசயம் ஒன்றும் நடந்துவிடாது. பாரதீய ஜனதாக்கட்சியிடமிருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு காரியம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கான பயமுறுத்தலே இந்த மசோதா எதிர்ப்பு போராட்டம். பன்றி வேண்டுமானால் தான் ஈன்ற குட்டியையே சாப்பிட்டுவிடும். ஆனால் காங்கிரஸ் கட்சி தான் ஈன்ற ''ராட்சச குட்டியான'' இன்சூரன்ஸ் மசோதாவை தானே தின்று கொன்று விடாது. அப்படி செய்தால் பன்றிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். எனவே காங்கிரஸ் கட்சியின் இந்த மசோதா எதிர்ப்பு என்பது தற்காலிகமானதே. பாரதீய ஜனதாக் கட்சியை பணியவைப்பதற்கான ஆயுதம் தானே தவிர வேறொன்றும் இல்லை. 
            பாரதீய ஜனதாக்கட்சியினால் காங்கிரஸ் கட்சிக்கு அப்படியென்ன ஆகவேண்டியிருக்கிறது என்று கேட்டால், நாடாளுமன்றத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு மக்களவையில் இரண்டாவது பெரியக்கட்சியான காங்கிரஸ் கட்சியானது, போதுமான எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாததால் ''எதிர்க்கட்சித் தலைவர்'' அந்தஸ்தை இழந்தது. ஆனால் மக்களவையில் இரண்டாவது பெரிய கட்சி என்ற வகையில் எண்ணிக்கையெல்லாம் பார்க்காமல் காங்கிரஸ் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்படவேண்டும் என்று மன்றாடிப்பார்த்தது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியோ காங்கிரஸ் கட்சிக்கு அப்படியொரு அந்தஸ்தை கொடுப்பதற்கு தயாராக இல்லை. அந்த அந்தஸ்தை பெறுவதற்கு  வேண்டித்தான், காங்கிரஸ் கட்சியானது குறுக்கு வழியில் இப்படியொரு பயமுறுத்தல் நாடகத்தை நடத்துகிறது. தனக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்பட்டுவிட்டால், 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை அனுமதிக்கும் இன்சூரன்ஸ் மசோதாவிற்கு தாராளமாக ஆதரவளிக்கும் என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை: