ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

மோடி விஷயத்தில் மட்டும் ஜெயலலிதாவும், கருணாநிதியும் எப்படி ஒத்துப்போனார்கள்...?

                       இந்திய அரசியலிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் திராவிடக்கட்சிகளான அதிமுகவும், திமுகவும் ஆளும்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் மாறிமாறி இருந்துகொண்டு எப்போது எதிரெதிர் திசையில் தான் நின்று கொண்டிருப்பார்கள். அந்த இருக்கட்சிகளின் தலைவர்களாகிய ஜெயலலிதாவும், கருணாநிதியும் எந்த ஒரு விஷயத்திற்கும் ஒத்துப்போகமாட்டர்கள். இருவருக்கும் அப்படியொரு ஏழாம் பொருத்தம். சட்டமன்றத்தில் கூட இருவரும் ஒருவரையொருவர் நேரிடையாக சந்தித்ததுக் கூட கிடையாது. ஏதோ  வாய்க்கால் தகராறில் இந்த இருவரும் பகையாளியாக மாறிவிட்டார்கள். தமிழகத்தின் தலையெழுத்து இருவரும் மாறிமாறி ஆட்சிக்கு வருவார்கள். ஒருவர் போட்ட திட்டத்தை இன்னொருவர் மாற்றிவிடுவார். இவர் பெயரை அவர் ஆட்சிக்கு வந்ததும் அழிப்பதும், அவர் பெயரை இவர் ஆட்சிக்கு வந்ததும் அழிப்பதும் தமிழகத்தின் சாபக்கேடாகும். 
              ஒரு நிகழ்வுக்கு இருவரும் இருவேறு கருத்துகளை தான் இதுவரையில் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பது தான் தமிழகம் கண்ட உண்மை. ஜெயா டிவியையும், கலைஞர் டிவியையும் மாற்றி மாற்றிப்பார்த்தாலேயே நமக்கு புரியும். பார்க்கிற நமக்கே  பைத்தியம் புடிச்சிடும். இப்படிப்பட்ட இவர்கள்  தான் அண்மைக் காலமாக  நம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கிறார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெற்று நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் பாஜக விஷயத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒற்றுமையாகிவிட்டார்கள். மோடியின் முதல் மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அது ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட்டாக இருந்தாலும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒரேக் குரலில் அந்த பட்ஜெட்டை வரவேற்றுப் பாராட்டினார்கள். இத்தனைக்கும் பாஜக கூட்டணியில் இந்த இருவரும் இல்லை. அதைப்பார்த்த தமிழக மக்களுக்கு  ஆச்சரியமும்,  அதிசயமாகவும் போய்விட்டது.
                அது தான் அப்படின்னா... நேற்று தான் தமிழிசை சவுந்தரராஜன் என்பவர் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.   இது ஒரு ஆளுங்கட்சியில் நடைபெறுகின்ற வழக்கமான நிகழ்வு தான். செய்தி வெளியே வந்தது தான் தாமதம். ஆளுங்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை பாராட்டுவதில், வாழ்த்துவதில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்றாகிவிட்டார்கள். இப்போது மீண்டும் தமிழக மக்களுக்கு ஆச்சரியமும், அதிசயமாகவும் போய்விட்டது. 
               பாஜக விஷயத்தில் மட்டும் இந்த இருவரும் எப்படி ஒத்துப்போகிறார்கள். இவர்கள் மீதும்,  இவர்களின் குடும்பத்தார் மீதும் உள்ள ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க இந்த இருவருக்கும் பாஜகவின் தயவு தேவைப்படுகிறது என்பது தான் இவர்களின் இந்த ஒற்றுமைக்கு காரணம் என்பது நாம் சொல்லாமலேயே தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

//// பாஜக விஷயத்தில் மட்டும் இந்த இருவரும் எப்படி ஒத்துப்போகிறார்கள். இவர்கள் மீதும், இவர்களின் குடும்பத்தார் மீதும் உள்ள ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க இந்த இருவருக்கும் பாஜகவின் தயவு தேவைப்படுகிறது என்பது தான் இவர்களின் இந்த ஒற்றுமைக்கு காரணம் என்பது நாம் சொல்லாமலேயே தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்.///

அதுதான் உண்மை.