வியாழன், 7 ஆகஸ்ட், 2014

அனாதை இரட்சகனாக மாறிய நரேந்திர மோடி....!

              
            சென்ற ஆண்டு கேதார்நாத்தில் மலையை உடைத்துக்கொண்டு பொங்கி எழுந்த கங்கை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு தவித்த பொதுமக்கள் கூட்டத்தில், மக்களோடு மக்களாய் உயிர் பிழைப்பதற்கு போராடிக்கொண்டிருந்த 10,000 குஜராத் மாநில மக்களை ''மட்டும்'' தனியாக பொருக்கி எடுத்து தான் சென்ற தனி விமானத்தில்  அவர்களை ''மட்டும்'' காப்பாற்றி குஜராத்திற்கு அழைத்து வந்ததாக ட்வீட்டரிலும், பேஸ் புக்கிலும் போட்டு தன்னை ஒரு ''சக்திமானாக - அனுமானாக'' காட்டிக்கொண்டார் நரேந்திர மோடி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
            அண்மையில் இராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய நாட்டிலிருந்து அங்கு வேலைக்கு சென்ற நர்சுகள் 58 பேரை இவரே நம்ம விஜயகாந்த் போல் தீவிரவாதிகளிடம் தாவித்தாவி சண்டைப்போட்டு அழைத்து வந்ததாக மோடியின் அமைச்சர்கள் பாராளுமன்றத்திலேயே தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள். இதற்காக எதிர்காலத்தில்  ''கேப்டன் நரேந்திர மோடி'' என்று கூட அழைக்கப்படலாம்.        
         இவைகளெல்லாம் ஒரு புறமிருக்க, சென்ற ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் பக்கத்து நாடான நேபாளத்திற்கு நரேந்திர மோடி சென்றிருந்தார். போகும் போது சும்மா வெறுங்கையோடு போகவில்லை. 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது பத்து வயதில் ஜித்பகதூர் என்ற சிறுவன் நேபாளத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த போது குஜராத்தில் தொலைந்து போக,   அந்த சமயத்தில் ''தெய்வாதீனமாக - அதிர்ஷ்டவசமாக''  நரேந்திர மோடியின் கண்களில் அந்த சிறுவன் பட்டுவிட, அந்த ஆபத்தாண்டவனும் அநாதை இரட்சகனுமான நரேந்திர மோடி அந்த சிறுவனை காப்பாற்றி உடனடியாக அந்த பையனின் பெற்றோர்களிடம் சேர்க்காமல், ''நான் ஒரு நாள் இந்த நாட்டின் பிரதமாராக வருவேன். அன்று உன்னை அழைத்துக்கொண்டு நேபாளம் சென்று, தெருத்தெருவாய் உன் ''குடும்ப பாட்டை''  பாடி உன் பெற்றோர்களை கண்டுபிடித்து அவர்களிடம் நான் சேர்த்துவிடுகிறேன்'' என்று அந்த 10 வயது சிறுவனை கடந்த 16 ஆண்டுகளாக வளர்த்துவந்திருக்கிறார்.
              இப்போது நரேந்திர மோடி பிரதமர் ஆகிவிட்டபடியால் தான் அன்று அந்த சிறுவனுக்கு உறுதியளித்தது போல், இன்றைக்கு 26 வயது இளைஞனான ஜித்பகதூரை கூட்டிக்கொண்டு நேபாளம் நோக்கி பறந்தார். அனுமான் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு பறந்தது போல், மோடி தன் தோளில் போட்டு வளர்த்த அந்த இளைஞனை தூக்கிக்கொண்டு இமயமலைகளை தாண்டிப் பறந்து சென்று,  கடந்த 16 ஆண்டுகளாக தொலைந்துபோன தன் மகனுக்காக காத்திருந்த நேபாளப் பெற்றோர்களிடம் பத்திரிக்கையாளர்கள் புடைசூழ கண்கள் கலங்க ஒப்படைத்தார். ''பெற்றால்தான் பிள்ளையா'' என்ற பழைய எம்ஜிஆர் படம் பார்த்த மாதிரி இருக்கு இல்ல...? இந்த செய்திகளை உணர்வுமயமாக நேபாளப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வெளியிட்டன. நேபாள மக்களும் அநாதை இரட்சகனான நரேந்திர மோடியின் இந்த செயலைப்பார்த்து நெகிழ்ந்து போனார்கள். வழக்கம் போல் மோடியும் தன்னுடைய ட்வீட்டரில் அந்த புகைப்படங்களை போட்டு தன்னுடைய ''சாகச செயல்களை'' பற்றி பதிவு செய்திருந்தார்.
               அதன் பிறகு தான் தெரிகிறது. நரேந்திர மோடி அழைத்துச்சென்ற அந்த இளைஞன் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2012 - ஆம் ஆண்டிலேயே நேபாளத்தில் தன பெற்றோர்களை சந்தித்திருக்கிறான் என்பதும், அந்த இளைஞனே அந்த சந்திப்பின் புகைப்படத்தை அன்றைய தினமே தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருக்கிறான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.
               ம்ம்ம்ம்ம்..... இன்னும் ஐந்து ஆண்டுகளில் நரேந்திர மோடியின் ''சாகசங்களை'' இன்னும் என்னென்ன பார்க்கப்போகிறோமென்று தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: