சனி, 16 ஆகஸ்ட், 2014

''அஞ்சான்'' நரேந்திர மோடி...!

                நேற்று டெல்லி செங்கோட்டையில் 68-ஆவது இந்திய சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, அண்மையில் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடி முதன்முறையாக மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். அதில் என்ன அதிசயமென்றால் ராஜீவ் காந்தி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பிறகு பதவிக்கு வந்த அனைத்து பிரதமர்களும் - நரசிம்ம ராவிலிருந்து மன்மோகன் சிங் வரையில் அனைத்து பிரதமர்களும் செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றும் போது குண்டுத்துளைக்காத கண்ணாடிக்கூண்டுக்குள் அடைக்கப்படுவது தான் வழக்கமாகவும் மரபாகவும் இருந்துவருகிறது.  இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய இரண்டு பிரதமர்கள் வெவ்வேறு தீவிரவாதிகளால் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால் பாதுகாப்புக் கருதி செய்யப்பட்ட ஏற்பாடுகள் அது.
      ஆனால் தன்னை அவ்வப்போது ஒரு ''ஜாம்பவானாகவும், சக்திமானாகவும், அனுமானாகவும்'' காட்டிக்கொள்ளும் தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி நேற்று 68-ஆவது சுதந்திர தினத்திற்கு கொடியேற்ற செங்கோட்டைக்கு வந்தபோது தன்னை ஒரு ''அஞ்சானாக'' காட்டிக்கொண்டிருக்கிறார். ஆம்...உண்மையிலும் உண்மை... அவர் கோட்டையில் கொடியேற்றி மக்களிடம் உரையாற்றும் போது வழக்கமாக போடப்படும் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்படவில்லை. கோட்டைக்கொத்தளத்தில் திறந்தவெளி மேடையில் நின்றுகொண்டு உரையாற்றி, விழாவிற்கு நேரில் வந்திருந்த மக்களையும், தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த மக்களையும் மெய் சிலிர்க்கச்செய்துவிட்டார்  என்பதுதான் உண்மை. இதுவரை எந்த பிரதமரும் செய்யாத சாகசம். இதை பார்த்த பின் மக்கள் தன்னை ''அஞ்சான்'' என்று அழைக்கச்செய்துவிட்டார் என்றால் பாருங்களேன். அந்த மேடையில் அவரது உடையலங்காரம் என்ன.... பேசிய வீர வசனம் என்ன.... கம்பீரமான நடை என்ன.... இவரையே சுற்றிச்சுற்றி வந்து வெவ்வேற கோணங்களில் படமெடுத்த கேமராக்கள்  என்ன... விழாவிற்கு வந்திருந்த பள்ளிக் குழந்தைகளைப் பார்த்து பாதுகாப்பு வளையத்தை விட்டு ஓடிய பாசம் என்ன... அடடா... அடடா.... புல்லரிக்குது. சூரியா என்ன... இவர் தான் உண்மையான ''அஞ்சான்''

கருத்துகள் இல்லை: