செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

கூவி விற்கப்பட்ட மருத்துவக்கல்லூரி சீட்டுகள்...!

          தாராளமயம், தனியார்மயம், உலகமயம் இந்தியாவிற்குள் நுழைந்த பிறகு அரசிடமிருந்த அனைத்துத் துறைகளும் இலாபம் கொழிக்கும் ''அக்சயபாத்திரமாக'' தனியாரிடம் தாராளமாக ஒப்படைக்கப்பட்டது. அப்படியாகத்தான் அரசின் கைவசமிருந்த கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்றவைகளும் அந்த மயங்களில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. மக்களுக்கு இலவசமாய் கொடுக்கப்பட்ட  மருத்துவம் இலாபம் கொட்டும் ''கற்பகவிருட்சமாக'' மாறிப்போனது. மருத்துவத்துறையில் தனியார் நுழைந்ததால் மருத்துவம் வணிகமயமானது. பின்னர் கல்வி, சுகாதாரம், மருத்துவம் என இவைகள் இணைந்த மருத்துவக்கல்வி என்பது பணம் கறக்கும் ''காமதேனுவாக'' தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் மருத்துவக்கல்வியும் வணிகமயமானது. இன்றைக்கு மருத்துவக்கல்லூரி இடங்களை  பல இலட்சங்களுக்கு கூவி கூவி விற்பதை நானே நேரில் பார்த்து மிரண்டு போனேன். 
          அண்மையில் பிளஸ் டூ தேர்வு எழுதிய என் மகள் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற இலட்சியத்தோடு படித்து தேர்வு எழுதி மருத்துவ படிப்புக்கு தேவையான அளவிற்கு நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிப்பெற்றார். பிளஸ் டூ தேர்வு முடிவு வருவதற்கு முன்பும், வந்த பின்பும் புதுடெல்லி AIIMS, அனைத்து மருத்துவக்கல்லூரிக்கான AIPMT மற்றும்  JIPMER என மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த முறைதான் முதன்முறையாக  மருத்துவக்கல்லூரி விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி கேட்டிருந்தார்கள். விண்ணப்பங்கள் பற்றிய முறையான தகவல்களை நமக்கு சொல்வதற்கும், தேர்வு சம்பந்தமான தகவல்களை தெரிவிப்பதற்கும்  நம்முடைய கைப்பேசியின் எண்ணையும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடும்படி கேட்கிறார்கள். நாங்களும் கைப்பேசி எண்ணை குறிப்பிட்டோம். அங்கு தான் வந்தது வினை.
              விண்ணப்பத்தில் கேட்கப்பட்டு, நாம் அளித்திருக்கும் அத்தனை தகவல்களும் ரகசியமானது என்றும்,  அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வெளியே மற்றவர்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை என்றும் தான் நாம் கைப்பேசி மற்றும் இ-மெயில் பற்றிய தகவல்களை நம்பிக்கையின் பேரில் தருகிறோம். ஆனால் மேற்கூறிய மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டனர். வெளியே மருத்துக்கல்லூரிகளில் சீட் வாங்கித்தரும் புரோக்கர்கள் அவர்களை நன்கு ''கவனித்ததில்'' மயங்கி போய் விண்ணப்பதாரர்களின் கைப்பேசி எண்களை காசு பெற்றுக்கொண்டு விற்றிருக்கிறார்கள். இதில் கூட ஏகப்பட்ட புரோக்கர்கள் இருக்கிறார்கள் என்பது அப்போது தான் நமக்கே தெரிந்தது. ஆனால் ரொம்ப நாகரீகமா ''கன்சல்ட்டாண்ட்'' என்று பெயர் வைத்துக்கொண்டு  ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்பியதிலிருந்து இன்றுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட SMS-கள் அழைப்புகளும் நாங்கள் கேட்காமலேயே  என்னுடைய கைபேசிக்கு அனுப்பிக்கொண்டு தான் இருக்கின்றன. நிறுத்த முடியவில்லை. ''உங்களுக்கு மருத்துவக்கல்லூரியில் சீட் வேண்டுமா...? எங்களை அணுகுங்கள்... நாங்கள்  குறைந்த செலவில் வாங்கித்தருகிறோம். தேர்வு முடிவு வருவதற்கு முன்பே அணுகினால் குறைவான செலவே ஆகும்...தமிழ்நாட்டில் எந்த மருத்துவக்கல்லூரியில் இடம்  வேண்டும்...?  வெளிநாடுகளில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கவேண்டுமா...? சீனா, ரஷ்யா, சிங்கப்பூர், மொரீஷியஸ், மாலத்தீவு, நேபாளம் என பல்வேறு நாடுகளில் ஆண்டுக்கு 15 இலட்சம் தான்... 13 இலட்சம் தான்... ''என இன்றைக்கு ஒரு  இலட்சம் வரை கூவி கூவி விற்கிறார்கள். இதற்கும் மேலாக இந்த கட்டணத்தை கட்டுவதற்கு ''கல்விக்கடன்'' வேறு ஏற்பாடுகள் செய்து தருகிறார்களாம்.
            இதுல இன்னொரு கொடுமை என்னன்னா... நேரம் காலமே இல்லாம இந்த SMS-கள்  வரும். சில நேரங்களில் இரவு, விடியற்காலை என நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கூட வரும். இரவு நேரத்தில் அவசரமாக இரத்தம் கேட்டு சிலர் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். அது தானோ என்று அலறி அடித்துக்கொண்டு ஏதாவது முக்கியமான செய்தியாக இருக்கப்போவுது என்று பார்த்தால், கடைசியில் இந்த செய்தியாகத் தான் இருக்கும். கோபமா வரும்.
         இது மட்டுமில்லாமல் இல்லாம, நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புத் தொல்லைகள்  வேறு. இதெல்லாம் என்னுடைய சகிப்புத்தன்மைக்கே சோதனையாய் போய்விட்டது. ''உங்க பொண்ணுக்கு மெடிக்கல் சீட் வேண்டாமா...? உங்க பொண்ணு மெடிக்கல் படிக்கணும்னு இண்டரெஸ்ட் இருக்கா...?'' என்று  இப்படியெல்லாம் எரிச்சலான கேள்வியெல்லாம் கேட்பாங்க. சில சமயங்களில் எரிச்சல் தாங்கமுடியாமல் கோபமாய் கூட பேசியிருக்கிறேன்.
                இதுல ஒரு சந்தேகம் என்னவென்றால்...? அவர்களை நம்பி நாம் தருகிற இரகசியத் தகவல்களை காற்றில் பறக்கவிடுவது சரிதானா...? அதுவும் மத்திய அரசு நிறுவனங்களே இப்படியாக கைப்பேசி எண்களை காசு வாங்கிக்கொண்டு விற்றிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்  போது நமக்கெல்லாம் கோபம் தான் வருகிறது.
          இனியாவது மத்திய அரசும், அந்த மருத்துவக்கல்லூரிகளும் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை: