செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணம் வசூலிப்பு நியாயமற்றது...!

          ''ஜிப்மர்'' இந்தியாவின் நுழைவாயிலிலேயே இருக்கின்ற மருத்துவமனை. 1964 - ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில்  வெளி சிகிச்சை, அறுவை சிகிச்சை, உள் சிகிச்சை, மருத்துவ பரிசோதனை மற்றும்  மருந்துகள்  அத்தனைத்தும்  இலவசம். புதுச்சேரியில் வாழும் மக்கள்  மட்டுமல்ல, சுற்றியிருக்கின்ற கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்தும்  அன்றாடம் ஆயிரக்கணக்கில் மக்கள்   இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துகொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா , கேரளா   மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் மக்கள் சிகிச்சைக்காக இங்கே தான் வருகிறார்கள். தினந்தோறும் இங்கு வரும் ஆறாயிரம் ஏழை எளிய  மற்றும் உழைப்பாளி மக்களுக்கு நம்பிக்கையான - தரமான  சிகிச்சையளிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு இங்கு வருகிற நோயாளிகளுக்கு ''நாங்க இருக்கோம்'' என்று  நம்பிக்கையையும் சிறந்த சிகிச்சையையும் அளிக்கின்றனர்.
            அப்படிப்பட்ட மருத்துவமனையை ஏழை - எளிய மக்களிடமிருந்து பறிப்பதற்கென்றே அண்மையில் ஆகஸ்ட் 16 - ஆம் தேதியிலிருந்து நோயாளிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்றனர். திடீரென்று கட்டணம் வசூலிப்பது என்பது நியாயமற்றது. மிகவும் கண்டிக்கத்தக்கது.
              இவ்வளவு நடக்குது... புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாராயணசாமி மற்றும்  மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் இருவருமே வாயில கொழுக்கட்டை வெச்சிகிட்டு இருக்காங்க. மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூட இதை எதிர்த்து வாயை திறக்கவில்லை. இந்த கட்டணம் வசூலிக்கும் முறையை பற்றி  இந்த மூவருமே  கண்டுகொள்ளவே இல்லை என்பதை மக்கள் தான் கவனிக்க வேண்டும்.
             இதைக் கண்டித்து வழக்கம் போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டண முறையை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் ஒன்று   ஏற்பாடு  செய்யப்பட்டது. அந்த கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவரது புதுவை வருகைப் பின்னர் போராட்டம் வலுப்பெறுகிறது.

1 கருத்து:

வவ்வால் சொன்னது…

இந்த நாட்டில் எல்லாம் கட்டணம் ஆகிவிட்ட நிலையில் இதையும் விட்டு வைப்பார்களா?

அது சரி மாநில முதல்வருக்கு பிளெக்ஸ் பேனரில் அவதாரம் எடுக்கவே நேரம் போதாது இதை எங்கே கவனிக்க போகிறார்.

ஜிப்மெர் மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும் மாநில முதல்வர் ஒப்புதல் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பேயில்லை.