திங்கள், 13 ஆகஸ்ட், 2012

மம்தாவின் சர்வாதிகாரம் இன்னும் அடங்கவில்லை...!

        விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை தன்னிடம் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி. மம்தாவின் ஆணவமும், அடாவடித்தனமும், சர்வாதிகார போக்கும் இன்னும் அடங்கியப்பாடில்லை. மேற்குவங்கத்தின் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் பெல்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பேசிய மம்தா தன் சாதனையை அடுக்கிக்கொண்டே இருந்தார். அந்த கூட்டத்திலிருந்த விவசாயி ஒருவர் மம்தாவின் பேச்சில் எரிச்சலடைந்து, மம்தாவை நோக்கி “கடன் பிரச்சனையால் விவசாயிகள் பணம் இல்லாமல்  மடிந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் வாக்குறுதிகள் போதாது. எங்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்” என்று கேட்டிருக்கிறார். அதை கேட்டதும்  உடனே மம்தாவிற்கு வந்ததே கோபம். ''பிடி சாபம்'' என்று கொதித்தெழுந்தார். அந்த விவசாயியை அப்புறப்படுத்துமாறு காவலர்களுக்கு மேடையில் இருந்தபடியே மம்தா ஆணையிட, காவலர்களும் அந்த விவசாயியை அங்கிருந்து அப்புறப்படுத்தி நன்றாக ''கவனித்து'' அனுப்பியிருக்கிறார்கள். 
            அப்படியும் மம்தாவிற்கு ஆத்திரம் அடங்கவில்லை. அதை புரிந்துகொண்ட காவலர்கள் மறுநாளே அந்த விவசாயியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் என்பது நேற்று முன் தினம் தான் நடைபெற்றது. 
             தனக்கெதிரான விமர்சனங்கள் எங்கிருந்து வந்தாலும், யாரிடமிருந்து வந்தாலும் தாங்கிக்கொள்ள முடியாமல் ''இம்மென்றால் சிறைவாசம்... ஏனென்றால் வனவாசம்'' என்ற சர்வாதிகாரப்போக்கு என்பது மம்தாவை விட்டு அகலவில்லை. கருத்துச்சுதந்திரம் என்பது மம்தாவின் ஆட்சியில் கேள்விக்குறியாய் போனது. கருத்துரிமை கொண்ட ஜனநாயகம் என்பது மேற்குவங்கத்தில் மம்தாவின் ஆட்சியில் செத்துப்போய்விட்டது என்பதை தான் இது போன்ற தொடர் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

veripidiththavargalai makkal appurppaduththavendum