புதன், 1 ஆகஸ்ட், 2012

22 மாநிலங்கள் இருளில் மூழ்கின - உண்மை என்ன..?

ஆட்சியாளர்களின் இலட்சணம்

பாரீர்... - 

இந்திய மக்களே... 

வெளிச்சத்திற்கு வாருங்கள்..!

       தலைநகர் புதுதில்லி உள்பட 22  வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மின் விநியோகம் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களும்  பாதிக்கப்பட்டது. இதனால் 22 மாநிலங்களில் வாழும் 60 கோடி மக்களும் இருளில் மூழ்கினர். அதுமட்டுமல்லாது, மின்சார ரயில் சேவைகளும்  முற்றிலும் ஸ்தம்பித்தன.

           வடக்கு மின் தொகுப்பில் ஏற்பட்ட பாதிப்பால் புதுதில்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது நடந்து 48 மணி நேரத்திற்குள் மீண்டும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
             நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மின் தொகுப்புகளில் செவ்வாயன்று பிற்பகல் 1.07 மணிக்கு மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தில்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட 13 வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள், 7 வடகிழக்கு மாநிலங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
            இதையடுத்து தில்லியில் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 300 மின்சார ரயில்கள் இயங்கவில்லை. மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள், குறிப்பாக அரசு மருத்துவமனைகள் அல்லாடி வருகின்றன.
                  மின்தொகுப்பு கோளாறால் பாதி இந்தியாவில் மின்விநியோகம் இல்லை. இந்த கோளாறை சரி செய்ய 5 முதல் 6 மணி நேரமாகும் என்று மின் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலங்களை குறைகூறும் மின் அமைச்சர் :

                 இது குறித்து மத்திய மின்சாரத்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், பழுதடைந்த 3 மின் தொகுப்புகளை 2 மணிநேரத்திற்குள் சரி செய்யும் முயற்சி நடந்து வருகிறது என்றார். சில மாநிலங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மின்சாரத்தை எடுத்ததால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று புதிய புகாரைக் கூறிய அவர், அதிகமாக மின்சாரம் எடுத்த மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

ஆனால் உண்மை நிலை என்ன?

             ஆனால் உண்மையில் மக்களின் அன்றாட வாழ்வுக்கும், தொழிற்சாலைகளின் இடைவிடாத இயக்கத்திற்கும் ஜீவ நாடியாக விளங்கக் கூடிய மின்சாரத்தை இன்றைய தேவைக்கேற்ப உற்பத்தி செய்வதற்கோ, அதை சேமித்து எவ்வித கசிவும் இன்றி அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு பிரித்து தருவதற்கோ உரிய நவீன ஏற்பாடுகளை செய்யாமல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டே மத்திய மின் தொகுப்புகளை சீர்குலைக்கும் நாச செயலில் ஈடுபட்டு வருகிறது.
          அரசு கொடுக்கும் மின்சாரம் இப்படி சிக்கல் நிறைந்ததாக மாறிவிடும் என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்கும் நோக்கத்துடனேயே இத்தகைய சீர்குலைவு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. இதன் மூலமாக மின்சாரத்துறையை தனியார்மயமாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்து வது மட்டுமல்ல, அமெரிக்கா வுடனான அணுசக்தி உடன்பாட்டின்படி நாடு முழுவதும் அணுமின்நிலையங்கள் ஏற்படுத்தினால்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற திட்டமிட்ட கருத்தை விதைக்கும் நோக்கத்துடனும், காங்கிரஸ் தலைமையிலான அரசு, பொதுத்துறை மின் தொகுப்பு மையங்களை முறையாக பராமரிக்கும் பணிகளை படிப்படியாக கைவிட முனைகிறது.
               இத்தகைய திட்டங்களை கொண்ட மத்திய அரசின் மின் கொள்கையே இன்றைக்கு 22 மாநிலங்கள் இருளில் மூழ்குவதற்கு அடிப்படை காரணமாகும்.
         ஆனால் அதை மறைத்து, மின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் கூடுதலாக மின்சாரத்தை உறிஞ்சுவதாக திருட்டு பட்டம் சுமத்த மத்திய மின்சாரத்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே முனைகிறார்.

நன்றி : தீக்கதீர்  

கருத்துகள் இல்லை: