வியாழன், 16 ஆகஸ்ட், 2012

நீதித்துறையின் மீது மம்தாவிற்கு ஏனிந்த கொலைவெறி....!

             மேற்குவங்க சட்டசபையின் ஆண்டுவிழாவையொட்டி, நேற்றுமுன் தினம் சட்டசபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய  முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, நீதித்துறையை தாறுமாறாக தாக்கிப் பேசியது என்பது நீதித்துறையை சார்ந்தவர்கள்  மட்டுமன்றி, அனைத்துப் பொதுவான மக்களையும் முகம் சுளிக்கச் செய்திருக்கிறது என்பது தான் உண்மை. 
         மம்தா அப்படி என்னா தான் கேட்ட வார்த்தையில பேசியிருப்பார்...? இதோ கீழே...?
''இன்று ஒரு சில தீர்ப்புகள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது. சட்டசபையில் இதை கூறுவதற்கு எனக்கு வருத்தமாக உள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. இதுபோன்ற விசாரணை கமிஷன்களால் எந்த பயனும் இல்லை''
            இதை சொல்லுறதுக்கு ரொம்பத் தான் வருத்தபடுகிறார்களாம்..! மேற்குவங்கத்தில் அடாவடித்தனமான ஆட்சியை நடத்திகினு, இந்த அம்மணி நீதித்துறையை குறை சொல்லுவது என்பதும்,  குற்றம் சொல்லுவது என்பதும் நமக்கெல்லாம் சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. 
            அப்படி என்ன நீதித்துறையின் மீது அப்படியொரு கோபம்...? கொலைவெறி...? இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மனித உரிமை கமிஷன் மம்தாவின் தலையில் ஒரு இடியை தூக்கிப்போட்டது. நான்கு மாதத்திற்கு முன்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரும், அவரது நண்பரும், மம்தாவை விமர்சித்து வலைத்தளங்களில் கார்ட்டூன்  போட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதை யாராலும் மறந்திருக்கமுடியாது. 
                இந்த நிகழ்வுகளை விசாரித்த மேற்குவங்க மனித உரிமை கமிஷன், இரண்டு நாட்களுக்கு முன்னர் தான், பாதிக்கப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் இழப்பீடாகத் தரவேண்டும் என்று மேற்குவங்க மாநில அரசை பணித்தது.
           மனித உரிமை கமிஷன் மாநில அரசுக்கு அனுப்பிய இந்த கட்டளை   என்பது தான்தோன்றித்தனமாகவும் அடாவடித்தனமாகவும் நடந்து கொள்ளும்  மம்தாவின் தலையில் பேரிடியாக விழுந்தது. அதனால் எரிச்சலடைந்த  மம்தா அடுத்த நாளே மாநில சட்டசபையிலேயே - முதலமைச்சர் என்கிற முறையில் தான் இப்படிப் பேசுவது தவறு என்று தெரிந்திருந்தும், அவ்வாறு பேசியிருப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. விஷமத்தனமானது. மேலும் இந்த செயல் என்பது நீதித்துறையை மிரட்டும் செயலாகும். அதுமட்டுமல்ல, ஒரு மாநில முதலமைச்சரே இதுபோல்  விமர்சிப்பதன் மூலம் மாநில மக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையையும் மரியாதையையும்  இழக்கச் செய்யும் என்கிற குறைந்தபட்ச அறிவுக்கூட இல்லாமல் மம்தா நடந்து கொண்டிருப்பது என்பது முதலமைச்சர் பதவிக்கே லாயக்கற்றவர் என்பதையே காட்டுகிறது.

கருத்துகள் இல்லை: