புதன், 15 ஆகஸ்ட், 2012

தானாக கிடைத்ததல்ல சுதந்திரம்...!


          பள்ளி  வரலாற்றுப் பாடத்தில்  இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றிப் படிக்கும் போது ''கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி, யுத்தமின்றி காந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்'' என்கிற வரியை எல்லா வகுப்பிலும் நாம் படித்திருப்போம். அதை படிக்கும் போது, ஏதோ காந்தி மட்டுமே  வெள்ளைக்காரனிடம் கெஞ்சிக்கேட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது போன்ற  ஒரு கருத்தை தான் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும். இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் - குறிப்பாக காங்கிரஸ்காரர்கள் பள்ளிப் பாடப்புத்தகத்தை தங்கள் கட்சிப் பிரச்சாரத்திற்காகவே பயன்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான், இந்த தேசத்திற்கு கிடைத்த சுதந்திரத்திற்கும், அதற்காக நடத்தப்பட்ட போராட்டத்திற்கும் சொந்தக்காரர்களாக காங்கிரஸ்கட்சியையும், காந்தியையும் மட்டுமே காட்டுகின்றனர். அதுவும் வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களைத் தான் குறிப்பிட்டிருப்பார்கள். தென்னிந்தியத் தலைவர்களை - குறிப்பாக காமராஜர், திருப்பூர் குமரன், பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்ற  தமிழகத்தலைவர்களை பற்றி ஒரு சிறு குறிப்புக்கூட காட்டியிருக்கமாட்டார்கள். 
                  நாம் வரலாற்றுப் பாடத்தில் படிப்பது போல் '' ஏதோ  கேட்டுப்பெற்றதல்ல சுதந்திரம்... தானாக வந்ததுமல்ல சுதந்திரம்...''
           ஜாலியன் வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் உயிர்த்தியாகம் செய்து, ரத்தம் சிந்தி பெற்றச் சுதந்திரம் இது...
           பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், உத்தம்சிங் போன்ற இளைஞர்கள்  தூக்குமேடை   ஏறிப் பெற்றச் சுதந்திரம் இது...
           திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்ற  இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
            பாரதி தன்  பாட்டுத்திறத்தாலே விடுதலைத்தீயை மூட்டி இந்திய மக்களிடையே எழுச்சியை உண்டாக்கி பெற்றச் சுதந்திரம் இது. வ. உ. சி மற்றும் சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் சிறைகொடுமைகளை அனுபவித்து, செக்கிழுத்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
           நேதாஜி மற்றும் கேப்டன் லட்சுமி போன்றவர்கள் இந்திய தேசியப் படை அமைத்து வெள்ளையனுக்கு எதிராகப்போராடிப் பெற்றச் சுதந்திரம் இது. 
            தோழர். ஜீவானந்தம், தோழர். ஹர்கிஷன்சிங் சுர்ஜித் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராடி, சிறைக்கொடுமைகளை அனுபவித்து, தலைமறைவு வாழ்க்கையை நடத்தி பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 
         1806 - ஆம் ஆண்டு தொடக்கி 1947 - ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான  ஆண்களும், பெண்களும், முஸ்லிம்களும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் போராடி - ரத்தம் சிந்தி - உயிர்த்தியாகம் செய்து நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 
          அனால் கடைசி இந்தியன் வரை அந்த சுதந்திரம் பொய் சேர்ந்ததா என்று கேட்டால்... அது கேள்விக்குறிதான். 
          உண்மையான சுதந்திரம் என்பது, இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே சொன்னானே மாவீரன் பகத்சிங் அது தான்.                   
         ''பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு எங்கும் மாணவன், வேலை தேடும் இளைஞன், வறுமையில் வாடும் தாய் - இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா'' 
இது தான் மாவீரன் பகத்சிங் கனவுகண்ட இந்தியா.
         அன்று வெள்ளையர் கையில் இருந்த இந்தியா... இன்று கொள்ளையர் கையில் சிக்கி மேலே சொன்ன அத்தனை பேரையும் கொண்ட ''வாடும் இந்தியா''வில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
           இது மாறவேண்டுமென்றால், ''முப்பது கோடி ஜெனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை'' வேண்டினானே பாரதி, அந்த பொதுவுடைமை இந்த தேசத்தில் மலரவேண்டும். அதுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரத்தை மணக்கச் செய்யும். 
அதற்காக போராடுவோம்.... 
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்... 
தேசத்தை காத்தல் செய்வோம்.

          

கருத்துகள் இல்லை: