ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

''வேற்றுமையில் ஒற்றுமை'' - பள்ளிப்பாடத்தில் படிப்பதற்கு மட்டும் தானா...?

                  ''இந்தியாவில் காஷ்மீரை அடுத்து இன்னொரு அழகிய மலைப்பிரதேசம் அசாம்'' என்று சுவாமி விவேகானந்தர் அசாமின்  அழகையும் அமைதியையும் பற்றி அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார். ஆனால் அப்படிப்பட்ட அசாம் தான் இன்று ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் எரிமலையாய்  எரிந்துகொண்டிருக்கிறது.
             இந்த வடகிழக்கு மாநிலத்தில் சென்ற மாதம் தொடங்கிய கலவரத்தில், பாதிக்கபட்டவர்கள்  பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளைத்  தவிர, மத்தியிலும்  மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசுகளோ,  தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் போன்ற  ஊடகங்களோ, மற்ற அரசியல் கட்சிகளோ  இந்தப் பிரச்சனையில் தலையிடாமலும், அக்கறை காட்டாமலும்,   அவ்வளவாக கண்டு கொள்ளாமலும்  இருந்து வருகின்றன.    அசாமில் எரிந்துகொண்டிருக்கும் இந்த பிரச்சனை என்பது  இன பிரச்சனையா...? அல்லது மொழி பிரச்சனையா...? அல்லது மத பிரச்சனையா...? என்பது குறித்து அசாம் மக்களே  இன்னும் தெளிவு பெற்றதாக தெரியவில்லை.  நாட்டின் மற்றப் பகுதி மக்களும்  இது நமக்கு தேவையில்லாத பிரச்சனை என்பது போல் இருந்து வருகிறார்கள். 
             ஆனால் பாரதீய ஜனதா கட்சியோ குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் துடிக்கிறது. தற்போது  கூட்டணி குழப்பங்கள் மற்றும்  உள்கட்சி குழப்பங்கள் என பல்வேறு குழப்பங்களில்  திணறி கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு அசாம் பிரச்சனை   நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.   இந்த சம்பவத்தை தன்னுடைய  எதிர்கால அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள பாரதீய ஜனதா கட்சியானது  ''பழங்குடி இன குழுக்கள்'' என்ற போர்வையில் செயல்பட்டு வரும் ''போடோ பிரிவினைவாத குழுக்கள்''  மீது  ஏறி சவாரி செய்து வருகிறது. 
             பாரதீய ஜனதா கட்சியோ எரிந்து கொண்டிருக்கும் இந்த  பிரச்சனைக்கு  தீர்வு காண உதவி செய்வதற்கு பதிலாக, பிரச்சனையை மேலும் ஊதி பெரிதாக்கி அதில் குளிர்காயவே நினைக்கிறது. இந்திய தேசத்தில் இருந்து முஸ்லிம்களை வேறோடு அழித்துவிட வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர்களான   அத்வானி வகையறாக்கள்  “வங்கதேசத்தில் இருந்து அசாம்க்கு    சட்டவிரோதமாக வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம்கள்  தான் இந்த பிரச்னைக்கு காரணம்” என்று தொடர்ந்து திருவாய் மலர்கிறார்கள்.
                 ஆனால் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, ''ஒரே மாநிலத்தைச் சேர்ந்த போடோ பழங்குடி இன மக்களும், ஏழை இஸ்லாமிய விவசாய மக்களும் இப்படி மோதிக்கொள்வது என்பது துரதிருஷ்டவசமானது. மத்திய - மாநில அரசுகள் உரிய நேரத்தில் தலையிடாததால், 3 இலட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து முகாம்களில் தங்கியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு, சென்னை, புனே,  போன்ற தொழில் நகரங்களில் வாழ்வாதாரத்திற்காக தங்கியுள்ள வடகிழக்கு மாநில மக்கள் தாக்குதல் அபாயத்தால், தங்கள் வேலை மற்றும் கல்வியை விட்டுவிட்டு இரயில்களில் தங்களின் சொந்த ஊருக்கு கூட்டம் கூட்டமாய் செல்வது என்பது வேதனைக்குரியது. வகுப்புவாத, பிரிவினைவாத சக்திகளின் இவ்வகை அச்சுறுத்தல்களில் இருந்து இம்மக்களை பாதுகாக்கவேண்டும்'' என்றும், ''பாதிக்கப்பட்ட இடங்களில் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பேணிக்காக்க வேண்டும்'' என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய - மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. 
             சில ஆண்டுகளுக்கு  முன்னர் இதே அசாமில் தான்  பீகார் மாநிலத்தை சார்ந்தவர்கள் தாக்கப்பட்டனர்  என்பதையும் யாரும் மறந்திருக்க முடியாது. இங்கே வகுப்புவாத சக்திகளும், பிரிவினைவாத சக்திகளும் மத்திய - மாநில ஆட்சியாளர்களாலும், பாரதீய ஜனதா கட்சி போன்ற மதவாத சக்திகளாலும் தான்   உரம் போட்டு வளர்க்கப்படுகின்றன என்பதையும் யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அதேப்போல் வளர்ந்து வரும் இந்த வகுப்புவாத சக்திகளையும், பிரிவினைவாத சக்திகளையும் வேரோடு கிள்ளி எறியாவிட்டால், ''வேற்றுமையில் ஒற்றுமை'' என்பதை நாம் பள்ளிப்பாடங்களில் மட்டுமே படிக்க முடியும்...பார்க்கமுடியும்.

கருத்துகள் இல்லை: