ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

கருணாநிதி அன்று எய்த அம்பு இன்று அவர் மீதே பாய்கிறது...!

            ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு பல்வேறு இழுபறிக்குப் பிறகு ஒரு வழியா உயர்நீதிமன்றத்தின் தயவால் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. 
        ஆரம்பத்தில் மாநாட்டு வேலைகள் எந்தவித தடங்களும் இல்லாமல் தொடங்கப்பட்டு, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் விதமாக  அரண்மனை போல் அலங்காரப் பந்தல்கள் கம்பீரமாக உயர்த்தி நிறுத்தப்பட்டு, வழியெங்கும் வரவேற்பு வளைவுகள் என ஒரே தடபுடல் ஏற்பாடுகள் தான்.
         இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து ''டெசோ'' மாநாட்டில்   ''ஈழம்'' என்ற வார்த்தையை உபயோகிக்கக் கூடாது என்று தடைவிதித்தது. மத்திய அரசின் இந்த செயல் டெசோ வட்டாரத்தில் அதிர்ச்சியையும், தமிழக காவல்துறை வட்டாரத்தில் உற்சாகத்தையும் அளித்தது. இந்த சூழ்நிலையில் தான், நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரவு  தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் என்று சொல்லி மாநாட்டிற்கு அனுமதி மறுத்தது.  உடனே நேற்று திமுக சென்னை உயர்நீதிமன்றத்தை நோக்கி ஓடியது. இரண்டு நீதிபதிகள் விசாரித்து இன்று ஞாயிறு நண்பகல் வரை ஒத்திப்போட்டார்கள்.
               ஏற்பாடுகளை முன்னின்று செய்யும் திமுக தலைவர் கருணாநிதிக்கு இது ஒரு சவாலாக போய்விட்டதால், மாநாட்டை நிறுத்துவதாக இல்லை என்று அறிவித்து, உற்சாகமிழந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தி, மாநாட்டு முந்தைய ஆய்வரங்கம் சென்னையில் ஒரு ஓட்டலிலும், மாநாடு திமுக தலைமை நிலையத்திலும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்தார்.  அதன்படி ஆய்வரங்கம் தொடங்கப்paபட்டு நடந்துகொண்டிருக்கும் வேளையில் உயர்நீதிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பு தேனாய் பாய்ந்தது. தீர்ப்பை அடுத்து ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மிக உற்சாகமாய் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
            ஒரு மாநாட்டிற்கு அனுமதி மறுப்பது என்பதும், தடை செய்வது என்பதும் கருத்துரிமைக்கு எதிரானது. கருத்து சொல்லும் உரிமையை பறிப்பதாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் இதை ஏற்கமாட்டார்கள். 
            அதே சமயம் திமுக தலைவர் கருணாநிதியும், திமுகவினரும், ''டெசோ'' மாநாடு நடத்துபவர்களும் கடந்த காலங்களை பின்னோக்கிப்பார்க்க வேண்டும்.
            கடந்த 1990 - ஆம் ஆண்டு ஜூன்  பழ.நெடுமாறன் ''தமிழர் தன்னுரிமை மாநாடு என்ற ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆனால் அந்த மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு அன்றைக்கு ஆட்சியில் இருந்த இதே முன்னாள் முதல்வர் தான்  என்பதை யாரும் மறந்துவிடமுடியாது.  அதுமட்டுமல்ல, அந்த 
மாநாடு தொடர்புடைய சாலை.இளந்திரையன் உள்ளிட்ட பலரையும் தமிழக போலீசார்  கைது செய்தனர். 
            மீண்டும் 1996 - ஆம் ஆண்டும் இதே முன்னாள் முதல்வர் அதிகாரத்திலிருந்த போது பா. ம. க. நடத்திய மாநாட்டில் ஈழம் குறித்து பேசியதற்காக இப்போது கருணாநிதியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பதையும் யாரும் மறந்திருக்க முடியாது.   
           சென்ற திமுக lஆட்சியில் இன்றைக்கு   தி.மு.க., கூட்டணியில் இருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில், 2008 - ஆம் ஆண்டு டிசmம்பர் மாதம்  27 - ஆம்  தேதி, "ஈழ உலக அங்கீகார மாநாடு' நடத்தினார். அப்போது செய்யப்பட்ட விளம்பரங்களில் "ஈழம்'' என்ற வார்த்தையை போஸ்டர் ஒட்டியும், பெயின்ட் அடித்தும் போலீசார் மறைத்தனர். அப்போதும் தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி தான் என்பதும் யாராலும் மறந்திருக்க முடியாது. 
             இப்படியாக ''ஈழம்'' குறித்து பேசியவர்கள் மற்றும் மாநாடு நடத்தியவர்கள் மீது தன் ஆட்சிக் காலத்தில் தான் எய்த அம்பு தான் இப்போது தன் மீது பாய்கிறது என்பதை கருணாநிதியால் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

2 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

//ஒரு மாநாட்டிற்கு அனுமதி மறுப்பது என்பதும், தடை செய்வது என்பதும் கருத்துரிமைக்கு எதிரானது. கருத்து சொல்லும் உரிமையை பறிப்பதாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் இதை ஏற்கமாட்டார்கள். //

கலைஞர் மீதான விமர்சனம் வேறு.டெசோவுக்கான அனுமதி மறுப்பு வேறு என்ற நிலையில் பிரச்சினைகளை அணுக வேண்டும்.

தடைகளையும் மீறி டெசோ வெற்றிகரமாக நடந்து முடிந்ததை வரவேற்போம்.கூடவே டெசோவுக்கான தடை உடன்பிறப்புக்களிடம் கண்ணியத்தையும் கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை மாநாட்டு நிகழ்ச்சியின் வரிசை உணர்த்தியது.காவலதுறையின் துணையின்றி தி.மு.கவினரே கூட்டத்தை அணிவகுத்தது பாராட்ட வேண்டிய ஒன்று.

இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்கிற மாதிரியான மாதிரியான கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து கலைஞர் மீன் பிடிக்கிறார் என்ற ரணமும் இல்லாமலில்லை.

இன்று கோவை உலகத்தமிழர் மாநாடு மறந்து விட்ட மாதிரி டெசோவும் காலப்போக்கில் மறந்து போகுமா அல்லது புது மாற்றங்களை ஈழப்பிரச்சினையில் கொண்டு வருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.நன்றி.

Santhose சொன்னது…

What ever it is, M.K is the only one famous leader and has influence in state and central who supports Elam. Do you think that VaiGo and Nedumaran can influence central.

There is a different approach against all rebels after 911 in U.S.

So all the countries weigh the rebels in the same scale and they don't want to support.

M.K or no one can do nothing at the end. Only Prabharan can stop it by come to a peace talk.
'
But now the so called intellectuals blame M.K for this.