வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கொலைக்களம் ஆகும் இந்திய ரயில்வே - கண்டுகொள்ளாத மத்திய அரசு....!

          இரண்டு நாட்களுக்கு முன்பு தான் புதுடெல்லியிலிருந்து சென்னையை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயிலின் ஒரு பெட்டி விடியற்காலை நெல்லூரைக் கடக்கும் போது தீப்பிடித்து எரிந்ததில் 32 பயணிகள் கொல்லப்பட்டதைப் பார்க்கும் போது நமது மனம் பதறியது.  நம் நாட்டைப் பொறுத்தவரையில் இது போன்ற இரயில் விபத்து என்பது புதிதல்ல. பாதுகாப்பு இல்லாத இரயில் பயணமாக மாறிவிட்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்கவேண்டும். மக்களின் மீது அக்கறை இல்லாத அரசாங்கம். இரயில் பயணங்களில் பலியான மக்களின் எண்ணிக்கையை பார்த்தாலேயே மத்திய அரசின் இலட்சணம் நமக்கு புரியும்.  கடந்த மூன்று ஆண்டுகளில் 1765 பேர் இரயில் விபத்தினால் பலியானார்கள் என்று சொல்லுவதை விட கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுவது தான் பொருத்தமானதாக இருக்கும். . இதுமட்டுமன்றி, இரயில் தண்டவாளப் பாதையை கடக்கும் போது கவனக்குறைவால் இரயில் மோதி இறந்தவர்கள் என்பது கடந்த ஓராண்டில்  15,000 பேர்கள் ஆவார்கள். இந்த பலி என்பது  உலகம் முழுதும் கடந்த ஓராண்டில் நடைபெற்ற  மொத்த இரயில் விபத்து பலிகளில்  15 சதவீதமாகும். இத்தனை பேர்களின் உயிர்களை குடிக்கும் இரயில் விபத்து என்பது அணுகுண்டு வெடிப்பை விட மோசமானது  என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
                 1962 - ஆம் ஆண்டிலிருந்து இது வரை மத்திய அரசானது இரயில்  விபத்துக்களை தவிர்ப்பதற்காக ஐந்து முறை கமிட்டிக்களை போட்டிருக்கிறது. அந்த ஐந்து கமிட்டிகளும்  இரயில்  விபத்துக்களை தவிர்ப்பதற்கு நவீன மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்று அறிக்கைக் கொடுத்திருக்கிறது. ஆனால் மத்திய அரசாங்கம் அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருக்கிறது என்பதும்,  தினமும் சராசரியாக 17 கோடி மக்கள் பயன்படுத்தும் இரயில் பயணத்தை பாதுகாப்பாக மாற்றும் சிந்தனை மத்திய அரசாங்கத்திற்கு இல்லை என்பதும்  தான் உண்மை. ஏனென்றால் ரயில்வே துறையை படிப்படியாக தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசாங்கத்தின் போக்கு இதையெல்லாம் மறைத்துவிட்டது.
               புதிய தொழிலாளர்களை - ஊழியர்களை பணியமர்த்தாததால்  பணியாட்கள் பற்றாக்குறை என்பது முக்கிய காரணம். கொஞ்சம் கொஞ்சமாக இரயில் நிலையங்களும், இரயில் மற்றும் இரயில் நிலையங்களின் பராமரிப்புகளும் தனியாரிடம் விடப்பட்டதும் இது போன்ற விபத்துக்களுக்கு காரணம் என்பதையும்  யாராலும் மறுக்கமுடியாது. விபத்துக்களை தவிர்ப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களையும், கண்டுபிடிப்புக்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவுக் கூட இல்லாத மத்திய அரசும், இரயில்வே துறையின் அமைச்சரும் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

            இது மாதிரியான துன்பங்களையும் துயரங்களையும் அன்றாடம் சந்திக்கின்ற இந்திய மக்கள் எப்படி சிந்திக்கப்போகிறார்கள்...? என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள்...? கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இந்திய ரயில்வே துறையை இந்திய மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு நடத்துகின்றதோ என்னவோ உலகிலேயே பாதுக்காப்பு குறைவான இரயில்வே துறை நமது தான். எத்தனை ஆளில்லா கிராசிங்க.. தீவிபத்து தண்டவாளம் கவிழ்தல் எத்தனை எத்தனை மரணங்கள் ...