சனி, 18 ஆகஸ்ட், 2012

பொருளாதார மேதாவிகளே....! மானியம் வெட்டினால் மக்கள் வெடித்துவிடுவார்கள்...!

        

























                 ''அடிக்க அடிக்க தாங்குராங்களே.... ரொம்ப நல்லவங்க''ன்னு மக்களை பற்றிய எண்ணம் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு இருக்கிறது. காய்கறி விலை ஏறினாலும் கண்டுக்க மாட்றாங்க... ஏத்துக்கிறாங்க. மளிகை  சாமான்களின் விலை ஏறினாலும் கண்டுக்க மாட்றாங்க... ஏத்துக்கிறாங்க. பெட்ரோல் - டீஸல் விலை ஏற்றினாலும் கண்டுக்க மாட்றாங்க... ஏத்துக்கிறாங்க. பணவீக்கம் ஏறினாலும் மக்களுக்கு கவலையில்லை. ரூபாயின் மதிப்புக் குறைந்தாலும் மக்களுக்கு கவலையில்லை. எல்லாவற்றையும் ஏத்துக்கிறாங்க. ரொம்ப நல்லவிங்களா இருக்காங்க... கோபமேமேமேமே....  வரமாட்டேங்குது... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்க... எனவே மக்களுக்கு இன்னொரு அடிக்கொடுப்பதற்கு மத்திய அரசு தாயாராகிவிட்டார்கள். அது என்ன தெரியுமா...? சமையல் எரிவாயுக்கு இதுவரை மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை வெட்டுவது என்கிற மத்திய அரசின் நீண்ட கால ஆசையை - கனவை நிறைவேற்றலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
             நாம் இதுவரை நம் வீடுகளில்  பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை சுமார் 400 ரூபாயாகும். நாம் ஓராண்டுக்கு சராசரியாக சுமார் 12 சிலிண்டர்களை  வாங்கிப் பயன்படுத்துகிறோம்.  நாம் பயன்படுத்தும் அத்தனை சிலிண்டருக்கும்  மத்திய அரசு ஒரு சிலிண்டருக்கு சுமார் 400 ரூபாய் வீதம் மானியம் வழங்குகிறது. ஒரு எரிவாயு சிலிண்டரின் மொத்த விலை சுமார் 800 ரூபாயாகும்.   அதனால் மத்திய அரசுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறதாம். இதுபோல் பொது மக்கள் பயன்படுத்தும் எரிவாயுக்கும், பெட்ரோல் - டீஸல் - மண்ணெண்ணைக்கும், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை பொது மக்களுக்கு அள்ளி அள்ளித்தருவதால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறதாம். அதுமட்டுமல்ல, பொருளாதாரமும் வளர்ச்சியடையவே சிரமமாக இருக்கிறதாம். 
          அதனால் கசாப்புக்கடையில் ஆட்டை வெட்டுவது போல, நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தொடங்கி, வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி மற்றும் தற்போதைய மன்மோகன்  சிங் ஆட்சி வரை உரம், பூச்சி மருந்து, மண்ணெண்ணெய், டீஸல், பெட்ரோல், சமையல் எரிவாயு போன்றவற்றின்  மீதான மானியங்களை படிப்படியாக வெட்டப்பட்டு வந்தன. 
               இந்த சூழ்நிலையில் தான், ''பொருளாதார மேதாவிகள்'' அடங்கிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அரசுக்கு நீண்ட நாட்களாக சொல்லப்பட்ட ஒரு பரிந்துரையை கொடுத்துள்ளது.  இந்தியாவில் சுமார் 29% குடும்பத்தினர் ஒரு ஆண்டுக்கு 4 எரிவாயு  சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று  ஒரு புள்ளி விவரம் சொல்லுகிறதாம். அதனால் இதனை அடிப்படையாக வைத்து இனி அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 4 எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டும் மானிய விலையை அரசு வழங்கலாம் என்று பிரதமரின்  ''பொருளாதார மேதாவிகளின் குழு''     அதிமேதாவித்தனமாக ஆலோசனை வழங்கியிருக்கிறது. 
              அதன்படி, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தது 12 எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படுகிறது என்றால்,  அந்த குடும்பங்கள் முதல் 4 சிலிண்டர்களை  மட்டும் 400 ரூபாய் கொடுத்தும், அடுத்து வரும் மீதம் உள்ள 8 சிலிண்டர்களை 800 ரூபாய் கொடுத்தும் வாங்க  வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போது 4 சிலிண்டருக்கு மட்டும் கொடுக்கப்போகும் மானியத்திற்குக் கூட அற்ப ஆயுள் தான். இதை நாம் அனுமதித்தால், எதிர்காலத்தில் எரிவாயுவிற்கு கொடுக்கப்படும் மானியம் முழுமையாக  வெட்டப்படும் அபாயம் ஏற்படும் 
             இப்படியாக 4 எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டும் அரசு மானியம் வழங்கினால், சமையல் எரிவாயு  சிலிண்டர் விநியோகத்துக்கு மட்டும் மத்திய  அரசு வழங்குகிற மானியத்தின் அளவு என்பது ரூ.18 ஆயிரம் கோடியாகக் குறையும் என்றும், அதனால் பல இலட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் அந்த பொருளாதார மேதாவிகள் கூசாமல்   சுட்டிக்காட்டுகின்றார்கள்.   சென்ற பட்ஜெட்டில் இந்தியாவில் மிக சொற்பமான எண்ணிக்கையில் உள்ள பெருமுதலாளிகளுக்கு 5,00,000 கோடி ரூபாய் மானியமாகவும், வரிச்சலுகையாகவும் கொடுத்த போது  பல்லை இளித்துக்கொண்டு வேடிக்கைப்பார்த்த இந்த மேதாவிகள் தான், மக்களுக்கு கொடுக்கப்படும் மானியத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது என்று வாய்க்கூசாமல் பேசுகிறார்கள். 
               சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு சுவையான - பரப்பரப்பான தகவல் என்ன தெரியுமா...?               நமது நாட்டின்  குடியரசு துணைத்தலைவர் 
திரு. ஹமீது அன்சாரி, சென்ற ஆண்டில்  மட்டும், 176 சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தியிருக்கிறார் என்ற சூடான தகவல் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் மாதமொன்றுக்கு     சராசரியாக 14 சிலிண்டர்களை பயன்படுத்தும்  இவருக்கு மட்டும் பதவியில்  உள்ள போதும், பதவியை விட்டு சென்ற பின்னும் மானியம் வழக்கப்படும்  என்பது இந்திய போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் தான் நடைபெறும். 

கருத்துகள் இல்லை: