திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஒலிம்பிக்கில் நம் மானம் காத்த இந்திய வீரர்கள் 83 பேர்...!

        நான்கு ஆண்டுக்கொரு முறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா லண்டனில் சென்ற ஜூலை 27 அன்று சிறப்பாகத் தொடங்கி நேற்று ஆகஸ்ட் 12 அன்று கோலாகலமாக முடிவடைந்தது. இந்த விளையாட்டுப்போட்டிகளில் வழக்கம் போல் இந்திய வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த முறை 83 பேர் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 55 போட்டிகளில்  அனுப்பப்பட்டனர். 
             ஆனால் இந்த 83 பேரில் வெறும் ஆறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மட்டுமே போட்டியில் பதக்கத்தைப் பெற முடிந்தது.  மற்றவர்கள் வெறும் கையேடு நாடு திரும்பினர் பதக்கம் வென்றவர்கள் கூட யாரும் தங்கத்தை வெல்லவில்லை. ஆறு பேரில் இருவர் வெள்ளிப்பதக்கமும், நால்வர் வெண்கலப்பதக்கமும் தான் வென்றார்கள். 
என்றாலும் போட்டியில் பதக்கம் பெற்றவர்கள் மட்டுமல்ல, போட்டியில் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் கலந்து கொள்ள சென்ற அத்துணை 83 வீரர் - வீராங்கனைகளையும் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். 
            போட்டியில் கலந்துகொள்ளும் அத்தனை ஆயிரம் வீரர்களும் வெற்றி பெறுவது என்பது பதக்கம் பெறுவது என்பதும் சாத்தியமில்லாதது தான். வெற்றியும் தோல்வியும் இணைந்தே இருப்பது  தான் விளையாட்டுப் போட்டி என்பது. அதனால் வெற்றிபெற்றவர்கள் திறமைசாலிகள் என்றோ தோல்வியடைந்தவர்கள் திறமையற்றவர்கள் என்றோ சொல்லுவது முறையற்ற செயலாகும். தொல்வியடைந்தவர்களை கேலி செய்தல் என்பதும் சிறுபிள்ளைத்தனமாகும். தோல்விடைந்த நம் வீரர்கள் கூட பதக்கத்தை வென்ற மற்ற வீரர்களைப் போல் போராடி தான் தோற்றார்கள். முயற்சி செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. 
இதையெல்லாம் விட்டுவிட்டு தோல்விக்கான காரணத்தை ஆராய்வதை புத்திசாலித்தனம் ஆகும்.
(1)   மத்திய - மாநில அரசுகள் விளையாட்டுத்துறைகளில் சரியான கவனம் செலுத்தாமை ஒரு முக்கிய காரணம். 

(2)   அரசு திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தாமை.

(3)   விளையாட்டு அல்லது விளையாட்டு வீரர்கள் மீது அரசியல் சாயம் பூசுதல்.

(4) அதிகாரவர்க்கத்தின் தலையீடு காரணமாக திறமையானவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காமை.   

(5) கிரிக்கெட் விளையாட்டுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும்   கொடுக்கப்படுகிற முன்னுரிமையும் ஊக்கமும் மற்ற விளையாட்டுகளுக்கும், வீரர்களுக்கும் கொடுக்கப்படுவதில்லை. 

(6) விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் தேவையான நிதி ஒதுக்குவதில்லை.

(7) முறையாக பயிற்சி செய்வதற்கு பயிற்சிக்கூடம் இன்மையும், பயிற்சியாளர்கள் பற்றாக்குறையும் முக்கிய காரணியாகும்.

(8) இன்னொரு மோசமான காரணி - கல்வி வணிகமயமானதில் இருந்து    பள்ளிக்கூடங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ விளையாட்டுக்கென்று நேரம் இல்லாமை.  இதனால் வரும் காலங்களில் விளையாட்டு வீரர்களைப் பார்ப்பது என்பது அரிதாகிவிடும்.

(9) எல்லாவற்றிற்கும் மேலாக விளையாட்டுத்துறைகளில் வளர்ந்துவிட்ட ஊழல்களும் ஊழல் பெருச்சாளிகளும் மிக முக்கிய காரணிகளாகும்.

             மேலே சொன்ன அனைத்தையும் அரசும் மக்களும் கவனத்தில் கொண்டால் தான் வரும் காலங்களில் உலகளவில் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகளில் மற்ற நாடுகளோடு போட்டிப்போட்டு வெல்லமுடியும். இல்லையென்றால் என் வீட்டுக்காரனும் கச்சேரிக்கு போனான் என்ற கதையாக தான் போய்விடும்.  

1 கருத்து:

Massy spl France. சொன்னது…

மக்கள் தொகையில சீனாவையே தாண்ட இருக்கும் இந்தியாவில் போதிய அளவு விளையாட்டு வீரர்கள் இல்லாதது பெரிய குறைதான். உங்கள் அலசல் மிக சரியே.
விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கு நிறைய இருக்கிறது. நான் கூட பல திட்டங்களை யோசித்து வைத்திருக்கிறேன். நேரம் வரும்போது (விரைவில்) இது கைகூடும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.