புதன், 6 ஜூலை, 2011

கோயில் சொத்துக்களை மக்கள் நலப்பணிகளுக்கு பயன்படுத்துங்கள்..

                 மன்னராட்சியில் கட்டப்பட்ட கோயில்களெல்லாம் அன்றைய தினம் வழிபடும் தளமாக மட்டுமல்லாமல், அரசாங்கத்தின்  கருவூலமாகவும்  இருந்திருக்கிறது.  அன்றைக்கு  ரூபாய் நோட்டுகள் எல்லாம் இல்லாத காலம். பொற்காசுகள் மட்டுமே புழங்கிய காலம். அதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எல்லாம் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்கு பொற்காசுகளையும் தங்க நகைகளையுமே காணிக்கையாக செலுத்தியிருக்கிறார்கள். அதனால் தான் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களிலும் அதை சுற்றி இருக்கும் இடங்களிலும் நிலத்தைத் தோண்டினால் இன்றைக்கும் இது போல புதையல்கள் கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அப்படி கிடைக்கும் பொருட்கள் எல்லாம்  நிச்சயமாக அரசாங்கத்திடம் தான் ஒப்படைக்கப்படுகிறது.
                     அதேப்போல் தான் , இன்றைக்கு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகளை திறக்கும் போது மிகபெரிய பொற்குவியலே கிடைத்திருக்கிறது. அங்கு பழமைவாய்ந்த தங்க நகைகளும், அறிய வகை வைரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு என்பது பல லட்சம் கோடி இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
                     இப்படி அந்தக் கோயிலில் கிடைத்த அந்த மதிப்புமிக்க பொருட்களுக்கு பலவாறு உரிமைக் கொண்டாடுகிறார்கள். சிலர், இது கோயிலுக்கு சொந்தமானது. எனவே கோயிலில் ஒப்படைக்கவேண்டும் என்றும், காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்கள், இது அரசக் குடும்பத்துக்கு சொந்தமானது. எனவே அரசக் குடும்பத்தை சார்ந்தவர்களிடம் தான் ஒப்படைக்கவேண்டும் என்றும் கூறுகின்றனர்.
                  ஆனால் வரலாற்று ஆசிரியர் கே. என். பணிக்கர் வரலாற்றுப்பூர்வமான  பல்வேறு விஷயங்களை விளக்கி, கிடைத்திருக்கும் இந்த பொற்குவியல் என்பது, அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமானது என்று கூறியிருக்கிறார். கோயிலில் கிடைத்திருக்கும் நகைகள் இந்த மாநிலத்தையே சார்ந்தவை. இவைகள் எல்லாம் கோயிலுக்கு பிரார்த்தனை மேற்கொண்ட மக்களால் அளிக்கப்பட்டவை ஆகும். மக்களிடம் வசூல் செய்த வருவாய் மற்றும் பிரார்த்தனைக்கு மக்கள் அளித்த நிதி இவைகளிலிருந்து மகாராஜா கோயிலுக்கான நகைகளை உருவாக்கியுள்ளார். எனவே இது அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமானது என்று ஆதாரப்பூர்வமாக  விளக்கியிருக்கிறார்.  
                 எது எப்படி இருந்தாலும், இது போன்று கிடைக்கும் பழைமை வாய்ந்த மதிப்புமிக்கப் பொருட்கள் நிச்சயமாக மக்களுக்கு தான் சொந்தமாக்க  வேண்டும். எனவே அவைகளை மக்கள் நலப்பணிகளுக்கு பயன்படுத்துங்கள். சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகியும் எந்த நலத் திட்டங்களும் சென்றடையாத கடைசி மனிதனுக்கும் திட்டங்கள் சென்று சேர இவைகளை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த பத்மநாப சுவாமி  கோயிலில் அமர்ந்திருக்கும் ( படுத்திருக்கும் ) பத்மநாப சுவாமியை கேட்டாலும் அவரும் இதைதான் சொல்லுவார்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

you ask muslims and christians to share the wealth of the mosques and churches for welfare of poor people. if you have guts to ask this, we agree with your topic regarding temple wealth.