வியாழன், 28 ஜூலை, 2011

இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சிங்களர்களின் மனதையும் திறந்திருக்கிறது...

          அண்மையில் நடைபெற்ற இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்பது, மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கின்றன. இலங்கை உள்ளாட்சித் தேர்தலில், அந்தத் தீவு முழுவதிலும் 65 மாகாணங்களில் போட்டியிட்ட ராஜபட்ச்சே  ஆதரவுபெற்ற  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தம் 45 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், தமிழர்கள் வாழும்  இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாகாணங்களில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது என்பது உற்று நோக்கத்தக்கது.   விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 18 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதும், புலிகள் இயக்கத்துக்குக் கொள்கையளவில் மாறுபட்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், ராஜபட்ச்சே  மீதான இலங்கைத் தமிழர்களின் கோபத்தை ஒட்டுமொத்தமாக உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் பொருள்.
                 அதுமட்டுமல்ல இதுவரை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்துவந்த அக்கிரமங்களையும், கொடுமைகளையும் வேடிக்கைப் பார்த்துவந்த சிங்களத் தலைவர்களையும் இந்த தேர்தல் முடிவுகள் வாய் திறக்கவைத்திருக்கிறது.  தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் என்று ராஜபட்ச்சேவுக்கு அறிவுரைகூறும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, என்னுடைய தகப்பனார் பண்டாரநாயக தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால்தான் இந்தப் பிரச்னை இப்படிப் பூதாகரமாக வளர்ந்து இலங்கையை 30 ஆண்டுகளுக்கு நெருக்கடியில் தள்ளிஇருக்கிறது  என்று கூறியிருப்பது என்பது , இலங்கைவாழ் தமிழர்களின் பலத்தையும் தமிழர் அரசியலையும் புரிந்துகொள்ளும் சூழலை இத்தேர்தல் வெற்றி உருவாக்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதால், நம் வலிமை குறைந்துவிடாது. மாறாக, அவர்களது உழைப்பு, திறமை, அறிவாற்றலால் இலங்கைக்கு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்த உதவியாயிருக்கும்  என்று சந்திரிகா இன்று கூறுவது என்பது வரவேற்கத் தக்க மாற்றங்களாகும். இதே கருத்துக்களை  தமிழருக்கு ஆதரவுத் தெரிவித்துவரும் சிங்களர்களும் கூறிவருகிறார்கள் என்பதும் நாம் இத்தனை ஆண்டுகளாய் ஒன்றுபட்ட இலங்கையின் அமைதிக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஒளி இங்கே நம்  அருகில் தெரிகிறது. 

கருத்துகள் இல்லை: