செவ்வாய், 5 ஜூலை, 2011

சினிமாத் துறையை சூறையாடிய "நிதி"கள் எங்கேப் போனார்கள் ?

                தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின் "நிதி" களின் பிடிகளிலிருந்து தமிழக சினிமாத் துறை என்பது மெல்ல மெல்ல விடுதலையாகி வருவது நமக்கு கண் கூடாகத் தெரிகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் சினிமா தயாரிப்பில் இறங்கி, அதில் கொள்ளை லாபம் அடிக்க, லாப வெறி கொண்டு அலைந்து, சினிமாத் துறையில் அராஜகம் செய்ததை தமிழகமே பார்த்து முகம் சுளித்தது. திரைப்படங்களை வாங்கினார்கள் - விநியோக உரிமையும் பெற்றார்கள் - அவர்களது சொந்த ஊடகங்களிலேயே கட்டுப்பாடுகள் இல்லாமல் தாறுமாறாக விளம்பரம் செய்தார்கள். ஆட்சியாளர்கள் என்பதால் சினிமா கொட்டகை உரிமையாளர்களும் கருணாநிதி குடும்பத்தினர் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்தனர். பட உலகமே இவர்களது கடைக்கண் பார்வைக்கும், கையசைவிற்கும் எதிர்பார்த்து காத்திருப்பது போல் பழக்கி வைத்துவிட்டனர். 
                     கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தினால் தொழில் தர்மம் பாதிக்கப்பட்டது. இவர்களது குடும்பத் தொலைக்காட்சிக்கு விற்க மறுத்த அல்லது விற்காத படங்களின் விளம்பரங்களை அவர்களது தொலைக்காட்சியில் போட மறுத்தனர். தென் மேற்கு பருவக்காற்று போன்ற நல்லப் படங்கள் மக்களை சென்று அடையாததற்கு கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சிகளின் ஆதிக்கமே காரணம்.
                 கருணாநிதியின் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியின் போது, தமிழ் சினிமாவுக்கு இழப்பு என்பது ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கேயார் கூறினார். புதிய ஆட்சி மாற்றத்தினால் தமிழ் சினிமா மீண்டும் உயிர் பெற்று எழுகிறது என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை: