புதன், 6 ஜூலை, 2011

குழந்தைகளின் தொடக்கக்கல்வி பற்றி அரசு கவலைப் படுவதே இல்லை

இந்தியாவில் புறக்கணிக்கப்படும்  தொடக்கக் கல்வி  பற்றி பேராசிரியர் அமர்த்தியா சென் கவலை 

          இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, மகளிர் சமத்துவம் போன்ற துறைகளின் அடித்தளத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று நோபல் விருது பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறியிருக்கிறார். தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம் அமர்த்தியா சென்னுக்கு நேற்று முன்தினம் டி.லிட்., கவுரவப் பட்டம் வழங்கிக் கவுரவித்தது. பட்டத்தைப் பெற்றுக் கொண்டு உரையாற்றிய போது பேராசிரியர் சென் இவ்வாறு குறிப்பிட்டார். கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு துறைகளில் சீர்திருத்தங்கள் வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்திய அதே தொனியில் மகளிர் சமத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

             உயர் கல்வியிலும், சிறப்பு நிபுணத்துவத்திலும் பயிற்சி பெற்ற சிறு  எண்ணிக்கையில் அடங்கும் வசதி படைத்த நபர்களின் வெற்றிகளின் மூலம் இந்தியா பல சாதனைகளைச் செய்துள்ளது. ஆனாலும், இந்திய கல்வித்துறை அநீதி நிறைந்ததாகவே உள்ளது. குறுகலான கல்வி வட்டமும், பள்ளிக் கல்வியின் தரமும் பொருளாதார வளர்ச்சியின் பெரும் பங்கினை வீணடிக்கச் செய்கின்றன என்று அவர் கூறினார்.

             சீனா போன்ற நாடுகளில் உள்ளது போன்ற கற்றறிவுமிக்க தொழிலாளர் சக்தி இந்தியாவில் மிகவும் குறைவு. இதனால் இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் விலை கொடுத்து வருகிறது. கடியாரங்கள், கணக்கிடும் கருவிகள், கணினி ஹார்ட்வேர் போன்றவற்றின் உற்பத்தியில் இந்தியா தீவிரமாகப் போட்டியிட முடியவில்லை. இவற்றில் ‘கிழக்கு ஆசிய அதிசயம்’ எனப்படும் சீனா முன்னிலையில் உள்ளது. இவற்றின் உற்பத்தியைப் பெருக்க சாதாரண அடிப்படைக் கல்வி போதும். அது நம்மிடம் இல்லை என்று பேராசிரியர் சென் என்பதை கவலையோடு சுட்டிக்காட்டினார்.

         தொழிற்கல்வி பற்றி பிரதமர் நேரு கொண்டிருந்த தொலை நோக்கு       பார்வையின் விளைவாக ஏராளமான இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் உருவாகியுள்ளன. விடுதலை பெற்ற நாள் முதல் தொடக்கக் கல்வி புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக் கல்வி பற்றிய நேருவின் பார்வை வருத்தத்திற்குரியது என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

           தொழிற்கல்விக்கு நேரு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். ஆனால்      தொடக்கக் கல்விக்கு ஒதுக்கப்பட்ட ஆதாரங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. அரசுச் செலவினங்களில் தொடக்கக் கல்வி உரிய முன்னுரிமைப் பெறவில்லை என்பதையே இது காட்டியது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை: