வியாழன், 14 ஜூலை, 2011

துப்பு கெட்ட சிதம்பரம் பொறுப்பு ஏற்பாரா ? அமைச்சர் பதவி விலகுவாரா ?

               மும்பையில் இன்று - ஜூலை 13 இரவு ஏழு மணிக்கு மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 141   பேர்  பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர் எனவும் மும்பையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு என்பது பயங்கரவாதிகளின் தாக்குதலாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கிறது.
              2008 - க்கு பிறகு மும்பையில் நடைபெறும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு இது.  இன்று 2008 குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட காசாப் - இன் பிறந்தநாள் அன்று நடந்திருக்கும் சம்பவம் இது. 
              இதைப்பற்றி முன்கூட்டியே உளவுத்துறைக்கோ அல்லது உள்துறை அமைச்சகத்திற்கோ எப்படி தெரியாமல் போனது என்பது தான் நம் சந்தேகமே. இந்த இரண்டு பேரின் அலட்சிய போக்கே இத்தனை பேரை பலி கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காசாப் -இன் பிறந்தநாளை பற்றி ஊடகங்கள் முன்னமே செய்தியாக வெளியிடுகின்றன. இதைப்பற்றி அறிந்திருக்கும் மத்திய அரசு விழிப்போடு இருந்திருக்க வேண்டாமா என்பது தான் நமது கேள்வி. இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் கோட்டைவிட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
              பயங்கரவாத செயல் என்பதும் குண்டுவெடிப்பு சம்பவம் என்பதும் இந்தியாவிற்கு புதிதான அனுபவம் கிடையாது. உலக வரைபடத்தையும் கடந்தகால வரலாற்றையும் உற்றுப்பாருங்கள். அமெரிக்காவுடன் உறவாடும் நாடுகளிலெல்லாம் பயங்கரவாதமும், குண்டுவெடிப்பும் சர்வசாதாரணமாக நடக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரானவர்களைப்போல் நடித்துக்கொண்டே பயங்கரவாதத்துக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து நாட்டின் அமைதியை குலைப்பது தான் ஏகாதிபத்தியத்தின் வழக்கமான கலாச்சாரம்.   என்றைக்கு இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்காவோடு ஒட்டி உறவாட ஆரம்பித்தார்களோ அன்றைக்கு ஆரம்பம் ஆனது தான் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதமும் குண்டுவெடிப்பும். தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த சம்பவங்களுக்கு ஆட்சியாளர்களே  பொறுப்பேற்க வேண்டும்.
                 நாட்டில் தினமும் பல இடங்களில் அமைதி குலைந்துகொண்டே வருகின்றது. காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதிகளின்  பிரச்சனை, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் தீவிரவாதிகள் பிரச்சனை, தெற்கே தனி தெலுங்கானா  பிரிவினைவாதிகளின் பிரச்சனை... இப்படியான பல்வேறு பிரச்சனைகளுக்கும் நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் பொறுப்பேற்கவேண்டும். பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். இதைத்தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: