ஞாயிறு, 17 ஜூலை, 2011

கடும் நெருக்கடியில் இந்தியாவின் உயர்கல்வி..!

பேராசிரியர் பிரபாத் பட்நாயக் எச்சரிக்கை
       இந்தியாவின் உயர்கல்வித் துறை மிக ஆழமான நெருக்கடிக்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று பொருளாதார வல்லுநரும் கேரளத்திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத்தலைவருமான பேராசிரியர் பிரபாத் பட்நாயக் எச்சரித்துள்ளார்.
       வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் கூவி கூவி விற்பது போல இந்திய உயர் கல்வி என்பது இன்றைக்கு ஒரு முழுமையான வியாபாரப்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
“உயர்கல்வி என்பது ஒரு அப்பட்டமான நுகர்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது; குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பொருளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. கல்வித்துறையை முற்றிலும் வியாபாரமயமாக்கும் நடவடிக்கைகள், இந்திய கல்வியை நாசமாக்கும் நிலையை நோக்கி நகர்த்திச்செல்கிறது; இந்த நடவடிக்கை, இளைய தலைமுறையினர் சுதந்திரமாக சிந்திக்கிற, எதையும் துணிச்சலுடன் ஆராய்கிற மனநிலையை கடுமையாகத்தாக்குகிறது” என்பதை  பிரபாத் பட்நாயக்  சுட்டிக்காட்டியுள்ளார்.                                                                                                                
         கல்வி என்பது லாபம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழில் அல்ல என்று உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளது, ஆனால், நாடு முழுவதிலும் லாபம் சம்பாதிக்கிற கல்வி நிறுவனங்களை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
         மேற்கத்திய நாடுகளில் பிரபலமான பல்கலைக்கழகங்களாக புகழப்படும் ஸ்டான்போர்டு, ஹார்வர்டு, கொலம்பியா பல்கலைக்கழகங்கள் கல்வி அளிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன; இந்த நோக்கத்திற்காக பல்கலைக்கழகங்களை நிறுவியவர்கள் அறக்கட்டளைகள் என்ற பெயரில் நிதியை திரட்டி கல்விக்காக செலவிடுகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
          நமது நாட்டில் தான் நிலைமை தலைகீழாக இருக்கிறது என்று கூறிய அவர், தேசத்தை கட்டமைப்பதில் உறுதிகொண்ட அறிவு ஜீவிகளை உருவாக்குகிற ஒரு கல்வி முறையே நமக்கு அவசியம் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: