செவ்வாய், 5 ஜூலை, 2011

தீவிரவாதத்திற்கு எதிராக மலைவாழ் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி - மத்திய அரசின் செயல் சட்டவிரோதமானது !

                   சத்தீஷ்கர் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் பரவி மாநில மக்களையும் மத்திய மாநில அரசுகளையும் அச்சுறுத்தி வரும் மாவோயிஸ்ட் தீவிரவாத கூட்டத்தை சமாளிக்க முடியாத இந்த மத்திய மாநில அரசுகள் அந்த மாநிலத்திலுள்ள வேலையில்லா மலைவாழ்  இளைஞர்களுக்கு சிறப்பு காவல் அதிகாரி என்ற பொறுப்பை அளித்து,  ஆயுதங்களை வாரி வழங்கி, ஆயுத பயிற்சியும் கொடுத்து வருகிறார்கள் என்பது ஒரு பிரிவு மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். இந்த செயலை பலக்கோணங்களில் நாம் பார்க்கவேண்டும்.   
               1 )  காவல் துறை இருக்கும் போது தீவிரவாதத்திற்கு எதிராகவோ அல்லது வேறு ஏதாவது குற்றங்களுக்கு எதிராகவோ, ஒரு தனி நபரோ அல்லது ஒரு குழுவோ ஆயுதங்களை  எடுப்பதும், ஆயுதப்  பயிற்சி கொடுப்பதும்  என்பது சட்டவிரோதமானது. அந்த செயலை அரசே செய்வது என்பது விநோதமாயிருக்கிறது. 
              2  )  படித்த இளைஞர்களுக்கு முறையாக வேலை வாய்ப்பு கொடுக்கவேண்டியது என்பது ஒரு அரசின் கடமையாகும்.  அப்படி  வேலை கொடுக்கத் தவறிய அரசாங்கம் அந்த இளைஞர்களை  தவறான செயலுக்குப் பயன்படுத்துவது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
              3 )  மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சலைட்டுகள் போன்ற தீவிரவாதிகள் எப்படித் தோன்றுகிறார்கள் என்கிற அடிப்படை காரணத்தை அரசு தெளிவாகப் புரிந்திருந்தும் தெரியாதது போல் நடிக்கிறது. இப்படிப்பட்ட தீவிரவாதிகளை உருவாக்குவதே அரசாங்கம் தான் என்பது அரசுக்கு தெரியாமல் இல்லை. படித்த இளைஞர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும் மனித உரிமைகளான  நிலம் - வேலை - உணவு  தேவைக்கேற்ப கொடுத்துவிட்டால் இதுபோன்ற தீவிரவாதங்கள் நாட்டில் தலைத் தூக்காது. இதைப்  பொருத்தவரையில் அரசுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் நாட்டு மக்கள் அனுபவிக்கும் பெரும்பாலான பிரச்சனைகளை திசைத் திருப்புவதற்கு இது மாதிரியான தீவிரவாதங்கள் அரசுக்குத் தேவைபடுகின்றது. 
                 4 ) வேலையில்லா திண்டாட்டம் - பொருளாதாரம் - உணவு போன்ற பிரச்சனைகள் காரணமாக மாவோயிஸ்டுகளாக மாறி போராடும் இளைஞர் கூட்டத்திற்கு  எதிராக, வேலைதேடும் மற்றொரு இளைஞர் கூட்டத்தை ஆயுதப் பயிற்சிக் கொடுத்து தயார்படுத்துவது - மோதவிடுவது என்பது அயோக்கியத்தனமான செயலாகும். இது கண்டிக்கத் தக்கது.
                 5 )  சமூகத்திலும் பொருளாதாரத்திலும்  பின்தங்கியுள்ள மலைவாழ் மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான வேலை வாய்ப்பை உருவாக்காமல், அவர்களை இது போன்ற தவறான பாதைக்கு அரசே இட்டுச் செல்வது என்பதும் அயோக்கியத் தனமானது.
                மத்திய மாநில அரசுகளின் இந்தச் செயலை இன்று ( ஜூலை 5 ) உச்சநீதி மன்றமும் கண்டித்திருப்பது என்பது வரவேற்கத் தக்கது.  
 மத்திய மாநில அரசுகளே... இந்திய இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்..  ஆயுதமோ - ஆயுதப் பயிற்சியோ தேவை இல்லை...

கருத்துகள் இல்லை: