திங்கள், 4 ஜூலை, 2011

பிரதமர் மட்டும் என்ன உத்தமரா ?

           கடந்த  40 ஆண்டுகாலமாகவே  கிடப்பில் போடப்பட்டுள்ள லோக்பால் மசோதா, இன்று  வரலாறுகாணாத ஊழல்களால் நெருக்கடியில் சிக்கிகொண்டிருக்கும்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வேறு வழி இல்லாமல் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மசோதாவின் வரையறை குறித்து அரசின் பிரதிநிதிகளும், மக்கள் குழு என்ற பெயரில் சில தனிநபர் பிரதிநிதிகளும் கொண்ட குழு விவாதிப்பு என்ற பேரில் மசோதாவை தள்ளிப்போடவே மத்திய அரசு முயற்சி செய்தது. இதன் மூலம் மசோதாவை சீர்குலைக்கவே  அரசு தீவிரமாக முயற்சி செய்து வந்தது.
                   எனினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும், இதர பல எதிர்க்கட்சிகளும் லோக்பால் மசோதாவைப்பற்றி அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டுமென உரத்த குரல் எழுப்பிய நிலையில், வேறு வழியின்றி, அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு  மத்தியஅரசு அழைப்பு விடுத்தது. அதன்படி, ஞாயிறன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பிரதமரின் இல்லாத்திலேயே அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
                  அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலுவான, சீறிய விதிமுறைகள் கொண்ட லோக்பால் மசோதாவை அரசு கொண்டுவர வேண்டும் என்று இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்திலேயும் வழக்கம் போல் பிரதமர் வாயை திறக்கவில்லை. எதிர் கட்சித் தலைவர்கள் தான் பேசினார்கள்  என்பது தான் உண்மை.
                   ஆனால் லோக்பால் மசோதா வரையறையின் கீழ் பிரதமரையும், பிரதமர் அலுவலகத்தையும் கொண்டுவர வேண்டும் காங்கிரஸ் கட்சி மிகுந்த தயக்கம் காட்டுகிறது.ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும், மற்ற எதிர் கட்சிகளும் எதிர்ப்பு குரலை வலுவாக எழுப்பி, பிரதமரையும் லோக்பால் மசோதா வரையறையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றன. 
                     பிரதமர் மட்டும் என்ன உத்தமரா ? கடந்த காலங்களில் நாம் இந்த தேசத்தை ஆட்சி செய்த பிரதமர்களை பார்த்ததில்லையா ? எனவே பிரதமரும் ஊழல் செய்தால் குற்றவாளிக்கூண்டில் ஏற்றவேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்திய மக்களின் எதிர்பார்ப்பாகும்.                                

கருத்துகள் இல்லை: