வெள்ளி, 29 ஜூலை, 2011

கருணாநிதியின் மற்றுமொரு நாடகம் - வெட்கமாக இல்லை..?

        தமிழக மாணவ - மாணவியர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு,  சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று சமச்சீர் பாடப்புத்தக விநியோகத்தை உடனே துவக்கிட வேண்டும் என்றும் கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் ஜூலை 26 அன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துமாறு இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. அந்த அறைகூவலை  ஏற்று தமிழகம் முழுவதும் சென்ற ஜூலை 26 அன்று சென்னை துவங்கி கன்னியாகுமரி வரை பள்ளி - கல்லூரி மாணவர்கள் பெருமளவில் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தை வெற்றிகரமாக  நடத்தினர்.
                இதைப் பார்த்து பொறுத்துக்கொள்ள   முடியாத திமுக தலைவர் கருணாநிதி இப்பிரச்சனையை அரசியலாக்கி தேர்தல் வியாபாரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில்,    சமச்சீர் கல்வியை பாதுகாக்க வரும் ஜூலை 29 - ஆம் தேதி திமுக மாணவரணி என்ற பெயரில், மாநிலம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும், பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக தான் இந்தப் போராட்டம் எனவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவு தரவேண்டும் எனவும் திமுக தலைவர் கருணாநிதி வழக்கமான உருக்கத்துடன்  வேண்டுகோள் விடுத்தார்.
                அதன்படி திமுக-வினர் இன்று வகுப்புப் புறக்கணிப்புக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் மாணவ - மாணவியர்களிடையே ஆதரவு கிடைக்கவில்லை. சென்னை, வேலூர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டும்  ஒருசில மாணவர்களே  பள்ளிகளை புறக்கணித்தனர். அதுவும் திமுக கட்சிக்காரர்களும் - குண்டர்களும் தங்களுக்கு வேண்டியப் பிள்ளைகளை தங்களுடன் சேர்த்துக்கொண்டு அரசுப் பள்ளிகளின் வாசல்களில் கோஷங்களை எழுப்பி இருக்கின்றனர்.
                மாணவர்கள் மீது அக்கறையோடு போராட்டம் நடத்திய திமுக மாணவரணி என்று  ஒன்று இதுவரை இருந்ததா..? அப்படி இருந்திருந்தால், இன்றுவரை எங்கே போனது..?  அதுமட்டுமல்லாமல், திமுக மாணவரணி சமச்சீர் கல்விக்காக இதுவரை போராட்டம் நடத்தாதது ஏன்?
               ‘பல்வேறு அமைப்புகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவே இந்தப் போராட்டம்’ என்றால், அறிவிப்பு வெளியானவுடன், கலைஞர்  தொலைக்காட்சியில், அது வரை காட்டப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஏதோ மாணவர் திரள் தன்னெழுச்சியாய் போராட்டம் நடத்தியது போல் காட்டப்பட்டதே... அதற்கு என்ன பொருள்..?
                அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக  சமச்சீர் கல்வி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று திமுக கூறுகின்றது. இப்பிரச்சனையின் தொடக்கத்திலிருந்தே இந்திய மாணவர் சங்கத்திற்கு இக்கூற்றில் உடன்பாடில்லை. தனியார்மயத்திற்கு ஆதரவான நிலைபாடே இதற்குக் காரணம் என்பது தான் வெளிப்படையான உண்மை. பல தனியார் பள்ளி நிர்வாகங்களின் நிர்ப்பந்தமே இதற்கு காரணம் என்றும்  இந்திய மாணவர் சங்கம் கருதுகிறது.
             சமச்சீர்கல்வி அமலானால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதை  தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள்  உறுதியாக நம்புகிறார்கள். அதனால் பாகுபாடுகள் தொடர வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்.
ஆட்சியிலே இருந்தபோது, தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களுக்கு ஆதரவான இதே  நிலைப்பாட்டைத்தான் திமுகவும் எடுத்தது என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. இன்றைய சமச்சீர்கல்வி பிரச்சனைக ளுக்கு அடித்தளம் இட்டது திமுக ஆட்சி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
              இப்போது சமச்சீர் கல்விக்காக நாடகமாடும் திமுக தலைவர் கருணாநிதி தான் ஆட்சி செய்த காலத்தில், கடந்த 2009 - ஆம் ஆண்டு ஜூன் 5 - ஆம் தேதி இதே சமச்சீர் கல்விக்காக அமைதியான பேரணி நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் மீது தடியடி நடத்தி, கடுந்தாக்குதலுக்கு உள்ளாக்கி, பொய் வழக்கை போட்டதை இன்று வசதியாக மறந்திருப்பார். அதுமட்டுமல்லாமல், சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதி, ‘சமச்சீர் கல்விக்காக அவசரப்படக்கூடாது. அதனால், சிலர் பாதிக்கப்படுவார்கள். யாரும் பாதிக்காமல் அதை நிறைவேற்ற காலதாமதம் ஆகும்’ என்று நா கூசாமல் கூறினார் என்பதை தமிழக  மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
                இப்படியாக, தான் ஆட்சியிலிருந்த  போது, கல்வி வியாபாரத்திற்கு சாமரம் வீசிவிட்டு, இப்போது, சமச்சீர் கல்வி கேட்டு போராட வாருங்கள் என அழைக்கும் திமுக தலைவர் கருணாநிதியின்  நாடகத்தை தமிழக மாணவர்கள் நன்கு அறிவார்கள்.     1967-இல் திமுக ஆட்சியமைக்க மாணவர்கள் போராட்டம் உதவியதைப்போல் இப்போதும் உதவும் என்று 
கனவு காண்கிறார் போலும். மீண்டும் மீண்டும் தமிழக மாணவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.   

2 கருத்துகள்:

Story Team சொன்னது…

prachnai karunanithiya jayalalithava, engalukku book kidaikuma illaiya?

Story Team சொன்னது…

prachnai karunanithiya jayalalithava, engalukku book kidaikuma illaiya?