புதன், 29 ஏப்ரல், 2015

சாலை போக்குவரத்தில் வரப்போகும் ஆபத்து...!


             ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், தகுதி சான்றிதழ், புதிய வாகனங்களுக்கான பதிவு எண், நெம்பர் பிளேட் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை இதுவரையில் RTO என்று சொல்லக்கூடிய மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் தான் கொடுக்கப்பட்டு வந்தது. இனி அப்படி கொடுக்கப்படமாட்டாது. மேற்கண்ட அந்த பணிகளை இனிமேல் கார்ப்பரேட் பெருமுதலாளிகள் தான் செய்யப் போகிறார்களாம்.

அதனால் இனிமேல்...
  
        (1) புதிதாக ஓட்டுனர் உரிமம் வாங்குபவர்களும், பழைய உரிமம் வைத்திருப்பவர்களும் தனியாரிடம் தான் உரிமம் பெறவேண்டும். ஏற்கனவே உரிமம் வைத்திருப்பவர்கள் கூட  மீண்டும் புதிதாக விண்ணப்பித்து பெறவேண்டும். இனி பழைய உரிமம் செல்லாது.
          (2)  ஓட்டுனர் பயிற்சியை இப்போது நடத்துவது போல் தனி நபரோ அல்லது பயிற்சி பள்ளியோ நடத்தக்கூடாது. வாகனங்கள்  தயாரிக்கும் நிறுவனங்களே இனி பயிற்சிப்பள்ளியை நடத்துமாம்.
                (3) இரண்டு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ பழுது ஏற்பட்டாலோ அல்லது சர்வீசுக்கோ வழக்கம் போல் உங்களுக்கு தெரிந்த ஒர்க் ஷாப்பில் எல்லாம் விடக்கூடாது. வாகனம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தும் சர்வீஸ் ஸ்டேஷனில் தான் விடவேண்டும். டியூப் பஞ்சர் ஆனாக்கூட இதே நிலைமை தான். 
            (4) வாகனங்களுக்கு மாற்றப்படும் உதிரி பாகங்களை வழக்கம் போல் உதிரிபாகங்கள் விற்கும் உங்களுக்கு வேண்டிய கடையில் வாங்கி பயன்படுத்தக்கூடாது. அதையும் வாகனம் தயாரிக்கும் கம்பெனியில் தான் வாங்கி பயன்படுத்த வேண்டும். கடையில் வாங்கினால் பயன்படுத்தினால் சிறை தண்டனை அல்லது ஆயிரக்கணக்கில் அபராதம் கொடுத்து அழவேண்டும்.
     (5) புதிதாக வாகனம் வாங்கினால் நிறுவனமே  வாகனக்கடன் தருவது என்பது வழக்கம். இனி அதுமட்டுமல்லாமல், ஓட்டுனர் உரிமம், பதிவு எண், நெம்பர் பிளேட், சாலை வரி, வண்டிக்கு இன்சூரன்ஸ், ஓட்டுகிற ஆளுக்கு இன்சூரன்ஸ் எல்லாற்றையும் அவர்களே ஏற்பாடுகள் செய்துவிடுவார்கள். அவைகளுக்கான கட்டணம் ஆயிரக்கணக்கில்  வசூல் செய்வார்கள்.
      (6)  இனிமேல் உங்கள் இருசக்கர வாகனத்திற்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்.சி., என்று சொல்லக்கூடிய தகுதி சான்றிதழ் பெறவேண்டும். அத தகுதி சான்றிதழ் கொடுக்கும் இடம் நெடுஞ்சாலைகளில் கட்டணக் கொள்ளையடிக்கும் ''டோல் கேட்'' என்பதும் ஒரு அதிர்ச்சியான தகவல்.
   (7)  சிறு சிறு போக்குவரத்து விதிகளை மீறினாலோ, விபத்து ஏற்படுத்தினாலோ அல்லது குடிபோதையினால் விபத்து ஏற்பட்டாலோ ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும். கிரிமினல் குற்றவாளியை போல் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் செய்யப்படுவார்கள்.
      (8) நடத்துனர் என்ற பணியே இனி கிடையாது. அந்த பணியை அந்நிய நாடுகளில் உள்ளது போல் ஓட்டுனரே பார்த்துக்கொள்வார்.
    (9) அதுமட்டுமா அரசு போக்குவரத்து கார்ப்பரேட் முதலாளிகளிடம் சென்றுவிடும். டெம்போ மற்றும் ஆட்டோ போக்குவரத்துகளும் கூட அவர்கள் கைகளுக்கே சென்று விடும்.
         இதெல்லாம் எந்த நாட்டுல என்று கேட்கிறீர்களா...?  நம்ப நாட்டுல தான். மோடி இந்த நாட்டு மக்களுக்கு கொடுக்கப்போகும் இன்னொரு மோசமான பரிசு. அது தான் சாலை போக்குவரத்து பாதுகாப்பு மசோதா 2015. இந்த மசோதா பாராளுமன்றத்திற்கு வரப்போகிறது.

கருத்துகள் இல்லை: