ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

அட்சய திருதியை வேட்டிகள் - இந்த ஆண்டின் புதிய கண்டுபிடிப்பு

                  
                 ஒவ்வொரு ஆண்டும் இந்த சித்திரை மாதம் வந்தா ''அட்சய திருதியை'' வரும். அது வருவதற்கு முன்பே இந்த நகைக்கடைக்காரங்க தொந்தரவு தாங்கவே  முடியாது. அப்பப்பா... தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும், செய்தித்தாள்களிலும் ''அட்சய திருதியை அன்று எங்க கடையில நகையை வாங்குங்க... சேதாரம் இல்லை... செய்கூலி இல்லை... முன் பணமா கட்டிடுங்க... வட்டியும் இல்லை...'' அப்படி...  இப்படி... என்று ஒரே நொடிக்கு ஒரு முறை ஒரே நச்சரிப்பு தான். அன்றைக்கு நகைகள் வாங்கினால் அந்த ஆண்டில் நிறைய நகைகளை வாங்குவார்களாம். இப்படியொரு பொய்யை கிளப்பிவிட்டுடுவாங்க. நம்ம ஆளுங்களோ இருக்கிற நகையை வெச்சியாவது கடன் வாங்கி அன்றைய தினம் புதிய நகையை வாங்குவார்கள். பின்னாளில் கடனுக்கு வைத்த நகையை  மீட்ட முடியாமல் போய்விடும். 
              இருபது ஆண்டுகளுக்கு முன்பும் இந்த அட்சய திருதியை வந்தது. ஆனால் அன்றைய தினம் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை யாரும் கிளப்பிவிடவில்லை. ஆனால் இன்றைக்கு தாராளமயமும், உலகமயமும் மக்களிடம் பொய் சொல்லி இலாபம் சம்பாரிக்க சொல்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக தான் நாடு முழுதும் தங்க நகை வியாபாரத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள மிக பெரிய நகைக்கடை நிறுவனங்கள் மக்களின் பணத்தையே குறிவைத்து துணிந்து அப்படியான பொய் கதைகளை அவிழ்த்துவிட்டு கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றன. அதை நம்பி அப்பாவி மக்களும் ஏமாந்து போகிறார்கள். 
                    இந்த கூட்டத்தை துணிக்கடைக்காரங்க பார்த்தாங்க. நாமும் எதையாவது கதையை சொல்லி ஏன் இலாபம் சம்பாதிக்கக்கூடாது என்று யோசித்தார்கள். அவங்க பங்குக்கு அட்சய திருதியை பயன்படுத்திக்கொண்டார்கள். அன்றைக்கு புதிய ஆடைகளை வாங்கினால், ஆண்டு முழுதும் புதிய ஆடைகள் சேருமாம். 
               இப்போது இந்த ஆண்டு தமிழகத்தில் வேட்டிகளை தயார் செய்து விற்பனை செய்யும் ஒரு பெரிய நிறுவனம் அட்சய திருதியை அன்று அவங்ககிட்ட வேட்டியை வாங்கி அட்சய திருதியை மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்து அந்த வேட்டியை மத்தவங்ககிட்ட கொடுத்தா பேஷா இருக்குமாம். சகல சவுபாக்கியத்தையும் பெற்று ஷேமமா வாழலாமாம். இப்படியொரு விளம்பரம் இன்றைக்கு பத்திரிகைகளில் வந்திருக்கு. பெரிய நிறுவனங்களின் இலாபம் மக்களை மூளைச் சலவை செய்வது தான். அதன் விபரீதத்தைப்பற்றி பார்க்காது.

1 கருத்து:

ப.கந்தசாமி சொன்னது…

மூட நம்பிக்கைகள் இருக்கும் வரை வியாபாரிகளுக்குக் கவலை இல்லை.