அண்மையில் இமாச்சல பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயகபூர்வமாகவும், அமைதியான முறையிலும் பேரணி நடத்திய இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியரை அம்மாநில அரசுகள் காவல்துறையை ஏவிவிட்டு காட்டுமிராண்டித்தனமாகவும், கண்மூடித்தனமாகவும் தாக்கியிருப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதுவும் இவ்விரு தாக்குதல் சம்பவங்களும் கடந்த பதினைந்து நாட்களில் நடைபெறும் சம்பவங்களாகும்.


இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்களிலும் அந்த இரு மாநில அரசுகளும் காவல்துறையை பயன்படுத்தி நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயகப்பூர்வமாகவும், அமைதியான முறையிலும் போராடும் மாணவர்களை தாக்குவது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போன்றதாகும். இது அமைதிக்கு எதிராக அமைதியை குலைக்கும் வண்ணம் அரசுகளே நடத்தும் பயங்கரவாதச் செயலாகும். அதே சமயத்தில் மாணவர்கள் எடுத்துரைக்கும் நியாயங்களை சந்திக்க முடியாமல், அவர்களையே எதிர்த்து தாக்குவது என்பது கோழைத்தனமானதும் ஆகும். நியாத்திற்காக போராடும் மாணவ-மாணவியரை அடித்து நொறுக்கிவிட்டால் உண்மை ஊமையாகிவிடும் என்றும், இளைஞர்களின் போராட்டக்குணம் அடங்கி, அவர்கள் வீரமிழந்து கோழையாகி வீழ்ந்துவிடுவார்கள் என்றும் கனவு காண்கிறார்கள் ஆட்சியாளர்கள். மாறாக நம் வீர இளைஞர்கள் அடிக்க அடிக்க அடக்குமுறைக்கு எதிராக எரிமலையாய் வீறுகொண்டு எழுவார்கள் என்பது தான் உண்மை. இந்த இளைஞர்களின் வீரத்தின் முன்னால் இந்த பயங்கரவாத அரசுகள் ஒரு நாள் நொறுங்கிப்போகும் என்பதும் உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக