செவ்வாய், 7 ஏப்ரல், 2015

அடப்பாவிகளா... அப்பாவி தொழிலாளர்களை கொன்னுட்டீங்களே....!

                      
             ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை இருபது அப்பாவி கூலித் தொழிலாளர்கள் கொடூரமான முறையில் ஆந்திர மாநில காவல்துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இரத்த சகதியில் உயிரற்ற நிலையில் வீழ்ந்துகிடந்த அவர்கள் ஒவ்வொருவரின் உடலின் அருகிலும் செம்மரங்கள் போடப்பட்டிருந்தன. அந்த கூலித்தொழிலாளர்கள் யாரோ ஒரு சில ''பெரும்புள்ளிகளால்''  கூலிக்கு அமர்த்தப்பட்டு, செய்வது சட்டவிரோதம் என்றாலும் குடும்ப வருமானத்திற்காக, ஆபத்து என்று தெரிந்தே உயிரைப் பணயம் வைத்து அந்த ''வேலைகளில்'' ஈடுபட்டு வருபவர்கள்.  வழக்கமாக அவர்களால் அவ்வாறு வெட்டப்படும் மரங்கள் எல்லாம்  வனத்துறையினர்  மற்றும் காவல் துறையினர்களின் ஆசிர்வாதத்தோடு வெளிநாடுகளுக்கும் கடத்தி  அந்த ''பெரும்புள்ளிகள்''  கோடிகோடியாய் கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு மாதம் தோறும் அதிகாரிகளுக்கு மாமூலும் போய்விடுகிறது. 
                பெரிய பெரிய அரசியல்வாதிகளும், தாதாக்களும், வெளிநாட்டு கடத்தல்காரர்களும் தான் இந்த செம்மரக்  கடத்தலில் ஈடுபடும் ''உலக மகா யோக்கியர்கள்'' என்பது காவல்துறையினருக்கு  தெரிந்திருந்தும், அவர்களை சுட்டுத்தள்ளாமல், அவர்களால் ஏவிவிடப்பட்ட அப்பாவிகளை சுட்டுத்தள்ளுவது நியாயம் தானா...?  எய்தவனை விட்டுவிட்டு அம்பை தண்டிக்கலாமா...? குற்றம் செய்தவர்களை கைது செய்து விசாரிக்காமல், விசாரணை ஏதுமின்றி சுட்டுக்கொன்றது என்பது மனிதநேயமற்றது. மனித உரிமைக்கு எதிரானது. அத்துமீறி நடந்துகொண்ட காவலர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் கைது செய்து விசாரிக்கவேண்டும். தண்டிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: