திங்கள், 6 ஏப்ரல், 2015

மனிதா நீ விழிக்கும் வரை எழுதுவேன்...!


அன்பிற்கினிய தோழர்களே... நண்பர்களே...
               எனது ''ஆயுத எழுத்து'' என்ற இந்த வலைப்பூவில் 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்டுரை எழுதத் தொடங்கி, நேற்று தான் ஆயிரமாவது பதிவை எட்டினேன். உண்மையிலேயே ஆயிரம் முறை பிரசவம் செய்தது போல் உணர்கிறேன். அந்த ஆயிரத்தில் சுமார் இருபது கட்டுரைகள் தீக்கதிர்,  தி இந்து மற்றும் இன்னும் சில பத்திரிக்கைகளில் இருந்து எடுத்துப் போடப்பட்டது.
           நான் எழுதிய அத்துணை கட்டுரைகளும் சுய விளம்பரம் தேடியோ அல்லது என்னை வளர்த்துக்கொள்ளவோ எழுதப்பட்டது அல்ல. நான் சார்ந்த என் இயக்கம் வளருவதற்காகவும், விழிப்புணர்வில்லாத நம் மக்களுக்கு நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அதற்கான காரணிகளை செய்திகளாய்  கொண்டு சேர்ப்பதற்காகவும் தான் எழுதுகிறேன். சமூகமாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தனை கட்டுரைகளும் உருவானது. நம் காலத்திலாவது சமூக மாற்றத்தை  நிகழ்த்தி காட்டமுடியாதா என்ற ஏக்கத்தில் - எதிர்ப்பார்ப்பில் எழுதப்பட்டது. அதனால் தான் எண்ணிக்கை உயரவேண்டும் என்பதற்காக குப்பை செய்திகளை பதிவிடாமலும், சமையல் குறிப்பு போன்ற பொழுதுபோக்கு செய்திகளை பதிவிடாமலும் சர்வதேச, தேசிய, மாநில அரசியல் முதல் பொருளாதாரம், வரலாறு, அறிவியல், கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுகிறேன். 
               என்னை எழுதத் தூண்டியது நான் சார்ந்திருக்கும் செங்கொடி இயக்கம் தான். நான் பேசவும், எழுதவும், பாடம் நடத்தவும் என் இயக்கம் தான் என்னை அடையாளம் கண்டு எனக்கு கற்றுத்தந்தது. வலைப்பூவில் எழுதுவதன் மூலம், அன்றாடம் வலைத்தளங்களை மொய்த்துக்கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு விழிப்புணர்வு தரமுடியும் என்ற நம்பிக்கையில் தான் எழுதுகிறேன். அதன் மூலம் பாரதியும் பகத்சிங்கும் கனவுகண்ட உண்மையான அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பெண்விடுதலை பெற்ற பொன்னுலகம் மலரும் என்ற நம்பிக்கையில் தான் எழுதுகிறேன்.... எழுதிக்கொண்டிருக்கிறேன்... இன்னும் எழுதுவேன்... மனிதா நீ விழிக்கும் வரை...!
          தொடர்ந்து ஆதரவும் ஆலோசனையும் தாருங்கள்...!

1 கருத்து:

VEDANTHANGAL DHAMODHARAN சொன்னது…

ஆயிரம் பிறைகளுக்கு அப்பாலும் தங்களின் பனி தொடர்க