ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

மதசார்பற்றக் கட்சிகளின் ஒற்றுமை இன்றைக்கு அவசியமானது...!

                                                                                                                                        
   
              இந்தியாவில் இன்று வரவேற்கத்தக்க ஓர் ''அதிசயம்'' திகழ்ந்திருக்கிறது. இன்று மாலை பாட்னாவில் நடைபெற்ற லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்திற்குப்பின் லாலு பிரசாத் யாதவ், பிரிந்திருக்கும் ஆறு கட்சிகளின் தலைவர்கள் சார்பில் சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லோக்தளம், சந்திரசேகரின் சமாஜ்வாடி ஜனதாக்கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஆகிய ஆறு கட்சிகளை  இணைத்து ''ஜனதா பரிவார்'' என்ற புதிய கட்சி தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். 
              இனி அந்த ஆறு கட்சிகளும் இணைந்து ''ஜனதா பரிவார்'' என்ற ஒரே கட்சியாக  ஒரே கொடி மற்றும்  ஒரே சின்னத்துடன் செயல்பட்டு தேர்தலை சந்திக்கும் என்றும், முறைப்படியான அறிவிப்பை முலாயம் சிங் யாதவ் வெளியிடுவார் என்றும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார். 
              இந்த அறிவிப்பு என்பது வெயிலின் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ''கோடை மழை'' பெய்தது போல் உள்ளது. தற்போது நாடு வெறிப்பிடித்த மதவாத இந்துத்துவா சக்திகளிடம் சிக்கி திணறி தவித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், பிரிந்து கிடக்கும் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவது என்பது அத்தியாவசியமானது... அவசியமானது. 2014-ஆம் ஆண்டுத் தேர்தலில் பொய்களை அள்ளித்தெளித்து, வாக்குகளை கவர்ந்து, வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சியின் ஆட்சி என்பது நாட்டை தவறான பாதைக்கு அழைத்துச்சென்று, மக்களை சொல்லொனாக் கொடுமைகளை அனுபவிக்க செய்கிறது. மக்களிடம் பிடுங்குவதும், பெருமுதலாளிகளுக்கு அள்ளிக்கொடுப்பதுமான தவறான பொருளாதாரக் கொள்கையும், அதனால் அல்லல்படும் மக்களை மதத்தின் பேரால் திசைத்திருப்பதுமான திருகுவேலைகளில் ஈடுபடும் பாரதீய ஜனதாக்கட்சிக்கு மாற்றாக ஒரு மதசார்பற்ற ஜனநாயக சக்தி தேவைப்படுகிறது. அத்தகைய மாற்று என்பது இடதுசாரி சக்தியாகத்தான் இருக்கமுடியும். ஆனால் தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சியோ பெருமுதலாளிகள் மற்றும் ஊடகங்களோடு கூட்டணியமைத்து, கோடிக்கோடியாய் பணத்தை இரைத்து, மக்களை மூளை சலவை செய்து, இடதுசாரிக்கட்சிகளின் எண்ணிக்கையை குறைத்து பலமிழக்கச் செய்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், மூளைக்கொன்றாய் பிரிந்திருக்கும் மதசார்பற்ற சக்திகள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக உருமாறியிருப்பது என்பது வரவேற்கத்தக்கது. பாராட்டுதற்குரியது.
          இந்த இணைப்பு என்பது தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மட்டுமில்லாமல், தேர்தலுக்குப்பின்னும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். மதசார்பற்ற கட்சிகளிடம் உள்ள வேற்றுமையும், ஒற்றுமையின்மையுமே,  பாரதீய ஜனதாக்கட்சிக்கு  கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதையும் அவர்கள் மறந்துவிடக்கூடாது.

1 கருத்து:

paanaayeenaa சொன்னது…

மதச்சார்பின்மை மிகச் சரி.
இந்த கூட்டம் ஒரு ஊழல்
நாயகர்களின் சங்கமம்.