செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உச்சக்கட்டத்தில் மம்தாவின் வெறியாட்டம்

         

 
             

               மேற்குவங்க மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நான்கு ஆண்டுகள் முடியுறும் வேளையில் மாநிலத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் அறிவிக்கப்பட்டு சென்ற வாரம் அதற்கான தேர்தல்கள் கட்டம் கட்டமாக நடைபெற்றன. தேர்தல்களை ஜனநாயகத்திற்கு உட்பட்டு, நியாயமான முறையிலும், நேர்மையான முறையிலும் அமைதியுடன் நடத்தவேண்டிய மம்தாவின் தலைமையிலான அரசு ஜனநாயகத்தையும், நியாயத்தையும், நேர்மையையும் காற்றில் பறக்கவிட்டு, அராஜகத்தையும், அட்டுழியங்களையும் கட்டவிழ்த்து விட்டு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடத்தியிருக்கிறது. 
            பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தன் மீது நம்பிக்கை வைத்து, கடந்த 36 ஆண்டுகளாக மாநிலத்தில் கோலோச்சியிருந்த இடதுசாரிகளை இறக்கிவிட்டு, மம்தாவை அரியணையில் ஏற்றிய மக்கள்  இன்று மம்தாவின் மீது அதிருப்தியில் இருப்பதால் வெற்றிபெறுவது சிரமம் என்ற நிலையில் மம்தா இந்த உள்ளாட்சி தேர்தலை அராஜகமான தேர்தலாக நடத்தி சாதனை புரிந்திருக்கிறார்.
  வாக்காளர்கள் ஓட்டுப்போடாத வண்ணம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். மீறி ஓட்டுப்போட வரும் பொதுமக்கள் மீது   மம்தா கட்சியை சேர்ந்த ரவுடிகளே கையெறி குண்டுகளை வீசுவதும், துப்பாக்கிகளால் சுடுவதுமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர். அந்த ரவுடிகளுக்கு மம்தாவின் காவல்துறையே துணைக்கு நின்றது. காவல்துறையினரே அமைதியான முறையில் ஓட்டுப்போட வரும் பொதுமக்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். பல இடங்களில் பொதுமக்களே இந்த அராஜக கும்பலுக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கிறார்கள்.
                அதுமட்டுமல்லாமல் மம்தாவின் ரவுடிகள் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுவது, துரத்தியடிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு கள்ளவோட்டு போடுவது போன்ற அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். மம்தா கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களை மிரட்டியிருக்கின்றனர். இவர்கள் பேச்சை மீறி நிற்கும் இடதுசாரி வேட்பாளர்களை கொலை வெறியுடன் தாக்கியிருக்கின்றனர்.
           இப்படியாகத்தான் மம்தா உள்ளாட்சித் தேர்தலை மிக அருமையாக நடத்திஇருக்கின்றார். முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து வெளிப்பட்ட மம்தாவின் வெறியாட்டம் இன்று உச்சத்தை தொட்டுயிருக்கிறது.
               அவசர நிலை காலத்தில் மேற்குவங்க மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே நடத்திய  காட்டாட்சியை விட இன்றைக்கு மம்தா நடத்தும்  ஆட்சி காட்டுமிராண்டித்தனமாகவும் அராஜகமாகவும் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆணவத்தின் உச்சத்தில் - அராஜகத்தின் உச்சத்தில் வெறியாட்டம் போடும் மம்தாவிற்கு மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில்  இல்லை.

கருத்துகள் இல்லை: