வியாழன், 9 ஏப்ரல், 2015

ஆளுமையும், தோழமையும் நிறைந்த ஜே.கே. என்ற ஜெயகாந்தன்

               
           படைப்பிலக்கியத்தில் இமயம் போல் உயர்ந்து நின்ற தோழர்.ஜே.கே என்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் நேற்றிரவு மறைந்தார். 
                தமிழிலக்கியத்தில் பாரதி, புதுமைப்பித்தன், பாரதிதாசன், ஜீவா போன்ற போற்றத்தக்க ஆளுமை வரிசையில் நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் நாம் அவரை பார்த்து - படித்து வாழ்ந்தோம் என்ற பெருமையை நமக்கு அளித்தவர். தோழர்.ஜீவா மற்றும் தோழர்.கே.முத்தையா போன்ற தலைவர்களிடம் பொதுவுடைமை சித்தாந்தங்களை பாடமாக  கற்றவர். அப்படியே வாழ்ந்தும் காட்டியவர். அதனால் தான் அவரது எழுத்துகளில் பொதுவுடைமை சிந்தனைகளும், முற்போக்கு கருத்துகளும் சேர்ந்தே காணப்பட்டன. பொதுவாக இவர்  மேட்டுக்குடி மக்களைப் பற்றியும்  எழுதமாட்டார். அவர்களுக்காகவும் எழுதமாட்டார். இவரது படைப்புகளில் தெருவோரவாசியான  சாதாரண தொழிலாளிகளையும், அவர்களது வாழ்க்கை கஷ்டங்களையும் பற்றி மட்டுமே படம்பிடித்து காட்டியிருக்கிறார். 
            பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி கம்பன் கழகம் ஏற்பாடு செய்திருந்த கம்பன் விழாவிற்கு இவரை அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் பேசும் போது, கம்பன் ''ஏர் எழுபது'' என்ற பாடலை எழுதியிருக்கிறான். விவசாயத்தைப் பற்றி பாடல்களாக வடித்தவன் கம்பன் ஒருவன் மட்டுமே. நான் அதை படித்த பிறகு தான் அவன் எழுதிய இராமாயணத்தை படித்தேன்'' என்று அவர் சொன்னதை கேட்டபிறகு தான் அங்கிருந்த பல பேருக்கு கம்பன் ''ஏர் எழுபது'' என்ற விவசாயப் பாடலை பாடியிருக்கிறான் என்ற செய்தியே தெரிந்தது.
           ஜெயகாந்தன் பாரதியை போன்றே எல்லா இடங்களிலும், எல்லா சமயங்களிலும் எதற்கும் தலைவணங்காமல் கம்பீரம், கர்வம், துணிச்சல், நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்நடை, வீரமிக்க பேச்சு என அனைத்தும் கலந்த ஆளுமையை காட்டியவர். அனால் அதே சமயத்தில் தொழிலாளர்கள் என்றால் அவர்கள் தோளில் கை போட்டு தோழமையை காட்டுவார். அந்த காலத்தில் ஒரு முறை புதுச்சேரி நேரு வீதியில் ரிக்சா தொழிலாளியை அவரது வண்டியிலேயே உட்கார வைத்துக்கொண்டு தோழர்.ஜெயகாந்தன் ரிக்சா வண்டியை தானே ஓட்டிச் சென்றிருக்கிறார் என்பதே அவரது தோழமைக்கு மிகச்சிறந்த உதாரணம்.
              இவர் பள்ளியில் படித்ததோ ஐந்தாம் வகுப்பு வரையில் தான். ஆனால் இவரது இலக்கிய படைப்புகளை ஆய்வு செய்து நிறைய மாணவர்கள் ''முனைவர் பட்டம்'' பெற்றிருக்கிறார்கள். அந்த அளவிற்கு பாரதி சொன்னது போல் சுடர்மிகு அறிவுடன் வாழ்ந்தவர் தான் நம் ஜே.கே. அந்த சுடர் இன்று அணைந்துவிட்டது. ஆனாலும் அந்த சுடர் இலக்கிய உலகிற்கு வெளிச்சம் காட்டும். ஏனென்றால் தோழர். ஜெயகாந்தனுக்கு என்றும் மரணமில்லை.              

கருத்துகள் இல்லை: