சனி, 21 ஜனவரி, 2012

''துக்ளக்'' சோவின் உளறலும் ஜெயலலிதாவின் ஆசையும்...!

                                   துக்ளக் பத்திரிகையின்  ஆண்டு விழா வழக்கம் போல் ஜனவரி 14 - ஆம் தேதியன்று சென்னையில் நடைப்பெற்றது. . துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ''சோ'' இந்நிகழ்ச்சிக்கு  பாரதீய ஜனதா கட்சியின்   தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட மதவாத கோஷ்டிகளை அழைத்து,  2014 - இல் வரப்போகும் பாராளுமன்றத்தேர்தலுக்கான அச்சாரமாக அந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்.
      அந்த விழாவில் அத்வானி பேசும்போது,  தமிழக முதல்வராக ஜெயலலிதா இருக்கும் நிலையில், சோவுடைய நிகழ்ச்சியில் அத்வானியும், மோடியும் கலந்து கொண்டால், கிசுகிசுக்களுக்குப் பஞ்சமிருக்காது. பார்லிமென்டில் பா. ஜ. க.   பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. மத்திய அரசின் தவறான செயல்பாடுகளைக் கண்டிக்கும் பிரச்னைகளில், அ.தி.மு.க., எங்களுக்கு எந்தக் குறைவுமற்ற, முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்த இடத்தில் நான், ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். அ.தி.மு.க.,வும், நாங்களும் இயல்பான கூட்டணியாக இருக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறி ஜெயலலிதாவை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை கச்சிதமாக ஆரம்பித்துவிட்டு அமர்ந்தார்.
                    விழாவின்  முடிவில், முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரான  "துக்ளக்' ஆசிரியர் சோ பேசும்போது,  "எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின், புதிய மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். திறமையான அரசை வழங்கும் தகுதி, பா.ஜ.க - வுக்கு மட்டுமே இருக்கிறது. ஒருவேளை, அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் தடை கிளம்புமானால், ஜெயலலிதாவை பிரதமராக்க பா.ஜ.க  ஒத்துழைக்க வேண்டும்,'' என்று சொல்லி தான் விழாவிற்கென்று வரவழைத்த அத்வானிக்கும், மோடிக்கும் ''பேதி மருந்தை'' ஊற்றிவிட்டார்.
              அதுமட்டுமல்ல,   அந்த விழாவிற்கு வந்திருந்த ''துக்ளக்'' வாசகர்களெல்லாம்  ஒன்றுமே புரியாமல்  குழம்பிப் போய் உட்கார்ந்திருந்தார்களாம்  . இவர் எந்தக் கட்சியை சேர்ந்தவரு...பாஜகவா...? அதிமுகவா...? கருணாநிதிக்கு நீரா ராடியா போல் ஜெயலலிதாவிற்கு இவர் தான் அரசியல் புரோக்கரா...? என்று அந்த மக்கள் குழம்பி போய்விட்டனராம். இப்படியான உளறல்களுக்கு பேர் போனவர் தான் இந்த ''சோ'' என்பது துக்ளக் படிக்கும் அனைவருக்கும் தெரிந்தது தான்.  அதிலும் அவருடைய உளறல்களிலேயே ஒரு மகா உளறல் இது தான் என்று விழா முடிந்து வெளியே வரும்போது வாசகர்கள் பேசிக்கொண்டார்கள்.   
            இந்த நிகழ்ச்சி நடந்து இரண்டு நாட்கள் கழித்து, ஜனவரி 16 - ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் இருந்த தகவல்களை கவனித்தால், அன்று சோ முன்மொழிந்ததை இன்று ஜெயலலிதா வழிமொழிந்திருக்கிறார் என்பது புரியும். அந்த அறிக்கையில் ஜெயலலிதா அன்புக் கட்டளையிட்டிருக்கிறார்.
            அதில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்....''தேசிய அரசியலை நோக்கி கழகம் உயரவேண்டும்...தமிழக எல்லையும் தாண்டி இந்தியா முழுமைக்குமான அரசியல் வெற்றியை பெறக்கூடிய பொற்காலத்தை அதிமுக தொண்டர்கள் உருவாக்கவேண்டும்'' என்று ஒரு தொலைநோக்குப் பார்வையோடும், ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடோடும் சொல்லியிருக்கிறார் என்பதை அந்த அறிக்கையின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.  
               இதன் மூலம் என்ன புரிகிறதென்றால், பாரதீய ஜனதா கட்சி ஜெயலலிதாவுக்கு மகுடி வாசித்து இழுக்கிறார்கள் என்பதும், மகுடிக்கு மயங்கி ஜெயலலிதாவும் பா. ஜ. க. வை நெருங்குகிறார் என்பதும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சோவின் அறியுரைகளைக் கேட்டுக்கொண்டு, ஜெயலலிதா மீண்டும் பா. ஜ. க. கூட்டணியின்  பக்கம்  சாய்வாரேயானால், வரலாறு அவரை மன்னிக்காது.

2 கருத்துகள்:

Seeni சொன்னது…

Ayyaa !
ammaavaala-
thamil naayla busla-
poka mudiyala!

ithula pirathamar entraal-
naatla vaazha mudiyaathu!

chidambaranathan சொன்னது…

டான்சி நில வழக்கில் இருந்து விடுபட, கோவில்களில் உயிர்பலி கொடுக்கக்கூடாது என்று தடைவிதித்து, அதன் மூலம் இந்து அமைப்புகளின் ஆதரவைப்பெற்று, அந்த வழக்கில் இருந்து விடுபட்டார். இப்போது கர்நாடகத்தில் வழக்கு நடக்கிறது. வழக்கிற்கு கர்நாடகத்தை ஆளும் பாஜக உதவும் என்ற எண்ணத்தில் இந்த தூண்டிலை ஜெயலலிதா வீசுகிறார்.

இது அப்பாவி பாஜகவினருக்கு புரியுமா?.

கொடுத்த ஆதரவை நடுவில் விலக்கிக்கொண்டவரை இன்னும் பாசத்துடன் நினைவு வைத்திருப்பது வேடிக்கையானது.