ஞாயிறு, 1 ஜனவரி, 2012

புதியதோர் உலகம் செய்வோம் - புதிய ஆண்டில் உலக அமைதி காப்போம்...!

                      இன்று புதிய ஆண்டு 2012 பிறந்துவிட்டது... அதுவும் குறிப்பாக புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் ''தானே'' கோரப்புயலின் தாக்குதல் காரணமாக, இந்த பகுதிகளில் 2012 - ஆம் ஆண்டு மிகவும் சிரமப்பட்டு பிரசவம் ஆனது. சென்ற ஆண்டு  2011 நம் நாட்டு மக்களைப் பொறுத்தவரை சிரமமான ஆண்டாகத் தான் சென்றது. 
                 சென்ற ஆண்டில் மக்களுக்கு தேவைக்கேற்ற வருமானம் இல்லை. விலைவாசியோ விண்ணைத்தாண்டி உயர்ந்துகொண்டே போனது...
                    போதாக்குறைக்கு ஆட்சியாளர்கள் வேறு... பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை தாறுமாறாக உயர்த்திவிட்டார்கள்.
                    இது போன்ற மக்களின் பிரச்சனைகளை விவாதிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சியும், பாரதீய  ஜனதா கட்சியும் கூட்டு சேர்ந்து முடக்கியது ஒரு புறம்...
               அப்பப்பா ஏகப்பட்ட ஊழல் அணிவகுப்புகள்... மக்களே திணறிப்போனார்கள். ஒரு பக்கம் ஏழ்மை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது... இன்னொருப்பக்கம் வளமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டும் ஏழ்மையான  இந்தியா - வளமையான இந்தியா என்ற இரண்டு வகையான இந்தியாவில் மாற்றமில்லை. மாறாக இந்த இரண்டு இந்தியாவிலும் வளர்ச்சி என்பது அதிகம். இது தான் ஆட்சியாளர்களின் சாதனையாக கூசாமல் எடுத்து சொல்கிறார்கள்.  
               உலகில் இந்தியாவைத் தவிர பல நாடுகளில் ஆட்சியாளர்களினால் - குறிப்பாக ஏகாதிபத்தியத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது சென்ற ஆண்டின் நல்ல அம்சமாகும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளிலும் தன்னெழுச்சியாக எழுந்த மக்களின்  எழுச்சியை உலகம் பார்த்து அதிசயித்தது. ஏகாதிபத்தியம் மிரண்டு போனது.
            தென்னிந்தியாவில் சகோதரர்களுக்குள் அணைக்காக மோதிக்கொண்டார்கள். அமைதிப்படுத்தவேண்டிய ஆட்சியாளர்கள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாட்டிலுள்ள ஊழல், விலைவாசிப்பிரச்சனை போன்றவற்றை திசைத்திருப்புவதற்கு இந்த மோதல்கள் ஆட்சியாளர்களுக்கு தேவைப்பட்டது.
           இப்படியாக சென்ற ஆண்டு சோதனைகளும், சாதனைகளும் கலந்த ஆண்டாக சென்று விட்டது.
           மாவீரன் பகத்சிங் சொன்னது போல் ''பாலுக்கு அழும் குழத்தை... கல்விக்கு ஏங்கும் மாணவன்... வேலை தேடும் இளைஞன்... வறுமையில் வாடும் தாய்... இவர்கள் இல்லாத உண்மையான சுதந்திர இந்தியாவை'' இந்த புத்தாண்டில் நாம் காண வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்... இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்... அதற்காக போராட  இப்புத்தாண்டில் நாம் உறுதியேற்க வேண்டும்....
               போரில்லா உலகத்தை - அமைதியான உலகத்தைப் படைக்க போராட நாம் இப்புத்தாண்டில் உறுதியேற்க வேண்டும். 
                   புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டப் 
                          போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
            இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

1 கருத்து:

சசிகலா சொன்னது…

போரில்லா உலகத்தை - அமைதியான உலகத்தைப் படைக்க போராட நாம் இப்புத்தாண்டில் உறுதியேற்க வேண்டும்.
புதியதோர் உலகம் செய்வோம் -
மிகவும் அருமை