செவ்வாய், 17 ஜனவரி, 2012

இந்திய நாட்டின் மாபெரும் தலைவர் தோழர். ஜோதிபாசு நினைவைப்போற்றுவோம்....!

        
 
  சுதந்திரப்போராட்ட வீரர், உழைப்பாளி மக்களின் தோழன், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல்கொடுத்த போராளி,  உலகிலேயே அதிக ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றிய மக்கள் ஊழியன், இந்த தேசத்தின் சரியான அரசியல் பாதைக்கு வழிகாட்டிய கலங்கரைவிளக்கம், இந்திய நாட்டின் மாபெரும் தலைவன் 
  தோழர் ஜோதிபாசு 
      நினைவைப் போற்றுவோம்....
‘கடுமையான  பணி காத்திருக்கிறது’  
 
            அனைத்துக் கட்சிகளையும் ஒப்பிடும் போது மார்க்சிஸ்ட் கட்சிதான் மிகுந்த ஜனநாயக உணர்வு கொண்ட கட்சி என்று நான் எப்போதுமே கூறி வந்துள்ளேன். கட்சி மட்டத்தில் நாங்கள் எல்லாவற்றையும் பற்றி விவாதிப்போம். இதன் மீது எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, அனைவராலும் நிறைவேற்றப்படவும் வேண்டும். இதுதான் ஸ்தாபன கட்டுப்பாடு குறித்த எங்களது கருத்தாகும்.
          ஏகாதிபத்தியவாதிகள் அதிகமான அளவில் மூன்றாவது உலக வளரும் நாடுகளை இலக்காகக் கொண்டு வருகிறார்கள். ஆசியாவின் புலிகள் என்று கூறப்பட்ட நாடுகள் சரிந்து விழுந்துள்ளன. முதலாளித்துவ வெற்றிப்பாதையின் முன் உதாரணங்கள் என்று இந்த நாடுகளை சுட்டிக்காட்டிய வாதம் மிக மோசமான வகையில் தவறாகப் போனது. முதலாளித்துவப் பாதையின் மூலமாகத்தான் முன்னேற முடியும் என்று மூன்றாவது உலக வளரும் நாடுகளுக்கு முன் வைக்கப்பட்ட வாதம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
             “எங்களின் அனுபவங்களே எங்கள் பணிகளை எளிமையாக்கியது என்பது மிகையல்ல. அடிப்படையான மார்க்சிய - லெனினிய கோட்பாடுகளை மனதில் நிறுத்தி நாங்கள் செயல்பட்ட போதெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இது தான் இதுவரை நமது அனுபவம். இதன் பொருள் சமரசமாக நடந்து கொள்வது என்பது அல்ல. வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி நமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் உட்பொருளாகும்”.
        மூன்றாவது அணி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறி வருகிறது. நீடித்த இயக்கங்கள், மக்களின் ஈடுபாடு ஆகியவற்றின் மூலமாகத்தான் இதை உருவாக்க முடியும். முன்னெப்போதையும் விட இடதுசாரிகளின் பொறுப்பு என்பது மேலும் முக்கியமானதாக மாறியுள்ளது. நமக்கு முன்னே மிகவும் கடினமானதொரு போராட்டம் காத்திருக்கிறது. அதே நேரத்தில் இது அவசியமானதும் முக்கியமானதும் ஆகும். வரலாறு மிகப்பெரியதொரு பொறுப்பை நம் மீது சுமத்தியுள்ளது. இதுபோன்ற கடுமையான சோதனைகளின் மூலம் தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி உருவாக முடியும். அத்தகைய அமிலச் சோதனைதான் நமக்கு முன்னே காத்திருக்கிறது.

-தனது சுய சரிதையில் தோழர் ஜோதிபாசு

கருத்துகள் இல்லை: