வியாழன், 26 ஜனவரி, 2012

கல்வித் துறையிலும் வேலை வாய்ப்பிலும் ஜெயலலிதா தடுமாறுவது ஏன்..?

ஏன் இந்த குழப்பம்?

           பயிற்சிநிலை செவிலியர்கள் திடீரென்று வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அவர்கள் கோரிக்கை மிக எளிமையானது. நாங்கள் மூன்றரை ஆண்டு படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறோம். மேலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், அரசு மருத்துவமனைகளில் கடுமையான அளவுக்கு செவிலியர் பற்றாக்குறை இருக்கும்போது, எங்கள் பயிற்சிக்காலத்தில் அந்த இடத்தை எங்கள் உழைப்பால் நிரப்பி இருக்கிறோம். அதன் மூலம் மிகுந்த அனுபவம் பெற்றிருக்கிறோம். அப்படி இருக்க, தனியார் கல்லூரிகளில் பயின்றவர்களுக்குப் பணி வழங்க தேர்வு நடத்துவது போல் எங்களுக்கும் தேர்வு என்பது நியாயமற்றது என்பது அவர்களின் வாதம். அது முழுக்க முழுக்க உண்மையானதும் சரியானதும் கூட. மருத்துவப் படிப்பையும் தனியார் மயமாக்கியதால் ஏற்பட்டிருக்கிற நெருக்கடி இது.
            செவிலியர்களை கைது செய்ததோடு, அவர்கள் விடுதியிலேயே கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்டிருப்பதும், கட்டாயக் கையெழுத்து வாங்குவதும் ஆட்சியாளர்களின் ஊழியர் விரோத, ஜனநாயக விரோதப் போக்கையே பளிச்சென படம் பிடிக்கிறது.
             சமச்சீர் கல்வியில் குழப்பம், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தேர்வு முறையில் குழப்பம், பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு தேர்வில் பெரும் பின்னடைவு, ஆசிரியர்கள் பணி நியமனத்தில் பதிவு மூப்பு புறக்கணிப்பு, மக்கள் நலப் பணியாளர்கள் ஒட்டுமொத்தப் பணி நீக்கம், நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னும் இன்னும் பணி வழங்கப்படாத அவலம், இப்படி கல்வித் துறையிலும் வேலை வாய்ப்பிலும் தொடர்ந்து ஜெயலலிதா அரசு தடுமாறுவது ஏன்? சமூக நீதி சார்ந்து- சமூக யதார்த்தம் சார்ந்து சிந்திக்காமல் யாரோ சில மேல்தட்டு அறிவு ஜீவிகளின் நடை முறைச் சாத்தியமற்ற யோசனைகளை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செயல்படுவது தான் காரணம்.
                    மத்திய அரசின் செயல்பாடுகளிலும் இது போன்ற கொள்கைக் குழப்பம் நிறையவே இருக் கிறது. அதிலும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் முழுவதுமாக உலகமயத்தின் பிரதிநிதியாகவும் சமூக நீதி மறுப்பாளராகவும் காட்சியளிக்கிறார். மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத்தேர்வு மிகப்பெரிய பிரச்சனை ஆகியிருக்கிறது. அதுபோல உயர் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு இல்லை யென்கிற நிலையும் உருவாகி உள்ளது. மேலும் ஏற்கெனவே மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு அவசரக்காலத்தில் கட்டாய மாற்றம் செய்யப்பட்ட கல்வித்துறையை தற்போது மெதுவாக மத்திய நேரடிப் பட்டியலுக்கு நகர்த்து கிற கைங்கரியத்தையும் செய்து கொண்டிருக் கிறார். இதை எதிர்த்து குரல் கொடுக்கிற தமிழக அரசு, தான் அதுபோன்றவற்றை அமல்படுத்துகிறது என்றால் அது இரட்டை வேடமல்லவா?
                      கல்வித் துறையிலும் வேலை வழங்குவதிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற அணுகு முறை ஆபத்தானது. பெரும்பாலான அடித்தட்டு மக்களை பெரும் சோதனைக்கு உள்ளாக்குவ தாகும். இதனை தமிழக அரசு உணர வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கருதினால், அதை பொது விவாதத்துக்கு உட்படுத்தி மக்களின் - குறிப்பாக அதனால் பாதிக்கப்படுகிற அல்லது பயனடைகிற பிரிவினரின் மனோநிலையை துல்லியமாக ஆய்ந்து முடிவு களை மேற்கொள்ள வேண்டும். இல்லையென் றால் அதிருப்தியும் குழப்பமுமே மிச்சமாகும். இது ஜனநாயகத்திற்கும் உகந்ததல்ல. வளர்ச்சிக்கும் உகந்ததல்ல.

கருத்துகள் இல்லை: