சனி, 7 ஜனவரி, 2012

''தானே'' புயல் மரங்களை அழித்தது - வெப்பத்தின் தாக்கம் உயர்ந்தது...!

                       புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்  ''தானே'' புயல் தாக்கி சென்று பத்து நாட்கள் கடந்த பின்னும் இன்னும் சகஜ நிலை திரும்பவில்லை. அடித்த புயல் வேகத்தில் வேலை நடக்காவிட்டாலும் வேலை நடந்துகொண்டு தான் இருக்கிறது. இடிந்த வீடுகளையும், கூரைகளையும் சரிசெய்வது, மின்சாரம் - குடிநீர் - பால் விநியோகங்களை சீர்செய்வது, சாலைகளில் வீழ்ந்துகிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது  போன்ற வேலைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த வேலைகளெல்லாம் முடிந்து சகஜநிலைக்குத் திரும்ப இன்னும் பல நாட்கள் ஆகும் என்று தான் சொல்லப்படுகிறது. 
                இவ்வளவு வேலைகள் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு விஷயத்தை அரசாங்கமும், மக்களும் கவனிக்க தவறிவிட்டனர். அடித்தப் புயலில் வேரோடு  பிடுங்கி எறியப்பட்டும்,  கிளைகளோடு ஒடிந்து வீழ்த்தப்பட்டும், புயலின் வேகத்துக்கு அசராமல் நின்றுகொண்டிருந்தாலும் கிளைகளையும், இலைகளையும் இழந்தும் சோகமாக நின்றுகொண்டிருக்கும் மரங்களைப் பார்க்கும் போது போர் நடந்தது போல் - அணுகுண்டு வெடித்தது போல் காட்சியளிக்கிறது.  அந்த மரங்களை எல்லாம்  பார்க்கும் போது நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது.
                 அப்படி வீழ்ந்த மரங்கள் அனைத்தும்   பல ஆண்டுகள் வயதான மரங்களாகவும், பல அரிய வகை மரங்களாகவும், பல வகையான பறவைகளுக்கு சரணாலயமாகவும், பல வகையான சிறு விலங்குகளுக்கு புகலிடமாகவும், உழைப்பாளி  மக்கள் ஓய்வெடுக்கும் கூரையாகவும், அடிக்கும் வெய்யிலில் அருமையான குடையாகவும்,  ஊரின் வெப்பத்தைக் குறைக்கும் குளிர் சாதனப்பெட்டியாகவும், பூக்களையும், காய்கனிகளையும் அள்ளித்தந்த வள்ளலாகவும்  இருந்திருக்கின்றன என்பது நாம் கண் கூடாக பார்த்த உண்மையாகும். தாகத்தைத் தனித்து குளிர்ச்சியைத் தந்த நெடிய தென்னை மரங்களும் நிலம் சாய்ந்து போயின.
               இன்று அந்த மரங்கள் எல்லாம் விறகாக மாறிவிட்டன. அந்த மரங்களை எல்லாம் வெட்டியும் அறுத்தும், எந்திரங்கள் அள்ளி தூக்கி போட்டு, லாரியில் ஏற்றிச்செல்லும் போது நமக்கெல்லாம் மனது பதைக்கிறது. எத்தனை தலைமுறைகளை காத்த மரங்கள், இன்று இன்றைய தலைமுறையினால் கூட காப்பாற்ற முடியாமல் வீழ்ந்து போயிற்று என்பதை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது. நம்முடைய முன்னோர்கள் எத்தனைக் கனவோடு இந்த மரங்களை வைத்திருப்பார்கள். எதிர்காலத்தில் வரும் தலைமுறையினருக்கு  இந்த மரங்கள் எல்லாம் காவல் தெய்வங்களாக இருக்கும் என்று அல்லவா கனவு கண்டு இருப்பார்கள். இந்தனை காலமாக நம்மை காப்பாற்றிய மரங்களை நம்மால் காப்பாற்ற முடியவில்லையே என்று மனம் பொருமுகிறது.
                ஒரு மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜெனை (Oxygen) 22 மரங்கள் தருகின்றன என்றும், ஒரு ஏக்கர் நிலத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் உற்பத்தி செய்யும் ஆக்சிஜெனை 18 பேர் சுவாசிக்கலாம் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் வன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
                  ஒரு மனிதனுக்கு ஒரு நிமிடத்திற்கு சுவாசிக்க ஏழிலிருந்து எட்டு லிட்டர் வரை ஆக்சிஜென் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் ஆக்சிஜெனை சுவாசிக்கிறான்.
அப்படியென்றால் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு இந்த மரங்கள் எவ்வளவு உதவிபுரிகின்றது என்பதை புரிந்துகொள்ளுங்கள். 
               இன்று தொண்ணுறு சதவீத மரங்களை  நாம் இழந்துவிட்டாதால், நாம் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜெனை பல கோடி லிட்டர் அளவுக்கு இழந்துவிட்டோம் என்பது தான் உண்மை.  அதுமட்டுமல்ல, நாட்டிலுள்ள தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெளியிட்ட கரியமில வாயுக்கள் என்று சொல்லக்கூடிய கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பூமி சூடாகும் போது இந்த மரங்கள் வெளியிட்ட ஆக்சிஜென் தான் பூமியின் சூட்டைக் குறைத்தது.
             இன்று மரங்கள் வெகுவாக குறைந்துவிட்டதால், புயலுக்குப் பிறகு நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால் தெரியும், புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் வெப்பம் அதிகமாகத் தெரிகிறது. இரவு நேரம் கூட பனி தெரிவதில்லை. இரவும் சூடாகத்தான் இருக்கிறது. மின்விசிறி இல்லாமல் தூங்க முடியவில்லை. பகலில் வெய்யில் சுளீரென்று அடிக்கிறது. மரங்களே இல்லாமல் ஊரே பளீர் வெளிச்சமாக இருக்கிறது. இப்போதே இப்படி இருக்கிறதென்றால், கோடை மிகக் கடுமையாக இருக்கும் என்பது தான் மிகப்பெரிய கொடுமையாகும்.
                எனவே மரத்தைப் பற்றிய கவலை இப்போதே தொற்றிக்கொண்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம், மின்சாரம், குடிநீர், பால் போன்றவற்றை ஏற்பாடு செய்கின்ற மத்திய - மாநில அரசுகள் மரங்கள் நடுவதிலும் அக்கறைக்காட்ட வேண்டும். இப்போது மரக்கன்றுகளை நட்டால் தான் குறைந்தது பத்தாண்டுகளிலாவது நிலைமை சீரடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
               இந்த விஷயத்தில் அரசுகளை மட்டும் எதிர் பார்க்காமல், பொது மக்களும்  அக்கறை காட்டவேண்டும். மக்கள் தங்கள் வீடுகளின் எதிரே வீதிகளின் இருப்பக்கங்களிலும், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளிலும், முக்கிய சாலைகளிலும், மக்கள் கூடும் இடங்களான மருத்துவமனை, திருமணக்கூடம், சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம், பார்க், மார்க்கெட், வழிப்பாட்டுத்தலங்கள்  போன்ற இடங்களிலும் கண்டிப்பாக மரக்கன்றுகளை நடுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.
                 இப்படி செய்தால் தான் வரும் காலம் குளிர்ச்சியாக இருக்கும். நாம் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜென் கிடைக்கும். சுற்றுச்சூழலையும் பாதுகாக்கமுடியும்.

கருத்துகள் இல்லை: