சனி, 21 ஜனவரி, 2012

முதல் பெண் நாதஸ்வர கலைஞர் மறைந்தார்....!


பொன்னுதாயி - 
முதல் பெண் 
நாதஸ்வர கலைஞர்                                                    
               
              எப்படிப்பட்ட  சாதனையாளர்களையும்,  கலைஞர்களையும் காலப்போக்கில் மக்கள்  மறந்துபோவது என்பது இயற்கை. அப்படிப்பட்ட சாதனையாளர்கள் கலைஞர்கள் வரிசையில்  முதல் பெண் நாதஸ்வர  கலைஞரான  மதுரை எம்.எஸ்.பொன்னுத்தாயும் ஒருவர்.  அவர் கடந்த 17-ம் தேதி  தனது 84  - ஆவது வயதில் சிறுநீரகக்கோளாறு காரணமாக மதுரையில் தனது இல்லத்தில் காலமானார்.
              பொன்னுத்தாயின் பாட்டி பாப்பம்மாள் அந்தக் காலத்தில் பிரபலமான மிருதங்க வித்வான் இருந்திருக்கிறார். நடிகவேள்  எம்.ஆர்.ராதாவின் நாடகக் கம்பெனியில் அவர்தான் ஆஸ்தான மிருதங்கக் கலைஞர் ஆவார். பாட்டியின் இசை வாரிசாக வளர்ந்த பொன்னுத்தாயி  மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆஸ்தான வித்வானாக இருந்த பி.நடேச பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார். பிற்காலத்தில் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் உள்ளிட்ட  ஆறு பேரிடம்  தம் இசை அறிவை பட்டை தீட்டிக் கொண்டார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் திருமணத்துக்கு    நாதஸ்வரம் வாசித்தது பொன்னுதாயி அம்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.  .
         மதுரை சித்திரைத் திருவிழா தசாவதார நிகழ்ச்சியில் தனது 9 - ஆவது வயதில் பொன்னுத்தாயி அரங்கேற்றம் நிகழ்த்தினார். அதன் பிறகு எத்தனையோ மேடைகள்; எண்ண முடியாத பட்டங்கள் பெற்று உயர்ந்தார்.  இவர் தனது வாழ்நாளில் 23 தங்கப் பதக்கங்களை வாங்கி இருக்கிறார் என்பது யாரும் அறியாத உண்மையாகும்.   ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதலமைச்சர்கள் போன்ற பெருந்தலைவர்களால்    கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
        மதுரை காந்தி மியூஸியம் திறப்பு விழாவுக்கு பிரதமர் நேரு வருகை தந்த போது இவரது கச்சேரிதான் நடைப்பெற்றது.  முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு ஆகியோர் முன்னிலையிலும் இவர் நாதஸ்வரம் வாசித்திருக்கிறார். அப்போதெல்லாம் மதுரைக்குச் சினிமா இசைக் கலைஞர்கள் யார் வந்தாலும் இவர் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுவது வழக்கம். பொன்னுத்தாயின் கணவர் சிதம்பர முதலியார், சுதந்திரப் போராட்ட தியாகி. காமராஜர், பக்தவத்சலம் ஆகியோருக்கு நெருக்கம். காங்கிரஸ் கட்சியின் ஜில்லா போர்டு தலைவராகவும் எம்.எல்.சி-யாகவும் இருந்தவர். மதுரை முனிசிபாலிட்டி சேர்மன், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் பதவிகளையும் அலங்கரித்தவர்.

               பொன்னுத்தாயிக்கு பூர்வீகச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தும்  அத்தனையும் போய், அவரது மகனும் இரண்டு மகள்களும் இப்போது வாடகை வீட்டில்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ''இவர் நாதஸ்வரக்  கலைஞர்கள் சங்கத் தலைவராக  இருந்தப்ப மத்த கலைஞர்களுக்கு எல்லாம் வீட்டுமனை வாங்கிக் கொடுத்தவங்க, தனக்கு வந்த மனையை வேண்டாம்னு திருப்பிக் குடுத்துட்டாங்க. கடைசியா, அரசாங்கம் குடுத்த 1,000 ரூபாய் பென்ஷனைத் தவிர, எந்தச் சலுகையையும் அவங்க அனுபவிக்கலை'' என்று உணர்ச்சிவசப்படுகிறார் பொன்னுத்தாயின் மாமன் மகன் பரஞ்சோதி மணி.

2 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நாதஸ்வர இசையில் மிகுந்த ரசனை எனக்குண்டு. ஆனால் இப்படி ஒரு பெண் நாதஸ்வரக்கலையில் கலக்கியுள்ளார் நான் அறியாமலே மறைந்துவிட்டார்.
இணையத்தில் ராசரெத்தினம்பிள்ளை அவர்களின் இசையையும் தேடி ரசித்துளேன்.
இப் பெண்மணி சிறந்த கலைஞர் மாத்திரமன்றி, தன்னலமற்ற உன்னதப் பெண், இவரை இன்றைய அரசியல் வாதிகள் படிக்கவெண்டும்.
இவர் இசைத்தட்டுக்கள் இல்லையா?
இருந்தால் தயவுசெய்து இணையத்தில்
சேர்க்கவும்.
இப் பதிவுடனும் ஒரு சிறு கச்சேரித் துண்டை இணைத்தால் மிக நன்று.
அவர் உறவுகளிடம் கேட்டுப்பார்க்கவும்.
இச்செய்தியை பதிவாக்கியதற்கு மிக்க நன்றி.
அன்னார் புண்ணியாத்மா சாந்தியுறும்.

puduvairamji.blogspot.com சொன்னது…

நிச்சயமாக முயற்சி செய்கிறேன்...