ஞாயிறு, 1 ஜனவரி, 2012

புதுவையை புரட்டிப்போட்ட கோரப்புயல் - ''தானே''

           சென்ற ஆண்டு டிசம்பர் 29 - ஆம் தேதி அன்று இரவு - மூன்று நாட்கள் முன்பு தான் - யாரும் அழைக்காமல் தானே வந்த புயல் அந்த இரவு முழுதும் அடித்து புதுவையையே தலைக்கீழாய் புரட்டிப்போட்டது. அந்த புயலின் பெயர் ''தானே''...புதுவையில் நாங்கள் இதுவரை காணாத வேகம் - 130 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று... மரங்கள் எல்லாம் பேயாட்டம் ஆடி சாய்ந்தன... 
             தானேப் புயலின் வேகமும், கோரமும் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால் தான் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 29 - ஆம் தேதியன்று இரவு எட்டு மணிக்கே புதுவை முழுதும் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டன. அப்போதிலிருந்தே லேசாக காற்று வீச ஆரம்பித்தது. லேசான மழையும் இருந்தது. புதுவை இருளில் மூழ்கியது.
             பிறகு நேரம் செல்லச்  செல்ல எங்களுக்கெல்லாம் புயலின் விபரீதம் புரிய ஆரம்பித்தது. நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பிறகு காற்றின் வேகம் கொஞ்சகொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. அவ்வப்போது எங்களது கைப்பேசியில் புதுவை வானொலியில்  ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறப்பு செய்தியை கேட்டுக்கொண்டிருந்தோம். அந்த இரவு முழுதும் அந்த வானொலியில் தந்த எச்சரிக்கையின் மூலமும், புயலின் வேகத்தின் மூலம் அதன் விபரீதம் புரிந்தது. வானொலியில் ஒவ்வொரு முறையும் ''வீட்டை விட்டு யாரும் வெளியே வாராதீர்கள்'' எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
              வீட்டுக்கு வெளியே இருந்தப் பொருட்கள் விழும் சத்தமும், உடையும்  சத்தமும் தான் விடியும் வரை கேட்டுக்கொண்டிருந்தது. விடிந்தபின் கூட மதியம் வரை வெளியே செல்லமுடியவில்லை. கொஞ்ச கொஞ்சமாகத் தான் காற்றின் வேகம் குறைந்தது. மாலை தான் வெளியே செல்லமுடிந்தது. வெளியே சென்று பார்க்கும் போது  தான், இயற்கை புதுவையை எப்படி எல்லாம், சின்னாப்பின்னம் ஆகியிருக்கிறது என்பது தெரிந்தது......
               அந்த இரவிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் புதுவையில் மின்சாரம் இல்லை... இரண்டு நாட்களுக்கு பால்,  குடிநீர், செய்தித்தாள் போன்றவைகள் கிடைக்கவில்லை. அதுவும் புத்தாண்டு பிறப்பு என்பது மிகவும் சோதனையான காலமாக போய்விட்டது. 
             இதில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால், காற்று அடித்த வேகத்தில் மரங்களில் கூடு கட்டி வசித்துவந்த லட்சக்கணக்கான பறவைகள் அழிந்து போயின. மரங்களில் கட்டப்பட்டிருந்த பறவைகளின் கூடுகள் எல்லாம் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அது மட்டுமல்ல சாலையோரங்களில் வளர்க்கப்பட்ட மரங்களெல்லாம் சாய்ந்து விட்டன. நூறு ஆண்டுகால பெருமை வாய்ந்த நெடிய  மரங்கள் சாய்ந்து போனது என்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம் இது தான்.

கருத்துகள் இல்லை: