செவ்வாய், 4 மார்ச், 2014

காங்கிரஸ் கட்சிக்கே ''அல்வா'' கொடுத்த ''தெலங்கானா'' சந்திரசேகர ராவ்...!

           
              தெலங்கானா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து ''தெலங்கானா ராஷ்டிரிய சமிதி'' என்ற கட்சியை ஆரம்பித்து, ஆந்திர மாநிலத்தையே இரண்டாக பிளந்து சமாதிக் கட்டியவர் தான் அந்த கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ் என்ற ஆந்திரப்பிரதேச சகுனி. முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு ''சமிதி'' ஆரம்பித்து ஆந்திர மாநிலத்திற்கே ''சமாதி'' கட்டியவர் தான் இந்த கே.சி.ஆர். அதேப்போல் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரே மொழிப் பேசும் ஒரு மாநிலத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே தூக்கியெறிந்து, ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராகவும்  மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலமாக பிரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலம் என்பது ஒன்றுக்கு பதில் இரண்டாக கிடைக்கும் என்ற பேராசைப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த ''பேராசையை''  பயன்படுத்திக்கொண்டு, சந்திரசேகர ராவும் ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலத்தை  உருவாக்கி,  அதற்கு ஐதராபாத் நகரையே தலைநகராக அமைத்துக் கொடுத்தால் தெலங்கானா பகுதியில் பலம் வாய்ந்த கட்சியாக திகழும் தன்னுடைய தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதாக கே.சி.ஆர் ''ஆசை வார்த்தை'' காட்டி காங்கிரஸ் கட்சித் தலைமையை தன்  பக்கம் இழுத்து காரியத்தை திறமையாக முடித்துக்கொண்டார்.
            ஆந்திர மாநிலத்திலேயே ஒன்றுபட்ட ஆந்திராவை விரும்பும் மக்களின் போராட்டங்களையும் மீறி, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிளம்பிய பலத்த எதிர்ப்புகளையும் மீறி ஆந்திர மாநிலத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய அரசு  ஐதராபாத்தை பொதுத்தலைநகராகக் கொண்ட தெலங்கானா மற்றும் சீமாந்திரா என இரு மாநிலங்களை சட்டமசோதா நிறைவேற்றியதன் மூலம் உருவாக்கிவிட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு காட்டிய உற்சாகமும், வேகமும் வேறு எந்த மசோதாவிற்கும் காங்கிரஸ் கட்சி காட்டியது இல்லை. இதே உற்சாகத்தையும், வேகத்தையும் ''மகளீர் இடஒதுக்கீடு மசோதாவிலும்'' காட்டியிருந்தால், இந்நேரம் மகளீருக்கு ஆட்சி அதிகாரத்தில் 33% இடஒதுக்கீடு கிடைத்திருக்கும் என்ற ஆதங்கம் இந்த நாட்டிலுள்ள மகளீருக்கும், முற்போக்காளர்களுக்கும்  உண்டு என்பதை நாடறியும்.
             மக்களின் அதிருப்தியில் பலகீனமாக போய்விட்ட காங்கிரஸ் கட்சி எப்படியாவது வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றாகவேண்டும் என்கிற நப்பாசையிலும், தெலங்கானா மாநிலம் என்ற பஞ்சு மிட்டாயை காட்டி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை தங்களுடன் இணைத்துக்கொள்ளலாம் என்ற பேராசையிலும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு காங்கிரஸ் கட்சியோ தேர்தலுக்கு முந்தைய கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இப்படியெல்லாம் படுவேகமாக கைகளை நகர்த்தி தெலங்கானா மாநிலத்தை உருவாக்கி கே.சி.ஆரிடம் கொடுத்துவிட்டது. சந்திரசேகர் ராவும் சுதந்திரப்போராட்டத்தில் வெற்றிபெற்றது போல் வெற்றிக்களிப்பில் மிதந்தார். பிரிவினையை விரும்பிய மக்களும் ஐதராபாத்தில் இவருக்கு மிக உற்சாகமாக வரவேற்பெல்லாம் அளித்தார்கள். கடைசியில் ஐதராபாத் வந்து சேர்ந்தவுடன் இந்த ''தெலங்கானா கொண்டான்'' - ''மக்கள் ஒற்றுமை கொன்றான் '' கே.சந்திரசேகர ராவ் காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தது என்பது ஊருக்கெல்லாம் அல்வா கொடுக்கும் காங்கிரஸ் கட்சிக்கே என்னால் தான் அல்வா கொடுக்க முடியும் என சந்திரசேகர ராவ் நிருபித்துக் காட்டியிருக்கிறார். வடை போச்சே என்ற கடுப்பில் காங்கிரஸ் கட்சி இப்போது இருக்கிறது.
             எமனுக்கே எமனாக இருப்பார் போலிருக்குதே இந்த சந்திரசேகர ராவ்....?

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அய்யா, தயவு செய்து தெலங்கானாவின் சரித்திரம் தெரிந்து எழுதுங்கள். தெலங்கானா மக்களின் விருப்பமில்லாமல் தான் பழைய ஆந்திர மாநிலத்தோடு (கர்நூலைத் தலைநகராகக் கொண்டு சென்னையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது) சேர்த்து ஆந்திரப் பிரதேசம் என்று மாற்றிக் கொண்டனர். மாநிலம் உருவான நாளிலிருந்தே அவர்கள் போராடி வருகிறார்கள். இதில் அரசியல் அமைப்பு சட்டம் எங்கே காலில் போட்டு மிதிக்கப்பட்டது? இது மாநிலத்தைப் பிரிப்பது அல்ல, பழைய நிலையில் மீண்டும் கொண்டு வருவது. அதனால் தான் மாநில மறுசீராய்வு என்று சொல்லுகிறார்கள். Bifurcation என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

ஒன்றுபட்ட ஆந்திரத்தை விரும்பும் மக்களின் கருத்துக்களை மதிக்கவில்லை என்று சொல்லுகிறீர்கள். அப்படி என்றால் தெலங்கானா மக்களின் கருத்துக்களுக்கு என்ன மரியாதை?

உங்கள் இடுகையில் மக்களில் யாருக்குமே தெலங்கானா அமைவதில் விருப்பம் இல்லாதது போலவும் கே.சி.ஆர். ஒருவர் மட்டும் பிடிவாதம் பிடித்து தெலங்கானாவை அமைத்தது போல எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் கே.சி.ஆர். கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பும் அதே கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருந்தது. தமிழகத்தின் முன்னாள் ஆளுனர் சென்னா ரெட்டியும் இதே போராட்டத்தை முன்னெடுத்தவர் தான். அவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்து போராட்டத்தை நீர்க்கச் செய்தது காங்கிரஸ் கட்சி.

ஒரு பதிவை எழுதுவதற்கு முன்பு கொஞ்சமாவது அதைக் குறித்து ஹோம் ஒர்க் செய்துவிட்டு எழுதுங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம்னு எழுதாதீங்க. உங்கள் கட்சியின் நிலைப்பாடுகளை உங்கள் எழுத்தில் பிரதிபலிக்க விரும்புவது தவறில்லை தான். அதற்காக உண்மை என்று ஒன்று இருப்பதை சுத்தமாக மறந்துவிடுவது அத்தனை சரியல்ல.