திங்கள், 31 மார்ச், 2014

ஊழலின் ஊற்றுக்கண் யார்...? - காங்கிரஸ் கட்சியா...பாஜக-வா...?


கட்டுரையாளர் : தோழர்.பிரகாஷ் காரத்             
                                 பொதுச்செயலாளர்,          
                                 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                    

          மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் ‘தி இந்து‘ ஆங்கில நாளேட்டின் அனிதா ஜோசுவாவிற்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு அரசு அமைவதற்கான வாய்ப்புகள் குறித்தும், ஊழல் உள்பட இடதுசாரிகளால் எழுப்பப்பட்டு வரும் அதே பிரச்சனைகளை எழுப்பிடும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகமான அரசியல் ஆதாயம் கிடைப்பதற்கான காரணங்கள் குறித்தும் பேசினார். 
அவரது பேட்டியிலிருந்து ....!

          உறுதியான தலைமைக்காக கூக்குரல் எழுந்து வருகிற நேரத்தில் மூன்றாவது மாற்றுக்கு - குறிப்பாக மூன்றாவது அணி ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து குழப்பம் நிலவி வருகிற போது - இடமிருக்கிறதா?

           (பாஜகவின் பிரதமர் வேட்பாளராகிய நரேந்திர) மோடியின் அரசியல் கோட்பாடுகளிலிருந்து முரண்படுபவர்கள் நாங்கள். வலுவான தலைவருக்கான குரல் என்பது கார்ப்பரேட் ஊடகத்தின் கூக்குரலும் கூட. இன்றைய நிலைமையில் தங்களுக்கான விஷயங்களை செய்து கொடுப்பதில் மோடி தாராளமாக இருப்பார் எனக் கருதுவதால் (பிரதம மந்திரி) மன்மோகன் சிங்கிடமிருந்து இவர்களது பார்வை மோடியின் பால் திரும்பியிருக்கிறது. அது மட்டுமின்றி, வலுவான சர்வாதிகார ஆட்சி என்பதனையே பெருவணிக நிறுவனங்களும், கார்ப்பரேட்டுகளும் விரும்புகின்றன. நிலையான ஆட்சி, சட்டம், ஒழுங்கு என்ற பெயரில் எல்லா அதிருப்திகளும் கைவிடப்படுகின்றன. இத்துடன் இந்துத்துவா கொள்கையும் இணைக்கப்படும்போது அது மிக அபாயகரமான கலவையாக ஆகிறது. எனவேதான், இதற்கு எதிரானதொரு நிலையை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் கூடுதலான கூட்டாட்சி முறையை, மத்திய அரசிடம் குவிந்துள்ள அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தனிநபரைப் பற்றி மறந்துவிடுங்கள், இத்தகையதொரு சர்வாதிகார ஆட்சி முறை மத்திய அரசின் கைகளில் குவிந்திடுவதனை நாங்கள் விரும்பவில்லை. பாஜகவால் எப்போதும் முன்வைக்கப்படுகின்ற, நிர்வாக அதிகாரம் அனைத்தையும் ஒரு நபருக்கு அளித்திடுகிற ஜனாதிபதி ஆட்சி முறையை நாங்கள் ஏற்கவில்லை. இந்தியா போன்றதொரு தேசத்தில், இத்தகைய ஆட்சி முறை மிக மோசமான விளைவுகளையும், பிரிவினைவாத தாக்கத்தையும் ஏற்படுத்தும். இந்தியா மிக அதிகமான வேறுபாடுகளை தன்னுள்ளடக்கியுள்ள, பூகோள ரீதியாக விரிந்து பரந்திருக்கிற நாடாகும். சர்வாதிகாரம் இங்கு செல்லாது.

          தற்போது நடந்த முடிந்துள்ளவற்றைப் பார்க்கும்போது, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு அணியை உருவாக்கிட தேர்தல்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அவசரகதியிலானவை எனத் தோன்றுகிறதா?

               காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக ஒன்றாக இணைந்திடுவதற்கான விழைவையும், தேர்தல்களுக்குப் பிறகு இத்தகைய மாற்றுக்கு ஒரு வடிவம் கொடுக்கப்படும் என்பதனையுமே பிப்ரவரி 25 அன்று நாங்கள் அறிவித்தோம்.

             ஆனால், அந்த அறிவிப்பின்போது உங்களுடன் இருந்தவர்களில் சிலர் இப்போது வெளியேறியிருப்பது என்பது ஒரு பின்னடைவுதானே?
              பின்னடைவுதானே? கூட்டு மேடையில் இருந்த கட்சிகள் தங்களுக்குள்ளே தேர்தல் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்பதனை துவக்கத்திலேயே நாங்கள் அறிவோம். இந்த கட்சிகள் - பெரும்பாலும் மாநில கட்சிகள் - எல்லாம் தேர்தல்களிலே அவர்களது சொந்த பலத்தை அதிகரித்துக் கொள்ளவே செயல்படுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, அகில இந்திய அளவில் நாங்கள் ஒன்றிணைந்தது என்பது, இக்கட்சிகளிடையே ஏதாவது ஒரு வடிவத்தில் தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவரவர் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லது பாஜகவிற்கு எதிராக களம் இறங்குவது என்பதில் அவர்கள் அனைவருக்கும் பங்கிருந்தது. அந்தஅடிப்படையில் தேர்தலுக்குப் பின் நாங்கள் இதனை ஒருமுகப்படுத்திடுவோம்.

            பிப்ரவரி 25 அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் பெரும்பாலானோர் இதனை “மூன்றாவது அணி” என்று அழைப்பதனை தவிர்த்தனரே, அப்படியானால் அது கைவிடப்பட்டுவிட்டதா?

            ஒரு திட்டத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு பொதுவான மேடைதான் ஒரு அணி என்பதாகும். ஆனால் அப்படி எதுவும் இல்லாதபோது நாங்கள் ஏன் அவ்வாறு சொல்லிக் கொள்ள வேண்டும்? தேர்தலுக்கு பின்னர் ஒரு அணியாக அமைவதற்கு இது ஒரு வாய்ப்பு என்றே நாங்கள் கூறினோம். தேர்தலுக்குப் பின்னர் நாங்கள்ஒரு பொதுவான செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து, அதன் பின்னர் ஓர் அணியை ஏற்படுத்திடலாம்.

                  இடதுசாரிகள் பல ஆண்டுகளாக கையிலெடுத்தபோதும் சிறிய விளைவுகளே ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் சிலவற்றையே இன்றைக்கு ஆம் ஆத்மி கட்சி கையிலெடுக்கிறது; ஆனாலும் அதன் எதிரொலி பெரிதாக இருப்பது ஏன்?

            கார்ப்பரேட் ஊடகங்கள் அவர்களை விளம்பரம் செய்கிறது. 2005ம் ஆண்டு, எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்காக என முதலமைச்சர்கள் குழு அமைக்கப்பட்ட போதே அப்பிரச்சனையை நாங்கள் கையிலெடுத்தோம். இப்பிரச்சனை ஆம் ஆத்மி கட்சி கையிலெடுத்தால் அதனால் பாதிப்பில்லை. இடதுசாரியினர் இதனை கையிலெடுக்கிறபோது, அவர்கள் இதனை விடுவதில்லை, தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். ஒரு சில தனிநபர்களை குறி வைப்பது என்பதல்ல இது. இது கொள்கைப்பூர்வமான பிரச்சனையாகும். இக்கொள்கைகள் திரும்பப் பெறப்படுவதற்கான முயற்சிகளையே நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எங்களது கொள்கைப்பூர்வமான அடிப்படை நிலைபாட்டில் செல்வாக்கு மிகுந்த வட்டத்திற்கு ஏற்புடைமை இல்லை. எனவே, அதனை புறக்கணித்திட விரும்புகிறார்கள். எனவே, இத்தகைய கொள்கைகளை நாங்கள் விமர்சிப்பது என்பது, இக்கொள்கைகளின் ஆணிவேரை கேள்விக்குள்ளாக்குவது என்பதாகும். ஆம் ஆத்மி கட்சியோ, இந்த அடிப்படைக் கொள்கைகள் எதனையும் கேள்விக்கு உள்ளாக்காமல், வெறும் பிரச்சனைகளை மட்டுமே கையிலெடுக்கின்றனர்.மத்தியதர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் தனியார்மயக் கொள்கையினை ஏற்றுக் கொள்கின்றனர். எனவே,ஊழல் என்பதனை நன்னெறிசார்ந்த விஷயமாக மட்டும் பார்த்து கேள்விக்கு உள்ளாக்கிடுவது என்ற நிலைபாடு அவர்களுக்கு சௌகரியமாக உள்ளது. தனியார்மயக் கொள்கைகளே இத்தகைய ஊழல்களைஎல்லாம் உருவாக்குகின்றன என்று நாங்கள் சொல்கிறோம். மேலும், தற்போதைய நவீன-தாராளமய முதலாளித்துவ அமைப்புமுறையில் ஊழல் என்பது மூலதனத்தை குவிப்பதற்கான ஒரு கருவியே ஆகும்.
தமிழில்: எம். கிரிஜா 

கருத்துகள் இல்லை: