வியாழன், 20 மார்ச், 2014

மாற்றம் சாத்தியமே - அதுவே இந்தியாவின் இன்றைய தேவை...!


அ. சவுந்தரராசன், எம்.எல்.ஏ., அவர்களின் உரை...!

             எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்று சொல்வார்கள். அது போல இப்போது நமது எல்லா சக்திகளும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி என்று எண்ணி நாம் செயல்பட வேண்டிய நேரம் இது. நாடாளுமன்ற தேர்தலில் யார் என்ன செய்தார்கள் என்று பார்ப்பதில் தான் நாம் தீர்க்கமான முடிவிற்கு வர முடியும். நம்மைப் பொறுத்த வரையில் நாம் இந்த நாட்டின் உழைப்பாளி மக்களின், நடுத்தர வர்க்க மக்களின், தொழிலாளிகளின், விவசாயிகளின், ஏழை எளிய மக்களின், மிகப் பெரும்பான்மை மக்களின் வாழ்கைக்கான தேவைகளை நிறை வேற்றுவதற்கான கொள்கைகளை பின் பற்றுபவர்களாக, பெரு முதலாளிகளுக்கு சாதகமாக இல்லை என்பதான கொள்கைகளை பின்பற்றுபவர்களாக இருக்கிறோம்.
           மாருதியில் ஒரு அதிகாரி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி தொழிற்சங்கத்தை முடக்குவதற்காக 147 பேரை சிறையில் அடைத்து வைத்துள்ள சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அவர்களை ஜாமீனில் விடும்படி கோரிநீதிபதியை அணுகினால், நீதிபதி சொல் லக் கூடிய காரணம் இன்றைய உலகமயச் சூழலில், இவர்களை வெளியேவிட்டால் வெளி நாடுகளில் இருந்து வர வேண்டிய மூலதனம் இந்தியாவிற்குள்ளே வராது என்பதாகும். நீதிமன்றமே பிரச்சாரத்தை நடத்துகிறது. தொழிலாளி தன்னை ஒன்றுபடுத்திக் கொள்வதை, ஒரு சக்தியாக்கிக் கொள்வதை, இன்றைய உலகமய சமூகம் ஏற்காது, இன்றைய சட்டம் ஏற்காது. நீதிகள் ஏற்காது. ஸ்ரீபெரும்புதூரிலே, சென் னையிலே எத்தனை தாக்குதல்களை சந்தித்துள்ளோம் என்று அறிவோம். ஆகவே, நம்முடைய பலத்தை நாம் நிலை நிறுத்திக் கொண்டால்தான் நமக்கென்று இருக்கின்ற உரிமைகளைக் கூட நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.எதைச் செய்தாலும், எந்த நடவடிக்கை எடுத்தாலும், அது முதலாளிகளுக்கு இறுதியில் நன்மையை அளிக்க வேண்டும் என்ற வகையில்தான் ஆட்சி யாளர்களால் கொள்கைகள் உருவாக்கப் பட்டு பின்பற்றப்படுகின்றன.
           அன்றைக்கு பொதுத்துறைகளை உண்டாக்கி யதும், இன்றைக்கு அவற்றை சிதைப் பதும் முதலாளிகளுக்காகத்தான். அன்றைய முதலாளிகள் சிறிது பலவீன மானவர்களாக இருந்தார்கள். ஆகவே பொதுத்துறை தேவைப்பட்டது. பொது மக்களின் பணம் தேவைப்பட்டது. அதன் மூலம் கட்டமைப்புகள் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் மின்சாரம், போக்குவரத்து போன்ற கேந்திரமான துறைகள் அரசு மட்டுமே நடத்தப்பட வேண்டிய துறைகள் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது முதலாளிகள் பலத்தைப் பெற்ற பிறகு அவற்றை அவர்கள் கையில் கொடுத்துவிடுவோம் என்ற கொள்கை நிலைப்பாடு. அதிகமான விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும், இன்று இரயில்வே உட்பட அனைத்துக் கேந்திரமான துறைகளிலும் தனியாரை அனுமதிப்பதும், அவுட் சோர்சிங், காண்டிராக்ட் என்றுதனியார்மயப்படுத்தும் முயற்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதே போல கனரகத் தொழிற் சாலைகளில் தீர்மானிக்கும் சக்தியாக அரசு இருக்க வேண்டும் என்ற நிலைமாறி தனியார் கைகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
               1968-69ம் ஆண்டுகளில் பெட்ரோலியத் துறை தனி யாருக்குப் போய்விடக் கூடாது என்பது முடிவாக இருந்தது. கேந்திரமான ஒன்று மக்களுக்கு அவசியம், நாட்டிற்கு அவசியம், பொருளாதாரத்திற்கு அவசியம், சமூக இயக்கத்திற்கு அவசியம் என்று இருக்கின்ற எந்த ஒரு பொருளையும் தனியாரின் ஆதிக்கத்திற்கு விடக்கூடாது என்றிருந்தது. எனவே, அது தனியார் கையில் செல்லக்கூடாது என்று சொல்லப்பட்டது. பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்றவை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பட்டன. ஆனால், இன்று நிலைமையே வேறு. இயற்கை எரிவாயுவில் ஓஎன்ஜிசியை விட ரிலையன்சிடம் அதிகமாக உள்ளது. ரிலையன்ஸ் உட்பட பலதனியார் நிறுவனங்கள் பல இலட்சக் கணக்கான கோடி ரூபாயை உபரியாக பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இரண் டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ரிலையன்சுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. பிஜேபியை எடுத்துக் கொண்டால் பெரு முதலாளிகளுக்குச் சாதகமான இது போன்ற விஷயங்களில் ஒரு சிறு முணுமுணுப்புக் கூட கிடையாது என்பது தான். காரணம் இரண்டு கட்சி களுமே பெரு முதலாளிகளைப் பொறுத்த வரையில் ஒன்றுபோல் தான் உள்ளன. அதே போல கேந்திரமான துறைகளிலே தனியார்மயம் தேவை என்பதிலும் ஒரே நிலைப்பாட்டினையே கொண்டுள்ளன.இரும்பு, செம்பு போன்றவற்றில் எல்லாம் அரசின் கட்டுப்பாடுகள் இருந் தன.
மின்சாரத் துறையிலும் தனியார்மய முயற்சி. 60 முதல் 70 சதமானம் உற்பத்தி என்பது நம் கையில், அரசின் கையில் இருக்குமானால் முதலாளிகள் மிரட்டுகிறார்கள் என்று சொல்கின்ற நிலை இருக்காது. தமிழ்நாட்டில் 72 ஐடிஐ நிறுவனங் கள் அரசுக்குச் சொந்தமாக உள்ளன. கிட்டத்தட்ட 700 ஐடிஐ நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற் றில் பெரும்பாலானவற்றில் மாணவர் களே இல்லை. இன்றைக்குத் தமிழகஅரசாங்கம் என்ன செய்து கொண் டிருக்கிறதென்றால், இந்த தனியார் நிறுவனங்களில் படிக்கும் மாணவர் களுக்கான செலவினை அரசாங்கமே அவர்களுக்கு வேண்டிய கட்டணத்தை கொடுத்துவிடும். தனியாரிடம் படிப் பதற்கு அரசாங்கம் பணம் கொடுக்கும் என்பதை விட உயர்ந்த தரத்தோடு உயர்ந்தகட்டமைப்போடு வேண்டிய ஆசிரியர்களோடு வேண்டிய உபகரணங் களோடு அரசாங்கமே ஐடிஐ நிறுவனங்களை நடத்த முடியும். ஆனால்,அப்படி செய்வதில்லை. அதேபோல் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் இதேநிலைதான். எல்லா கல்வி நிறுவனங் களையும் நாட்டுடைமையாக்குகிறோம் என்று அறிவிக்கின்ற கொள்கையாவது அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்.தாராளமயம் என்றால் என்ன? அரசு எந்தவிதமான பொறுப்பையும் எடுத்துக் கொள்ளாது என்பது தான் தாராளமயம். சந்தை எதை வேண்டுமானாலும் தீர் மானித்துக் கொள்ளும். அதில் அரசு தலையிடாது. அரசு மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம் போன்ற அடிப் படை வசதிகளை அளிப்பதில் தலை யிடாது என்பது தான் தாராளமயம். முத லாளிகளுக்கு தாராளம் - ஏழைகளுக்கு ஏமாற்றம் என்பதுதான் தாராளமயம். கட்டுப்பாடு என்பதே இருக்காது என்பது இருக்கக்கூடாது.
                 அப்படி இருந்தால் வசதிபடைத்தவர்கள் மேலும் வளர்வதும், ஏழை எளிய மக்கள் மேலும் நசிவதும் தடுக்கப்பட முடியாமல் போய்விடும்.யார் இந்த நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்? பல்வேறு ஏமாற்றுக் கோஷங்களை வைத்து ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் வலுப்பட வேண்டுமென்றால், தொழிலாளிகளின் எண்ணிக்கை விவசாயிகளின் எண்ணிக்கை வலுப் படுத்தப்பட வேண்டியுள்ளது. நாடாளு மன்றத்திலே நமக்கு சாதகமாக ஒரு சிறு மாற்றத்தை ஒரு சிறு திருப்பத்தை கொண்டு வர முடியும் என்றாலும் அதை யும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பது நமது நிலைப்பாடு. விளைவைப்பற்றி கவலைப்படாமல் தாராளமயக் கொள்கையை அமலாக்கி வரும் காங்கிரஸ் கட்சி. ஊழல் என்பதே தாராளமயத்தின் நேரடியான பலன், நேரடியான விளைவு. எந்த கட்டுப்பாடும் இன்றி வர்த்தகம் செய்யலாம், வியாபாரம் செய்யலாம் என்ற அரசாங்கக் கொள்கை. எதை வேண்டுமானாலும் பணத்தைக் கொண்டு சாதிக்கலாம் விலைக்கு வாங்க முடியும் என்ற கொள்கையின் விளைவு. அதை எதுவும் கட்டுப்படுத்தாது என்ற கொள்கை. அலைக்கற்றை ஊழல் -. 1,76,000 கோடி ஊழல்.
முதலாளிகள் எல்லோரும் கூட்டாக சேர்ந்து கொண்டு அரசாங்கத்துடன் கை கோர்த்து நடத்திய கொள்ளை. ஊழலைப் பொறுத்த வரையில் பாரதீய ஜனதா கட்சியை எடுத்துக் கொண்டால் அதற்கு கடுகளவும் மாற்றுக் கருத்து கிடையாது. இரண்டு கட்சிகளுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. நிலக்கரியை சூறையாடுவது, இந்தநாட்டின் கனிம வளங்களை, இயற் கை வளங்களை சூறையாடுவது என்றுஊழல் தொடர்கிறது. தமிழ்நாட்டின்கனிம வளங்களை இந்த நாட்டின் கனிம வளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்குமானால், அரசாங்கத்திற்கு மக்களுக்குத் தேவை யானவற்றை நிறைவேற்ற தேவை யான ஆதாரங்கள் இருக்கும். வங்கிகள் உட்பட அனைத்தையும் தனியார்மயப்படுத்துவோம் என்பது அர சின் நிலைப்பாடு. வக்கீல்கள் கூடவெளி நாட்டிலிருந்து வந்து வாதாடி விட்டுப் போகலாம் என்று இன்று யோசிக் கிறார்கள். அவரவருக்கு வரும் போது மட்டும் அந்தந்த பகுதியினருக்கு கோபம் வருகிறது. இது மாற்றப்பட வேண்டும். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் அல்லாமல் ஒருவரை யொருவர் சார்ந்து பலர் சேர்ந்து நடைபெறக்கூடிய ஒரு ஆட்சி அமையு மானால்தான் ஏதாவது ஒரு கட்டுப் பாட்டினை கொண்டு வர முடியும். ஒரே யடியாக முதலாளிகளுக்கு சாதகமாக இல்லாமல் சிறிதளவாவது சாதாரண மக்களுக்கு சாதகமாக, வேலையில்லாத் திண்டாட்டம் உட்பட்ட அனைத்துப் பிரச் சனைகளிலும் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இரண்டும் அல்லாத இன்னொன்றை உருவாக்க வேண்டியுள்ளது.
               அதற்கு நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் என்ன பிரச்சாரம் செய்யப் படுகிறதென்றால் பலமான நிலையான ஆட்சி வேண்டும் என்று. அது யாருக்குத் தேவை சாதாரண மக்களுக்கா?முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது இடதுசாரிகளுடன் ஆதவுடன் இருந்தது என்பதால் நினைத்த தையெல்லாம் செய்துவிட முடிய வில்லை. ஆனால் இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. கட்டுப்பாடு இருக்கும் போது நம்மால் ஏழை-எளிய மக்களுக்கு சாதகமான சில விஷயங்களை செய்ய முடியும் என்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 1 சான்று. அமெரிக் காவிற்கே நாட்டை அடமானம் வைக்கும் நிலைக்கு வந்தபோது தான் நாம் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தோம். அப்படிப் பட்ட வலுவான சக்தியாக நாம் தற்போது உருவாக வேண்டும். அதேபோல அப் போது நமக்கு அமைச்சர் பதவிகள் உட் பட பல சலுகைகளை அளிக்க முன் வந்தபோது நாம் அதனை ஏற்கவில்லை. மக் களுக்கு சாதகமான சில விஷயங்களை அமலாக்க வேண்டும் என்பதில் தான்நாம் குறியாக இருந்தோம். இது தான்இடதுசாரிகளின் நேர்மை. ஆனால் இன்று திமுகவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளது. இது கிண்ட லுக்கும் கேலிக்கும் உரியதாக மாறியிருக் கிறது. அனைத்து நாடுகளிலும் எப்போது தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வீதிக்கு வந்தார்களோ அப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தேர்தல் என்பது இப்போது வருகிறது. நாம் நமது சொந்தபலத்துடன் இருக்க வேண்டும்.
             தொடர்ச்சியாக நாம் செய்ய வேண்டியது பொது வான பிரச்சனைகளின் மீது மக்களை அணி திரட்ட வேண்டும். பிஜேபி அல்லாத காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும்.வெண்மணி திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக தொழிலாளி மக்கள் திரண்டார்கள். சொந்தக்காலில் திரண்ட பெருங்கூட்டம் என்று பத்திரிகைகள் எழுதுமளவிற்கு தொழிலாளிகள் திரண்டனர். நம்முடைய வர்க்கத்தின் நன்மைக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கான நிகழ்ச்சி என்ற அடிப்படையில் பெருந்திரளாக அணிதிரண் டனர். வர்க்கப் போரை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கான சான்று. மாற்றம் முக்கியம்- மாற்றம் சாத்தியம்- மாற்றம் அவசியம் என்று சாதாரண மக்களை நம்மால் நெருங்க முடியும்.

கருத்துகள் இல்லை: